ஜனவரி.08 கோவை பிரகடனம்! சிறைவாசிகளின் கண்ணீரை மொழிப்பெயர்த்த முற்றுகை போராட்டம்!

……………
நெருக்கடிகளை மீறி
……………

சமகால தமிழக அரசியலில் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையை மக்கள் மயப்படுத்தி அரசியலை தன்னை சுற்றி மையப்படுத்தியிருக்கிறது மனிதநேய ஜனநாயக கட்சி.

கடந்த ஜனவரி 8 அன்று கோவை மாநகரம் வழக்கமான உற்சாகத்தோடு கண் விழித்தப்போது, வழக்கத்துக்கு மாறாக அணி அணியாய் வாகனங்களில் மஜகவினர் வருகை தந்த வண்ணமிருந்தனர்.

ஜனவரி 5 முதல் ஒமிக்ரான் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதாகவும், அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவிப்பு செய்ததால், ஜனவரி 8 கோவை சிறை முற்றுகை போராட்டம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

தொலைக்காட்சி செய்திகளும் மக்களை மிரள செய்தது.

எனினும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், முகக் கவசங்களோடு, நெருக்கடிகளை கடந்து நீதிக்காக புறப்படுவோம் என்ற உறுதியோடு மனிதநேய சொந்தங்கள் கை உயர்த்தி களம் புறப்பட தயாரானார்கள்.

அந்த உறுதியை கோவை மத்திய சிறைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடை அருகே பார்க்க முடிந்தது.

முதல் நாள் இரவு 11.00 மணிக்கு ஏற்கனவே திட்டமிட்டடிருந்த இடத்தை அனுமதிக்க முடியாது என திடிரென காவல்துறை கூறியதால் போராட்ட குழு டென்ஷன் ஆனது.

பிறகு புதிய இடம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்டது.

காலையில் அவசர அவசரமாக அங்கு லாரி, ஒன்றில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டது.
…………….
கட்டற்ற எழுச்சி
…………….

11.00 மணி அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த அகன்ற ; நீண்ட வீதியை நோக்கி முழக்கங்களை எழுப்பியபடியே வரத்தொடங்கினர்.

எல்லோரும் முகக் கவசங்களோடு முழங்கியபடி அணிவகுத்தனர்.

முகக் கவசங்களை மீறி எல்லோர் முகங்களிலும் உற்சாகம்.

கொரோனா மூன்றாவது அலையின் நெருக்கடி, நிகழ்ச்சி ரத்து என்ற வதந்திகள், வாகனங்கள் கிடைக்காத சூழல், வாகனங்கள் கிடைத்தாலும் ஒட்டுனர்கள் வரத் தயங்கியது என பல நெருக்கடிகளை தாண்டி, தடையை மீறும் முற்றுகை போராட்டத்திற்கு வந்து சேர்ந்த வீரம் செறிந்த பெருமிதம் அனைவர் முகங்களிலும் தெரிந்தது.

…………
உரத்த முழக்கம்
………….
மதியம் 12.00 மணிக்கு துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள், இந்த முற்றுகை நிகழ்வுக்கு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையேற்பார் என முன்மொழிய, மாநில துணைச் செயலாளர் கோவை அப்துல் பஷீர், அவர்கள் வழி மொழிந்தார்.

பிறகு நிகழ்ச்சி நிரலை துணைப் பொதுச் செயலாளரும், போராட்ட குழு துணைத் தலைவருமான சுல்தான் அமீர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

துணைப் பொதுச் செயலாளரும், போராட்ட குழு தலைவருமான செய்யது அகமது பாரூக் அவர்கள் வரவேற்புரையாற்ற, கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் தொடக்க உரையாற்றினார்.

அவர் முல்லா கமிஷன் பரிந்துரையை எடுத்துக் கூறி போராட்டத்தின் நோக்கத்தை தெளிவாக விளக்கிப் பேசினார்.

பிறகு மாணவர் இந்தியா சார்பில் தாளங்களுடன் கூடிய பரப்புரை முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில் மாணவர் இந்தியா நிர்வாகிகள் ஜாவித், பஷீர், இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், உள்ளிட்டோர் கூடி முழக்கமிட கூட்டம் ஆர்ப்பரித்தது.

தொடர்ந்து இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, அவர்கள் முற்றுகை போராட்ட முழக்கங்களை உணர்வெழுச்சியுடன் முழங்க அனைவரும் அதை எதிரொலித்தனர். அப்போது சிறைவாசி குடும்பங்களை சேர்ந்த பெண்களின் கண்கள் கலங்கியதை பார்க்க முடிந்தது.

பிறகு மெரினா போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜலீல் அவர்கள் பேசும் போது, இது உணர்வுப்பூர்வமாக கூடிய கூட்டம் என்றும், இதில் தானும், சமூக ஆர்வலர் தேவராஜூம், பங்கெடுப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

கேரளாவிலிருந்து வருகை தந்த பிரபல மலையாள பத்திரிக்கையாளரான தோழர் அனூப் அவர்கள், நீதியை கேட்க மொழி என்ன தடையா? நீதி எல்லோருக்கும் ஒன்று தானே? என மலையாளத்தில் பேச, கூட்டத்தினர் அதை வரவேற்று ஆமோதித்தனர்.

பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி கோவை மாவட்ட பொறுப்பாளர் சுசி.கலையரசன் முழக்கங்களை எழுப்பினார்.

திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் கொரோனா நெருக்கடிகளால் நிகழ்வுக்கு வரமுடியாமல் போனதால் அவர் சார்பாக அதன் மாவட்டத் தலைவர் நேரு தாய் அவர்கள் பங்கேற்று பேசினார்.

அது போல பழ.நெடுமாறன் ஐயாவின் உடல்நலன் கருதி அவர் வருகையை தவிர்க்குமாறு அவரிடமே பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கூறியதால், அவர் தனது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விடுதலை தமிழ் புலிகள் தலைவர் குடந்தை அரசன் அவர்கள் பேசும் போது இக்கோரிக்கையின் நியாயங்களை சுட்டிக்காட்டினர்.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், சங்பரிவார் ஆதரவு கைதிகளுக்கும் முன் விடுதலை கேட்டுத்தான் இந்த போராட்டம் நடக்கிறது என்றார்.

இடையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து போராட்டத்தின் நோக்கத்தை விளக்கிவிட்டு மீண்டும் மேடையேறினார்.

வழக்கறிஞரும், இதுபோன்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும் மனித உரிமையாளருமான பாவானி. மோகன், அவர்கள் மிக நேர்த்தியாக புள்ளி விபரங்களை அள்ளி வீசி திரண்டிருந்த மக்களை மாணவர்களாக மாற்றினார்.

தூக்கு தண்டனை பெற்று பிறகு பொதுமன்னிப்பின் கீழ் பின்னர் விடுதலையான தோழர். தியாகு பேசும் போது, தமிழக அரசு 161-வது சட்டப் பிரிவை பயன்படுத்தும் வாய்ப்புகளை சுட்டிக்காட்டி வலியுறுத்தி பேசினார்.

……………
வாகன நெரிசல்
…………….

நிகழ்ச்சி நிரல்படி தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்க, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரு மணிக்கு பிறகே அந்த பகுதிக்குள் வருகை தந்தனர்.

மறுபுறம் போராட்டத்திற்கு வந்த வாகனங்களால் கோவை மாநகரம் நெரிசலில் தவிப்பதாக செய்தி வர, போராட்ட களத்திற்கு வருவதில் பலருக்கும் சிரமம் ஏற்பட்டது.

காவல்துறை அதிக தடுப்புகளை போட்டு, வாகனங்களை மாற்று பாதைகளில் சுற்றி விடுவதாகவும் புகார் எழும்பியது.

பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது , துணைப் பொதுச் செயலாளர்கள் செய்யது அகமது பாரூக், நாச்சிக்குளம். தாஜ்தீன் ஆகியோர் நேரில் சென்று அதிகாரிகளிடம் பேசி அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

பிறகு இளைஞர் அணியினர் ‘வாக்கி டாக்கி’ பேசிகள் மூலம் அவற்றை ஒழுங்குப் படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

அடுத்தடுத்து கூட்டம் வருகை தந்து ; நிறைந்து வழிய அந்த வளாகம் திணறியது.

முகக் கவசங்கள் அணியாதவர்கள் முகக் கவசங்களை அணியுமாறும், சமூக இடைவெளிகளை பின்பற்றுமாறு அறிவிப்பு செய்யப்பட்டுக் கொண்டேயிருந்தது.

மருத்துவ சேவை அணியின் மாநில நிர்வாகிகள் அப்துர் ரஹ்மான், மஹ்ரூப், இப்ராகிம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் மஜக ஆம்புலன்ஸ்களும், மருத்துவ குழுவும் தயார் நிலையில் இருந்தது. கிரிமி நாசினி ஸ்பேரையும் பயன்படுத்தப்பட்டது.

…………..
கள ஒழுங்கு
…………..
மாநில துணைச்செயலாளர்கள் நாகை முபாரக், காயல் சாகுல், நெய்வேலி இப்ராகிம் , பாபு ஷாஹின்ஷா, பல்லாவரம் ஷஃபி, அப்சர் சையது, மீனவரணி செயலாளர் பார்த்திபன், IKP மாநில செயலாளர் கோவை இஷாக், விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குனிசை ஷாஜஹான், மேட்டுப்பாளையம் காஜாமைதீன், முஹம்மது நிவாஸ், திருப்பூர் இக்பால், சிவகங்கை அபுதாஹீர், போன்ற நிர்வாகிகள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தியவாறு இருந்தனர்.

இப்போராட்டத்தில் பெண்கள் வருகை அதிகமாக இருந்ததால் அவர்களுக்கான பாதுகாப்பு பணிகளில் மஜக மகளிர் அணியினர் சோர்வில்லாமல் தொடர்ந்து ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் அமர்வதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பணிகளிலும் MJTS மாநில செயலாளர் ஜாபர் அலி தலைமையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ், பொருளாளர் TMS.அப்பாஸ், துணை செயலாளர்கள் ATR பத்துருதீன், சிங்கை சுலைமான், ஹனீப் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகளும், மாநகர பொறுப்பாளர்களும் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

……………
கோவை பிரகடனம்
…………….

தொடர்ந்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார்.

காந்தியடிகள் சிறைச்சாலைகள் பள்ளிக்கூடங்களாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில் அதை மூடிட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி சிறைவாசிகளின் வாழ்வுரிமைகளை வலியுறுத்தி பேசினார்.

மேலும் ‘ஷாகின் பாக்’ காத்திருப்பு போராட்டங்களை நினைவூட்டி எச்சரிக்கை செய்யவும் தவறவில்லை.

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அவர்கள் பேசும் போது கடந்த சட்டமன்றத்தில் அவரும், பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், கருணாசும் இக்கோரிக்கையை பல முறை வலியுறுத்தி பேசியதை நினைவு கூர்ந்து, நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சாத்தியப்படுத்த வேண்டும் என்றார்.

இம்மக்களின் வாக்குகள்தான் நீங்கள் ஆட்சிக்கு வர முக்கிய காரணம் என்பதையும் சுட்டிக்காட்டி, இது அனைத்து தரப்பு சிறைவாசிகளுக்கான போராட்டமாக உள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

மதியம் இரண்டு மணியை கடந்த நிலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் “கோவை பிரகடனத்தை” வாசித்தார். அப்போது கைத்தட்டல்கள் அதிர்ந்தது.

இந்த அதிர்வுக்கு காரணம் அதில் ‘100 நாட்கள் காத்திருக்கிறோம்’ என்ற அறிவிப்பு செய்திதான்!

பிறகு துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, அவர்கள் மீண்டும் முழக்கமிட்டு மக்களை உசுப்ப, பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் நிறைவுரையாற்ற வந்தார்.
……….
ஆளுக்கொரு நீதியா?
…………

காவல்துறையினரை சுட்டுக்கொன்ற பூலான் தேவிக்கு பொதுமன்னிப்பில் முன் விடுதலை கொடுக்கப்பட்டது. பிறகு அவர் நாடாளுமன்றத்திற்கு MP யாக தேர்வு செய்யப்பட்டாரே ? அது எப்படி? என பல கேள்விகளை எழுப்பி, ஆளுக்கொரு நீதியா? என்றார்.

தங்கள் போராட்டம் என்பது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள், 4 சங்பரிவார கைதிகள், வீரப்பன் வழக்கு தொடர்புடையவர்கள், 38 முஸ்லிம் கைதிகள், தென் மாவட்ட சாதிக் கலவர வழக்குகளில் தண்டனை பெறுபவர்கள் என அனைவருக்குமானது என்றவர், நாங்கள் இப்போராட்டத்தின் மூலம் சிறைவாசிகளின் கண்ணீரை மொழி பெயர்த்திருக்கிறோம் என்றார் உருக்கமாக!

இரண்டரை மணி நேர அனல் பறந்த உரைகளின் நிறைவாக கோவை மாநகர மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

அதுவரை நிகழ்ச்சியை மஜக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில நிர்வாகிகள் ஹாரிஸ், தாரிக், சம்சுதீன், ஆகியோர் தலைமையிலான குழு துல்லியமாக வலைதளங்கள் வழியே நேரலை செய்ததால் உலகமெங்கும் இப்போராட்டம் உயிர் துடிப்போடு சென்று சேர்ந்தது.

பிறகு 100-வது நாளில் சூளுரைப்போம் என்ற ஆவேச உணர்வுகளோடு மனிதநேய சொந்தங்களும், உணர்வாளர்களும், வருகை தந்திருந்த பொது மக்களும் தங்கள் வாகனங்களை நோக்கி புறப்பட்டனர்.

இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்கி அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், இரவுக்குள் ஊர் போய் சேர வேண்டும் என்ற நிர்பந்தம் அவர்களுக்கு!

………..
கைதும், விடுதலையும்
………..

இதனிடையே ஆயிரக்கணக்கான மக்களை கைது செய்ய இயலாது என்பதால் தலைவர்களை மட்டும் கைது செய்கிறோம் என காவல்துறை கூறியது.

அப்போது தஞ்சையிலிருந்து வருகை தந்த சமூக நீதி ஆர்வலரான விசிறி சாமியார், அவர்கள் நானும் கைதாவேன் என முழங்க; பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, திருமுருகன் காந்தி, குடந்தை அரசன் , மற்றும் மஜக தலைவர்களும் கைதாகி மாலை விடுதலை ஆகினர்.

மனித உரிமைகளை பாதுகாக்கவும், குரலற்ற மக்களின் குரலை வெளிப்படுத்தவும் , சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக முதல் போராட்ட அறிவிப்பை டிசம்பர் 7, அன்று தஞ்சையில் மஜக வெளியிட்டது.

பல நெருக்கடிகளை கடந்து கோவையில் பல்லாயிரக்கணக்கானோரோடு களம் கண்டு அரசின் கவனத்தை இப்போராட்டம் ஈர்த்திருக்கிறது.

………….
ஒயாத அலைகள்
…………..

இவ்வளவு கூட்டம் திரளுமென யாரும் எதிர்பார்க்கவில்லை .

கொரோனா மூன்றாவது அலையின் திடிர் நெருக்கடி மட்டும் இல்லாதிருந்தால், ஏற்பாடு செய்தபடி இன்னொரு மடங்கு கூடுதலாக கூட்டம் வந்திருக்கும் என உளவுத் துறை அதிகாரிகளே கூறியது குறிப்பிடத்தக்கது.

மிகவும் கஸ்டப்பட்டு; நன்கொடைகள் திரட்டி ; நெருக்கடிகளை கடந்து தமிழக அளவில் மக்கள் திரண்டது ஒரு பெரும் எழுச்சியே!

ஆம். அலைகடல் ஒயாது! நீதிக்கான போராட்டமும் ஒயாது!

நூறாவது நாளுக்காக காத்திருப்போம்.!

களத் தொகுப்பு:
…….

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
08.01.2022