கல்வி சேவகர் கேப்டன் அமீர் அலி மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

கல்வி நிலையங்களை உருவாக்குவதன் மூலமே சமூக மேம்பாட்டை அடைய முடியும் என்பதில் பேரார்வம் கொண்டு அதன் வழியே இறுதி மூச்சு வரை செயலாற்றி வந்த கேப்டன் N. A. அமீர் அலி அவர்களின் மரணச் செய்தி ஆழ்ந்த வேதனையை தருகிறது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புகழ் பெற்ற ஜாகீர் உசேன் கல்லூரியை நிறுவியதில் அவருக்கு பெரும் பங்குண்டு.

இன்று அம்மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கல்வியாளர்களாக, அரசு அதிகாரிகளாக, வணிகர்களாக மற்றும் சமூகத்தின் பல்துறை செயல்பாட்டாளர்களாக உருவாக அக் கல்லூரி தாய் மடியாக இருக்கிறது.

சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியராகவும், விடுதியின் வார்டனாகவும் பணியாற்றிய அவர், தமிழகமெங்கும் முஸ்லிம்கள் வாழும் இடங்களில் கல்வி நிலையங்கள் உருவாகிட ஆர்வத்துடன் ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

இப்பணிகளுக்காக விருப்பு வெறுப்பு இன்றி அனைவரோடும் இணைந்து பணியாற்றினார்.

நான் உணர்வு வார இதழில் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் ‘கல்விச்சாலை ‘ என்ற தொடரை 55 வாரங்கள் எழுதி வந்தேன்.

அப்போது அத்தொடர் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அவர் அதை படித்து விட்டு பாராட்டுவார். ஆலோசனைகளையும் கூறுவார். இப்பணியில் பிறரை உற்சாகமூட்டும் பண்பாளராக திகழ்ந்தார்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்திலும் தலைவராக பணியாற்றி தமிழுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய வளமான பங்களிப்புகள் புதுப்பிக்கப்படவும், எண்ணற்ற புதிய எழுத்தாளர்கள் அறிமுகமாகவும் துணை நின்றார்.

இன்று ஒரு அறிவுஜீவியை, பண்புள்ள கல்வி சேவகரை சமூகம் இழந்துள்ளது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சக சமூக சேவகர்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது மறு உலக வாழ்வு சிறக்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
17.01.2022