நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்பதால் திரும்ப பெறுக! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

இந்திய ராணுவத்தின் முப்படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் #அக்னி_பாத் திட்டம் கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
நான்காண்டு கால பணிக்காக மட்டும் முப்படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
வட மாநிலங்களில் கலவரங்களும், ரயில் எரிப்புகளும் நடைபெறுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் பரவுவதாக தகவல்கள் வருகின்றன.
பல இடங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
17 வயது நிரம்பிய 21 வயதுக்குட்பட்ட இரு பாலர்களும் இத்திட்டத்தில் இணையலாம் என்றும், 4 ஆண்டுகள் ராணுவ சேவையாற்றிய பிறகு இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இறுதியாக அவர்களுக்கு 12 லட்சம் வரையிலான நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கூலிக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை விட மோசமானதாக உள்ளது.
மேலும், இது மதிப்புமிக்க இந்திய ராணுவத்தின் கண்ணியத்தை பாழ்படுத்தும் செயலாகவும் இருக்கிறது.
இந்திய ராணுவத்தில் அதிகரித்து வரும் ராணுவ செலவுகளை கட்டுப்படுத்துவதும், ஒய்வுதிய செலவுகளை குறைப்பதும்தான் இதற்கு காரணம் என்று இதற்கு விளக்கமளிக்கப்படுகிறது.
ஆனால் இதில் சாதாரண நிலையில் 15 ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெறும் ராணுவ வீரர்களின் நலன்கள் பலி கொடுக்கப்படுகின்றன என்பது தான் உண்மையாகும்
இவற்றை கடந்து இன்னொரு கோணத்திலும் இத்திட்டம் பலனற்றதாகவே தெரிகிறது.
அதாவது, ராணுவத்தின் சகல நுட்பங்களையும் கற்று முழுமை பெறுவதற்கு குறைந்தது 6 முதல் 8 ஆண்டுகள் ஆகும் என பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், இந்த 4 ஆண்டு கால பணி என்பது முழுமையற்றது என்பதும், பயனற்றது என்பதும் தெரிய வருகிறது.
இதில் இணைபவர்களின் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே பணி நிரந்தர வாய்ப்புள்ளது எனும் போது, மீதி 75 சதவீதம் பேரின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்வியும் எழுகிறது.
இவர்களில் பலர் சந்தர்ப்ப சூழலில் தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களால் பயன்படுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.
முக்கியமாக காவி வலதுசாரி தீவிரவாத அமைப்புகளின் சூழ்ச்சிக்கு பலியாகும் ஆபத்தும் இருக்கிறது.
ராணுவத்தை காவி மயமாக்க வேண்டும் என்ற முழக்கம் சமீப காலமாக உரக்க கேட்டு வரும் நிலையில், நமது ஐயமும், அச்சமும் வலிமை பெறுகிறது.
மேலும் படையில் சேரும் காலத்தில், அவர்களின் உயர்கல்வி வாய்ப்பு இயல்பாகவே இழக்கப்படும் நிலையில், படையில் பணி நிரந்தரமற்ற நிலையும் உருவாவது பெரும் சமூக சீரழிவையே உருவாக்கும்.
இதில் OBC மற்றும் பட்டியலினங்களை சேர்ந்தவர்களே பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
இத்திட்டம் எல்லா வகையிலும் நாட்டின் நலன்களுக்கு எதிராகவே உள்ளது என்பது மட்டுமல்ல, ஆபத்தானதும் ஆகும்.
எனவே சமூகநீதி, நாட்டின் எதிர்கால நலன், பொது அமைதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
17.06.2022