
பிரதமரின் தொகுதியான வாரணாசியில் உள்ள கியான் வாபி பள்ளிவாசல் நான்கு நூற்றாண்டுகளை கடந்த பழமையானது.
நீண்ட காலமாக சங்பரிவார் சக்திகள் இதில் சர்ச்சைகளை ஏற்படுத்தி இதை கைப்பற்றிட திட்டமிட்டு வருவது அவர்களின் வஞ்சக திட்டங்களில் ஒன்றாகும்.
இது தொடர்பான ஒரு வழக்கில் வாரணாசி நீதிமன்றம் கியான் வாபி பள்ளிவாசலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இது 1991- வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டப் பாதுகாப்பை மீறும் தீர்ப்பாகும்.
நாட்டின் முக்கிய விவகாரங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஜனநாயக மரபுகளுக்கும், சட்டத்தின் அடித்தளங்களுக்கும் எதிராக இருப்பதாக சமீப காலமாக குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில், இதனை கவலையோடு அணுக வேண்டியுள்ளது.
சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், அது ஃபாஸிஸ சக்திகளுக்கு துணைப் போய் விடக் கூடாது என்பதும் அனைவரின் அக்கறையாக உள்ளது.
இதனிடையே வதந்திகளும் திட்டமிட்டு தூண்டப்படுவது கவலையளிக்கிறது.
தொழுகைக்கு முன்பாக தண்ணீரை கொண்டு தூய்மை செய்யும் தடாகத்தில் சிவலிங்கம் இருப்பதாக ஒரு பொய் செய்தியை பரப்புவது, ஏதோ ஒரு மாபெரும் சதித் திட்டம் இருப்பதையே உணர்த்துகிறது.
தெற்காசிய நாடுகளில் உள்ள பழமையான பள்ளிவாசல்களில்; இது போன்ற தண்ணீர் தடாகங்களின் நடுப்பகுதியில் அழகின் நிமித்தமாக நீறுற்றுகள் அல்லது பூந்தொட்டிகள் இருப்பதை பார்க்க முடியும்.
அதை சிவலிங்கம் என பொய்யாக வதந்தி பரப்பி, மக்களை அச்சுறுத்துவது அநாகரிக செயலாகும்.
2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, வட இந்தியாவில் வன்முறைகளை உருவாக்கி, அதன் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஒரு நாடகம் முன்னோட்டம் பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்ச்சிக்கு மக்கள் பலியாகி விடாமல், ஜனநாயக வழியில் நீதியை காக்க அணி திரள வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
17.05.2022