அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டில் பணி அமர்த்தப்பட்டு இன்று வரை தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 205 ஊழியர்கள் 13 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய்.1500 ஊதியத்தில் பணியில் சேர்ந்தனர்.
தற்போது ரூபாய் 3500 முதல் ரூபாய் 7000 வரை மட்டுமே ஊதியம் பெறுகின்றனர்.
தொகுப்பூதிய பணியாளர்களுக்கு வழக்கமாக இரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
13 ஆண்டுகளாக பணிநிரந்தரம் வழங்காமல் தொகுப்பூதிய பணியாளர்களை கட்டாய பணி நீக்கம் செய்ய அண்ணாமலை பல்கலைக்கழக நிதி துறை செயலாளர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 205 தொகுப்பூதிய பணியாளர்கள் பணிநிரந்தரம் கேட்டு கடந்த 13.03.2023 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 20.03.2023 அன்று என்னை சந்தித்து இது சம்பந்தமாக அரசு தலையிட்டு பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் 15 நாட்களாக போராடி எந்த நீதியும் கிடைக்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட முத்துலிங்கம் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சி செய்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் நிலை தற்கொலை செய்யும் அளவிற்கு மோசமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
தமிழக அரசு உடனே தலையிட்டு அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
போராடும் ஊழியர்கள் தற்கொலை எண்ணங்களை கைவிட்டு நம்பிக்கையோடு களமாட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.