
ஒன்றிய கல்வி கொள்கைக்கு மாற்றாக கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது.
இது சகல தரப்பிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்திலையில் இதன் ஒருங்கிணைப்பாளர் – முன்னாள் துணைவேந்தர். பேராசிரியர் ஜவஹர் நேசன் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதிகார மையத்தின் தலையீடுகளும், அச்சுறுத்தல்களும் தன்னை முடக்கி விட்டதாகவும், இக்குழு சனாதான சக்திகளின் நலன்களை சார்ந்ததாக உள்ளது என்றும் அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியுள்ளார்.
பல நெருக்கடிகளை கடந்து 232 பக்கங்களில் தனது இடைக்கால அறிக்கையை குழுவிடம் சமர்ப்பித்துள்ள அவர், ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கையை (NEP) சார்ந்து மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க இக்குழு முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மொத்தத்தில் அவரை வலுக்கட்டாயமாக வெளியேறும் சூழலை சில அதிகாரிகள் உருவாக்கியுள்ளது தெரிய வருகிறது.
அவரது குற்றச்சாட்டுகள் சார்பற்று பரிசீலிக்கப்பட வேண்டியவையாக உள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனையும், சமூக நீதி சிந்தனைகளையும் பாதுகாக்கும் நோக்கோடு அமைக்கப்பட்ட இக்குழு தடுமாற்றங்களை சந்தித்திருப்பது ஆழ்ந்த வேதனையை தருகிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதில் கூடுதல் கவனம் எடுத்து, மாநில கல்வி கொள்கைக்கான குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் துளியும் சிதைந்துவிடாமல் பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச்செயலாளர்.
மனித நேய ஜனநாயக கட்சி
11.05.2023