திருமகன் ஈவேரா MLA மரணம்! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பெரியார் குடும்ப வாரிசும், அண்ணன் EVKS இளங்கோவனின் அருமை மகனுமான திருமகன் ஈவேரா (46) அவர்கள் இன்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைகிறோம்.

அவர் துடிப்பு மிக்க செயல்பாட்டாளராக; சிறந்த சட்டமன்ற உறுப்பினராக; பலரும் பாராட்டும் வகையில் உருவாகி வந்தார்.

அவ்வப்போது அலைபேசியில் உரையாடிடும் நட்பு எங்களுக்குள் இருந்தது.

கடைசியாக கடந்த அக்டோபர் மாதம், மஜக-வின் அரசியல் பயிலரங்கு தொடர்பாக இருவரும் உரையாடினோம்.

பாசங்கற்ற அவரது நட்பால், தனிப்பட்ட முறையில் இத்துயர செய்தி என்னை பேரதிர்வில் தள்ளியிருக்கிறது.

பெரியார் குடும்பத்திலிருந்து, அரசியல் களத்தில் நம்பிக்கைக்குரிய இளைஞர் ஒருவர் வந்திருக்கிறார் என பலரும் மகிழ்ச்சியுடன் பாராட்டி வந்த நிலையில், அவரது இழப்பு என்பது அவரது கட்சி, குடும்பம் ஆகியவற்றையும் கடந்து துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வாழ வேண்டிய வாலிப வயதில் அவர் விடை பெற்றிருக்கிறார்.

எளிமை, வெளிப்படைத் தன்மை, உற்சாகமான செயல்பாடுகள் கொண்ட நல்லதொரு அரசியலாளரை தமிழகம் இழந்திருக்கிறது.

அவரை இழந்து வாடும் அண்ணன் EVKS இளங்கோவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.