தியாகத்தை நினைவு கூறும் ஈதுல் அல்ஹா எனும் ஹஜ் பெருநாள் உலகமெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
நம் நாட்டில் பக்ரீத் பண்டிகை என பொதுவாக அறியப்படும் இத்திருநாள் என்பது இந்தியாவில் முன்னெடுக்கப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, இறைத்தூதர்களில் ஒருவரான நபி இப்ராகிம் (அலை) அவர்கள், தான் கண்ட கனவை இறை விருப்பம் என கருதி, தனது தவப்புதல்வரும், மற்றொரு இறைத்தூதருமான நபி இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்தார்.
அருமை தந்தையின் முடிவை மகிழ்வுடன் மகனும் ஏற்றார்.
அப்போது இறைக்கட்டளை மூலம் அந்த நரபலி தடுக்கப்பட்டு, அதற்கு பகரமாக ஒரு ஆட்டை பலியிடுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.
இறைவனுக்காக அருந்தவம் புரிந்து; தான் ஈன்றெடுத்த புதல்வரையே பலிக் கொடுக்க துணிந்ததும், மகன் அதை ஏற்றதுமான வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வைதான் தியாக திருநாள் என முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள்.
உலகின் வற்றாத; சுவை மிக்க;அதிசய நீருற்றான ஜம்ஜம் நீர் பீய்ச்சியடித்து புறப்பட்டதும் இந்நிகழ்வையொட்டிதான் என்பது வரலாறு.
இத்திருநாளில் பலியிடப்படும் கால்நடைகளின் இறைச்சி ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் வினியோகிக்கப்பட்டு அன்பும், உறவும் பராமரிக்கப்படுகிறது.
ஆய்விடும் நோக்கில் பார்த்தால், இத்திருநாள் சுற்றுச்சூழல் சமநிலையையும் ஈடுகட்டுகிறது என்பதை சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்..
பல்கிப் பெருகிடும் கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகங்கள் கோடிக்கணக்கில் இறை திருப்திக்காக பலியிடப்படும்போது, தண்ணீர் , புல், இலை- தழை தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டு, அவற்றின் அடுத்த தலைமுறை உயிரினங்களின் வாழ்வுரிமைகள் காக்கப்படுகிறது.
உலக சூழலுக்கேற்ப அவற்றின் பெருக்கம் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.
அவற்றின் தோல், எலும்பு உள்ளிட்டவைகள் மனிதர்களின் பயன்பாட்டு பொருட்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என வியக்குகிறார்கள்.
ஒரு தியாக நிகழ்வின் மூலம் இறைவன் ஏற்படுத்திய இதர நன்மைகளை எண்ணிப் பார்க்கும் போது ஆச்சரியங்கள் சிறகடிப்பதை தவிர்க்க முடியவில்லை.
தியாகம் பொங்கும் இத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகமெங்கும் உழைக்கும் மக்களின் வாழ்வு சிறக்கவும், சகிப்புத்தன்மையும், சகோதரத்துவமும் ஒங்கவும், நீதிக்காகவும், உரிமைகளுக்காகவும் தியாகப்பூர்வமாக பாடுபடுவர்களின் நோக்கங்கள் வெல்லவும் இத்தருணத்தில் பிரார்த்திப்போம்.உறுதியேற்போம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
09.07.2022