பொங்கலுக்கு 2 ஆயிரம் வழங்குக….

தமிழக ஆளுனரை திரும்ப பெருக…

மஜக சிறப்பு நிர்வாகக்குழுவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

ஜனவரி.05.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் 04.01.2024 அன்று தஞ்சையில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது.

அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

(பகுதி 1 )

இரங்கல் தீர்மானம்

சுதந்திரப் போராளியும், மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர். சங்கரய்யா அவர்களின் மறைவுக்கும்,

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கும்,

வேளாண் விஞ்ஞானி சுவாமி நாதன் அவர்களின் மறைவுக்கும்,

குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல்சபா அவர்களின் மறைவுக்கும்

இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறது.

(பகுதி 2)

இதர தீர்மானங்கள்

1 .மழை நிவாரண பணிகள்

( i) கடந்த டிசம்பர் மாத மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நிவாரணப்பணிகளை சிறப்பாக செய்த ‘மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணக்குழுவுக்கு’ இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

(ii) மஜக-வின் சார்பில் 35 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்காக பொருளுதவிகளும், நிதியுதவிகளும் அளித்த அனைவருக்கும் இக்கூட்டம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது

2. போர் வேண்டாம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத போரும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் புவி நலன் சார்ந்த போரும் அப்பாவிகளை அழிப்பதுடன், உலக பொருளாதாரத்தையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி வருவதால் சர்வதேச அரசுகள் ஐ.நா.வின் துணையுடன் இவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இக்கூட்டம் சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறது.

3. பொங்கல் பரிசு

இவ்வாண்டு பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. ஜம்மு – காஷ்மீர் உரிமை

ஜம்மு – காஷ்மீர் மாநில மக்களின் உணர்வுகளை- உரிமைகளை மதித்து ; மீண்டும் முழுமையான மாநில தகுதியை அம்மாநிலத்திற்கு வழங்க. வேண்டும் எனவும், அப்பகுதியை இந்தியாவுடன் இணைக்கும்போது வழங்கப்பட்ட வாக்குறுதியான 370-வது சட்டப்பிரிவை மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் இக்கூட்டம் நடுவண் அரசை வலியுறுத்துகிறது

5. ஆளுனரை திரும்ப பெருக

தமிழக ஆளுநர் R.N. ரவி அவர்கள் தொடர்ந்து மாநில அரசுடன் மோதல் போக்கை தொடரும் நிலையில், அவரை நடுவண் அரசு திரும்ப பெற வேண்டும் எனவும்; மாநில அரசுடன் கலந்தாலோசித்து ஒரு புதிய ஆளுனரை நியமிக்க வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

6. உரிய நிவாரண தொகையை வழங்குக

(i) கடந்த டிசம்பர் – 2023 மழை வெள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு கேட்டிருக்கும் நிவாரணத்தொகையை முழுமையாக நடுவண் அரசு வழங்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

(ii) தமிழ்நாடு அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கியதை வரவேற்கும் நிலையில், இதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான அனைவருக்கும் அதனை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.

(iii) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜனவரி 7 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு பொதுத்தேர்வு வாரிய தேர்வுகளை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.

7. நாடாளுமன்ற சம்பவம்

(i) கடந்த டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தில் சிலர் அத்துமீறி நடந்துக்கொண்ட சம்பவத்தை கண்டிப்பதுடன், இதற்கு பாதுகாப்பு குறைபாடுகளே முக்கிய காரணம் என்றும் இக்கூட்டம் குற்றம் சாட்டுகிறது.

(ii) இவ்விஷயத்தில் பிரதமர் வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்றும், விவாதிக்க வேண்டும் என்றும் கோரியதற்காக எதிர்கட்சிகளை சேர்ந்த 143 நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திட்ட நிகழ்வு ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தடியடி என இக்கூட்டம் கண்டிக்கிறது.

8. பெட்ரோல், டீசல் விலையில் கட்டுப்பாடு தேவை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 31% குறைந்துள்ளது, இந்நிலையில் நரேந்திர மோடியின் தலைமையிலான நடுவன் அரசு இவற்றைக் குறைக்கும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தாது ஏமாற்றம் அளிக்கிறது.

பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் வரையிலும், டீசல் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் வரையிலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதாக கூறும் நிலையில் இவர்களுக்கு துணையாக பிரதமர் நரேந்திர மோடியின் நடுவன் அரசு இருப்பது ஒரு மக்கள் விரோத நடவடிக்கை என இக்கூட்டம் குற்றம் சுமத்துகிறது.

9. சொத்துவரி உயர்வை திரும்ப பெறுக

சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூபாய் 20 ஆயிரம் என தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பது சாமானியர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், இக்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

10. திருச்சி சிறை முற்றுகை

20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதையும், மஜக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் சுட்டிக்காட்டும் 36 பேர் உள்ளிட்டவர்களுக்கு நிரந்தர விடுதலைக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிப்ரவரி 10, 2024 அன்று திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக சகல தரப்பு மக்களையும் திரட்டி ஜனநாயக எழுச்சியை திரட்ட மஜக-வினர் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

11. நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சியின் அரசியல் வியூகங்களை வகுப்பது என்றும், பிப்ரவரி 15-க்கு பிறகே இப்பணிகளை தொடங்குவது என்றும், அதுவரை வழக்கமான மக்கள் பணிகளை தொடர்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

12. கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் பிரிப்பது, புதியவர்களை கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தும் வண்ணம் வாய்ப்புகளை உருவாக்குவது, நியமனங்களை அறிவிப்பது, நீண்ட கால கட்சிப்பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்குவது ஆகியவற்றை முன்னெடுக்கும் வகையில் செயல்திட்டங்களை வகுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்கண்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் J.S. ரிஃபாயி, துணைத்தலைவர் மன்னை. செல்லச்சாமி, இணை பொதுச்செயலாளர் செய்யது அகமது ஃபாருக், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் ஆகியோரும்,

மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, கோவை ஜாபர், வல்லம் அகமது கபீர், நெய்வேலி இப்ராகிம், ஈரோடு பாபு ஷாகின்ஷா ஆகியோரும் பங்கேற்றனர்.

மாநில துணைச்செயலாளர்கள் அசாருதீன், ஜாவித், துரை முகம்மது, பேரா. அப்துல் சலாம், ஓசூர் நவ்சாத், பண்டாரவடை மஹ்ரூப் உள்ளிட்டோரும்,

மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அகமது, மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தாரிக், மனித உரிமைகள் அணி செயலாளர் அறந்தாங்கி முபாரக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
04.01.2024