ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியேற்போம்!மஜக_பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி

சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டில் நம் நாட்டின் 73 வது குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம்.

சுதந்திரம் பெற்ற பிறகு, நம்மை நாமே ஆளும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வல்லுனர் குழு தயாரித்த அரசியல் சாசன சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஜனவரி 26 தினமே நமது நாட்டின் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

போராடி பெற்ற நமது சுதந்திரத்தின் லட்சியங்கள் இன்று அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள காலகட்டத்தில் பல சவால்களின் வழியே குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்.

கொரோனா பெருந்தொற்றால் 84 சதவீத இந்தியர்களின் வருவாய் வீழ்ச்சியடைந்து, 4 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மறுபுறம் பெரும் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 102 விருந்து 142 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் 45 சதவீத சொத்துக்கள் 10 பெரு முதலாளிகளிடம் அடைபட்டுக்கிடக்கிறது.

எளிய மக்களை பற்றி கவலைப்படாத பொருளாதாரக் கொள்கைகள் பெரும் சமூக இடைவெளியை நம் நாட்டில் உருவாக்கியிருக்கிறது.

குடியரசு இந்தியாவின் இன்றைய நிலை உழைக்கும் மக்களுக்கு நேர் எதிராக இருக்கிறது.

மறுபுறம் இந்திய அரசியலை கரையான்கள் மெல்ல அரித்து வருவதும் கவலையளிக்கிறது.

மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல், அமைதியை சீரழிக்கும் கும்பல் தாக்குதல்கள், சமூக நீதிக்கு எதிரான திட்டமிட்ட சதிகள் , சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முயலும் பெரும்பான்மை வாதம் என நாடு இக்கட்டான நிலையில் துயருற்றிருக்கிறது.

அன்பின் வழியாகவும், பரந்த மனநிலையுடன் கூடிய அணுகுமுறைகளாலும் நம்பிக்கையிழந்து வரும் மக்களுக்கு தைரியம் ஊட்டக் கூடிய மனிதநேய கடமைகளை ஆற்ற அனைவரும் தயாராக வேண்டிய காலம் இது.

மதிப்பு மிக்க நமது மக்களாட்சி தத்துவங்களை எழுச்சி பெற செய்ய தயாராக வேண்டும்.

தேசத்தின் பன்முகத் தன்மையை நிலை நாட்டி ; பொருளாதார சம நீதியை வளர்த்தெடுத்து ; ஜனநாயகத்தை பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
25.01.2022