காரைக்காலில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஜக பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான #M.தமிமுன்_அன்சாரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
“சென்டாக் கலந்தாய்வு மூலம் அனுமதி ஆணை பெற்ற மாணவர்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும்போது, முழு கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன. அரசு வழங்கும் நிதியுதவித் தொகை ரூ. 2,25,000-ஐ கழித்துக் கொண்டு, மீதித் தொகையைத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கேட்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் முழுக் கட்டணத்தையும் கட்டச் சொல்லியுள்ளன.தற்போது நடைபெற்று வரும் மருத்துவக் கலந்தாய்வின் மூலம் இடம் பெறும் மாணவர்கள், ஜூன் 30-ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆகையால், ஏற்கெனவே முதல்வர் அறிவித்தபடி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதுயுதவி தொகையை வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதனை அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பி, நிதியுதவித் தொகையை கழித்துக் கொண்டு, மீதமுள்ள தொகையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருகே உள்ள வடமட்டம், புதுத்துறை பாலம் அருகில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள சாராயக்கடைகள், நிரவி ONGC அருகிலும், திருப்பட்டினம் பஸ் நிலையம் அருகிலும் உள்ள மதுக்கடைகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இந்த கடையை அகற்றக்கோரி கடந்த ஆண்டுகளாக மக்கள் போராடி வருகிறார்கள், எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சாராயக் கடைகள் மற்றும் மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுவைக்கு ஒவ்வொரு ஆண்டும் திட்டமில்லா செலவுகளுக்காக ரூ.600 கோடி வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஒரே தொகை வழங்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத உயர்வு வழங்கப்படுகிறது. புதுவையும் மத்திய நிதிக்குழுவில் இடம்பெற்றிருந்தால் இந்த உயர்வு கிடைத்திருக்கும். அதன்படி தற்போது ரூ.1,600 கோடி கிடைத்திருக்கும். எனவே மத்திய நிதிக்குழுவில் புதுவையைச் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும், காரைக்காலில் புதிய விமானத் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தற்போது வேலையில்லாமல் இருப்பதால், புதுச்சேரி அரசு நிர்வாகம், காரைக்கால் மாவட்டத்தில் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டப் பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும், அரசு அறிவித்த ரூ.4 ஆயிரம் மழைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். நியாய விலை கடைகள் மூலமாக முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்த அந்தியோதயா அன்னயோஜனா குறைந்த விலை அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
புதுச்சேரியில் முதன்முறையாக கடந்த 1968ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. அதன் பின்னர் 38 ஆண்டுகள் கழித்து, 2006-இல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. அதன் பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்தால், எம்.எல்.ஏக்களின் மதிப்பும், மரியாதையும் குறைந்து விடுமோ என்ற அச்சம் இதற்கு பிரதான காரணமாக இருந்ததாகக் கூறப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாததால் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் நிதி புதுவைக்கு கிடைக்கவில்லை. மேலும் உழவர்கரை நகராட்சி பொலிவுறு நகர திட்டத்தில் சேருவதற்கான முயற்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என தெரிவித்திருந்தது.
அதன்படி, விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.
பிரெஞ்சு ஆட்சியிடம் இருந்து கடந்த 1.11.1954-ல் விடுதலை பெற்ற புதுச்சேரி, 1962-ல் இந்தியாவோடு இணைந்தது. புதுவை யூனியன் பிரதேசத்துக்கு தனியாக சட்டப்பேரவை, வைத்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது. தற்போது புதுவையில் 12.45 லட்சம் பேர் வசிக்கின்றனர். தற்போது மத்திய பல்கலைக்கழகம், என்ஐடி, ஜிப்மர், பட்டமேற்படிப்பு மையம், 9 மருத்துவக் கல்லூரிகள், 27 கல்லூரிகள், உள்ளன. ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் ஆண்டுதோறும் உருவாகின்றனர். ஆனால் புதுவையில் சரியான வேலைவாய்ப்பு இல்லை. மேலும் புதுவையில் பட்டதாரிகளுக்கு பாதிப்பை உருவாக்கும் வகையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதனால் புதுவையைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக புதுச்சேரிக்கு என தனியாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்க வேண்டும்
காரைக்கால் பகுதி கீழவாஞ்சூரில் இயங்கிவரும் தனியார் துறைமுகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. கடலோரப் பகுதியில் நிலக்கரியை மலைப்போல் குவித்துவைத்து ரயில், லாரிகள் மூலம் பிற பகுதிகளுக்கு அனுப்பிவைக்கின்றனர். கப்பலில் இருந்து நிலக்கரி இறக்கும்போதும், லாரிகள், ரயிலில் ஏற்றும்போதும் காற்றில் நிலக்கரி துகள்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு பரவுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால், கீழவாஞ்சூர் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய தடை விதிக்கவேண்டும்.
புதுச்சேரி காங்கிரஸ் அரசு முதல் 100 யூனிட்களுக்கான மின்கட்டணத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி என அறிவித்துள்ளது, இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு மாற்றமான செயலாகும், எனவே, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மின் கட்டணத்தை 50 சதவிகிதமாக குறைக்க வேண்டும்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனைகளை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
புதுச்சேரி காங்கிரஸ் அரசு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்த்தி தர வேண்டும்.
காரைக்கால் பகுதியில் குடும்பத்திலிருந்து பிரிந்து தனி குடித்தனம் சென்றவர்களும், வெளியூர்களிலிருந்து குடி பெயர்ந்தவர்களும் தங்களுக்கு தனி உணவு பங்கீட்டு அட்டை கோரி விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு உணவு பங்கீட்டு அட்டை வழங்குவதில் அரசு மெத்தனமாக உள்ளது, எனவே விண்ணப்பித்தவர்களுக்கு உணவு பங்கீட்டு அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்கால் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டும், தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளிலுருந்து மும்மத தலங்களுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும் காரைக்காலிலுந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 6 மணி முதல் மதியம் 12.15 மணிக்குள் இடைப்பட்ட நேரத்தில் ஒரு பாசஞ்சர் ரயில் இயக்கவும், காரைக்கலிலுருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் வழியாக கன்னியாகுமரி அல்லது திருவனந்தபுரத்திற்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவும், காலை நேரத்தில் காரைக்காலிலுருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு எக்ஸ்பிரஸ் அல்லது அதிவேக பாசஞ்சர் ரயில் இயக்கவேண்டும், காரைக்கால் முதல் பேரளம் வரை ரயில்வே பாதை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்து பல வருடங்கள் ஆகியும் இதுவரை பாதை அமைப்பதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படாமல் உள்ளது, எனவே காரைக்கால் முதல் பேரளம் வரை ரயில்வே பாதை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்,
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் உண்மை நிலையை அறிய I.A.S அதிகாரி தலைமையில் ஒரு உண்மை நிலை அறியும் குழுவை அமைத்து, அந்த உண்மை நிலை அறியும் குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும், ஏழை எளிய மக்கள் அவசரத்திற்கு பயன்பெறும் வகையில் கடந்த ஆட்சியால் நிறுத்தப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிட்டு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,
இச்சந்திப்பின்போது மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர் புதுச்சேரி அப்துல் சமது, மாவட்ட செயலாளர் நெய்னா முகம்மது, தலைமை செயற்குழு உறுப்பினர் லியாகத் அலி, மாவட்ட பொருளாளர் பாவா பஹ்ருதீன், மாவட்ட துணைச்செயலாளர்கள் அப்துல் பாசித் , பகுருதீன் அலி அகமது, டேவிட் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல் : மஜக ஊடகபிரிவு