You are here

அமீரக அதிபர் ஷேக் கஃலிபா மரணம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்.!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி அரபு வளைகுடாவையும் கடந்து உலகம் எங்கும் துயரத்தோடு நோக்கப்படுகிறது.

அவர் 2004, நவம்பர் 3 அன்று அமீரகத்தின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தை பொருளாதார வல்லரசாக மாற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டார்.

1971-ஆம் ஆண்டு 7 நாடுகளை கொண்ட கூட்டரசாக ஐக்கிய அரபு அமீரகத்தை அவரது தந்தை மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் கட்டமைத்தார்.

“மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி” என்ற முழக்கத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படுத்திய அவரது தந்தையின் வழியில், கூட்டாட்சித் தத்துவத்தை சிறப்பாக செயல்படுத்தினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபராகவும், அபுதாபியின் 16-வது ஆட்சியாளராகவும் செயலாற்றிய அவர் அமீரகத்தை உலகின் கவனத்தை ஈர்த்த கூட்டரசாக உருவாக்கி காட்டினார்.

அமீரக மக்களை நவீன சிந்தனையின் பக்கம் வழி நடத்தியதோடு, சகிப்புத்தன்மை மிக்க தேசமாக அமீரகத்தை கட்டமைத்தார்.

ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க மக்களின் விரும்பத்தகுந்த தேசமாக அமீரகத்தை மாற்றியதோடு தொழில் வளமிக்க பூமியாகவும் உருவாக்கினார். உலக முதலீட்டாளர்களுக்கு சுதந்திரத்தை வழங்கினார்.

அதுபோல் உலகத் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், உரிமைகளோடும் பணி புரியும் வகையில் சட்ட பாதுகாப்பை வழங்கியதில் அவரது பங்கு அளப்பரியது.

இந்தியாவோடு மிகுந்த நேசம் பாராட்டிய அவர், இந்தியர்களுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியதை மறக்கமுடியாது.

குறிப்பாக தமிழர்கள் மீதும், மலையாளிகள் மீதும் அவர் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்.

அவரது மரணம் அமீரக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதை புரிய முடிகிறது.

அவரை இழந்து வாடும் அமீரக மக்களுக்கு எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அமீரக மக்களின் துயரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கிறது.

இவண்;

மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
13.05.2022

Top