கடந்த ஐந்து மாதங்களாக பலஸ்தீனத்தின் காஸா நகர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் அரச பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
12,660 குழந்தைகள் – சிறுவர்கள், 8,570 பெண்கள், 1049 முதியவர்கள், 340 மருத்துவ பணியாளர்கள், 152 ஐ.நா. ஊழியர்கள், 200 செய்தியாளர்கள் ஆகியோர் இதில் அடக்கம்.
உலக நாடுகளின் அழுத்தமான வேண்டுகோள்களையும், ஐக்கிய நாட்டு சபையின் தீர்மானங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் நடத்தி வரும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான பயங்கவாத யுத்தம் உலக மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவமனைகள், கல்வி கூடங்கள், அகதி முகாம்கள் என மனித உரிமைகளை பற்றியே சிந்தனைகளே இல்லாமல் நடத்திய கொடூர தாக்குதல்களால் இன்று சர்வதேச அரங்கில் இஸ்ரேல் தனித்து விடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று காஸா சிட்டியின் – அல் – ந பூசி என்ற இடத்தில் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பெறுவதற்காக நின்றிருந்த பலஸ்தீனர்கள் மீது, இஸ்ரேல் படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் 300 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த திடீர் பேரழிவால் போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் காயமடைந்தோர் துடிதுடித்து கதறுவதாக வரும் செய்திகள் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெட்கமே இல்லாமல் இஸ்ரேலிய அரசு இத்தாக்குதலை ஒப்புக் கொண்டுள்ளது.
அதன் இரக்கமற்ற கொள்கைகளையே இது அம்பலப்படுத்துகிறது.
இதற்கு உலகம் முழுக்க கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இஸ்ரேலை பாதுகாத்து வரும் அமெரிக்காவே சமீபகாலமாக இஸ்ரேலிய நடவடிக்கைகளின் மீது அதிருப்தியுற்று வரும் நிலையில், பிரான்ஸ் நாடு எடுத்து வரும் அமைதி முயற்சிகளுக்கு இஸ்ரேலால் தற்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை – முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிறகு கடந்த 10 வருடங்களில் நடந்த மிகப்பெரிய யுத்த பேரழிவை பலஸ்தீன – காஸா மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இஸ்ரேலின் தொடர் பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் எங்கும் நடைபெற்ற கண்டன பேரணிகளும், போர் எதிர்ப்பு முழக்கங்களும் நாட்கள் செல்ல, செல்ல ; மெல்ல ஒய்ந்து விட்ட நிலையில், இஸ்ரேலின் அராஜகங்கள் கூடிக் கொண்டே செல்கிறது.
இஸ்ரேலின் பயங்கரவாத – சண்டித்தனத்தை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இந்திய அரசு இஸ்ரேலுக்கு எதிரான வலுவான நிலைபாட்டை எடுத்து, பலஸ்தீனத்தில் அமைதி ஏற்படுத்துவதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சோதனையான காலகட்டங்களில் நம்மோடு நின்ற பலஸ்தீனர்களை பாதுகாக்கும் வகையில் ஐ.நா.வில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
01.03.2024.