
தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவரும், தமிழகத்தின் அறிவுசார் சமூக செயல்பாட்டாளருமான தோழர் பெ. மணியரசன் அவர்களின் 75-ஆம் ஆண்டு #பவள_விழா நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், நீதியரசர் அரி பரந்தாமன், இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
காலை அமர்வில் தோழர் பெ.மணியரசன் அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூலான “எங்கிருந்து இங்கு” என்ற நூலை நீதியரசர் அரி பரந்தாமன் வெளியிட மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் பெற்றுகொண்டனர்.
இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…
தமிழகத்தில் கொள்கை சார்ந்த இயக்கங்களில் தமிழ் தேசிய பேரியக்கம் முக்கியமானது . ஐயா பெ. மணியரசன் அவர்கள் தமிழ் தேசியத்தை முன்னெடுத்து வருபவர். நாங்கள் மிகவும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்.
நான் MLA வாக இருந்த போது , சட்டமன்ற விடுதிக்கு வந்து உரையாடி உள்ளார். நானும் தஞ்சைக்கு வரும் போது சந்திப்பேன்.
அவர் ஆசிரியராக இருக்கும் கண்ணோட்டம் இதழை நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது ஆவலோடு வாங்கி படித்துள்ளேன்.
அதில் “தன்னுரிமை போருக்கு முன்னுரிமை கொடுப்போம்” வாசகம் முதன்மையானதாக இருக்கும்.
உலகம் எங்கும் நடைபெறும் விடுதலை போராட்டங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்ற எண்ணத்தை அது எனக்குள் வலிமைப்படுத்தியது .
அவர் நடத்தி வரும் “காவிரி உரிமை மீட்பு குழுவில்” மஜக,வும் இடம் பெற்றுள்ளது .
விவசாயிகளுக்கான பெரும் போராட்டங்களை நாங்கள் இணைந்து நடத்தியுள்ளோம்.
தஞ்சாவூரில் நாங்கள் முன்னெடுத்த ‘பச்சைக்கொடி பேரணியில் ‘ ஆயிரக்கணக்கான விவசாயிகளை அணி திரட்டினோம்.
தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியராக முற்றுகை போராட்டத்தை அவர் முன்னெடுத்த போது, 28 நாட்களும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டோம்..
மார்வாடிகள் தமிழகத்தின் வளத்தை சுரண்டுகிறார்கள். அதற்கு எதிராக களம் கண்டவர் ஐயா பெ.மா அவர்கள்.
நாம் வட இந்தியாவில் இருந்து வரும் தொழிலாளர்களை எதிர்க்கவில்லை. அவர்கள் பசி பட்டினி காரணமாக உழைப்பாளிகளாக வருகிறார்கள்.
முதலாளிகளாக வந்து தமிழகத்தை சுரண்டும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்துக்காரர்களை தான் எதிர்க்கின்றோம்.
ஏற்கனவே பாண்டிச்சேரியை இழந்து விட்டோம். அதை ஒரு தமிழ் நிலம் என்று சொல்ல முடியாத நிலை உருவாகிவிட்டது.
சென்னையும் அப்படி மாறிக் கொண்டிருக்கிறது.
சேப்பாக்கம்,ஆயிரம் விளக்கு, துறைமுகம் , போன்ற தொகுதிகளில் எந்த கூட்டணி நின்றாலும், தமிழின உணர்வாளர்கள் வெல்ல முடியாது. ஏனெனில் சென்னையில் ஒரு தொகுதிக்கு 5000, 10,000 என அவர்கள் வாக்காளர்களாக உருவாகி விட்டார்கள்.
அவர்கள் சென்னையில் கட்டும் குடியிருப்புகளில் தமிழர்களுக்கு வீடு கொடுப்பதில்லை.
25 வது மாடியில் நீச்சல் குளம் வைத்து வீடு கட்டுகிறார்கள். சென்னையில் நமது பெண்கள் தண்ணீருக்காக இடுப்பில் குடங்களை சுமக்கிறார்கள்.
இது ஒரு பெரும் அவலம். சென்னையில் சொந்த நிலத்தில் தமிழ்நாட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
நாம் ஏன் தனியாக கூட்டணி வைத்து போட்டியிட கூடாது என தமிழ் உணர்வாளர்கள் சிலர் பேசுகிறார்கள் .
ஓட்டுக்கு பணம் வாங்கும் போக்கு தமிழகத்தில் பெருகிவிட்ட பிறகு நமக்கு யாரும் ஓட்டு போடப் போவதில்லை.
நமது நடவடிக்கைகள், பேச்சுக்கள், செயல்பாடுகளுக்கு முகநூல் Like கிடைக்கிறது,. Share கிடைக்கிறது,
மேடைகளில் கைதட்டுகிறார்கள்.
ஆனால் அவை வாக்குகளாக மாறுவதில்லை.
இது ஏன் என சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் தலைவர்களை களத்தில் தேடுவதில்லை. வியர்வையை சிந்தி போராடுபவர்களை தூக்கி பிடிப்பதில்லை.
கோடாம்பாக்கத்தில் தான் தலைவர்களை தேடுகிறார்கள்.
அதிகார அவைகளில் உரிமைகளை பேசுவதற்காக தேர்தல் அரசியலில் சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டியுள்ளது.
அதற்காக இடுப்பளவு இறங்கி போகலாம் .நம்மையே மூழ்கடித்துக் கொள்ள முடியாது. அது தற்கொலை பாதை.
நமது அடிப்படைக் கொள்கை வேர்களை இழக்க முடியாதல்லவா?
எனவே மாற்றங்களை உருவாக்க அடுத்த தலைமுறையை வென்றெடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகளை சந்திக்க வேண்டும்,உரையாட வேண்டும்,அவர்களை அரசியல் படுத்த வேண்டும்.
தோழர். பெ.மா கொள்கையாளர்.
இவரது தன்வரலாறு நூலில் அதை பற்றி பார்க்க முடிகிறது.
அதில் அண்ணாவைப் பற்றிய குறிப்பிடும் ஒரு பகுதியை படித்தேன்…
” நான் திமுகவை விட்டு வெளியேற கொள்கை வழி காரணங்கள் பல இருந்தன. ஆனால் அண்ணாவின் மீது இருந்த பாசம் அவர் உயிரோடு இருந்திருந்தால், திமுகவை விட்டு வெளியேறியது இன்னும் சில ஆண்டுகள் தள்ளிப் போயிருக்குமோ என எண்ணுவதுண்டு.
எனினும் எனது கொள்கை தேடல், தமிழின விடுதலை உணர்வு, நிகராமை (சோசலிச) பிடிப்பு இரண்டும் சேர்ந்து, அண்ணா வாழ்ந்து இருந்தாலும் அவரிடம் இருந்து என்னை பிரித்திருக்கும் என்பது மட்டும் உறுதி”
இவ்வாறு அதில் எழுதியுள்ளார்.
இது அவரது நேர்மையான கொள்கை உறுதியை காட்டுகிறது.
அவர் பவள விழாவை கடந்து நூறாண்டு வாழ்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் அவரது சேவைகளை சுட்டும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
பன்மை வழி பதிப்பகத்தின் நூல் வெளியீடுகளும் இருந்தது.
வருகை தந்த பிரமுகர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் மதிய விருந்தோம்பலும் செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீர், திருச்சி கிழக்கு மாவட்ட அமைப்பு குழு தலைவர் ஜமாலுதீன், தஞ்சை மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஷேக் முகமதுஅப்துல்லா திருச்சி கிழக்கு மாவட்ட MJTS பொறுப்பாளர் அப்துல்லா, அன்வர் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் சேட் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.