தஞ்சை கிரின் சிட்டி வளாகத்தில் உள்ள அல்குர்ஆன் – ராஹத் ஜூம்மா பள்ளியில் மீலாது விழாவையொட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைப்பெற்றது.
இதில் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசினார்.
ரபியுல் அவ்வல் என்றால் முதல் வசந்தம் என்று அர்த்தமாகும்.
இந்த உலகில் இறைவனின் இறுதி தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இம்மாதத்தில் பிறந்ததால் , அவர்களின் சிறப்புகளை முன்னிறுத்தி அதிகமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
முன்பு போர்கள் நடைபெறும் நாடுகள் மற்றும் இனங்களுக்கிடையே சமாதான ஒப்பந்தங்களும் நடைபெற்றிருக்கின்றன என்றவர், கைதிகள் விடுதலையும் அதில் ஒன்று என குறிப்பிட்டர் .
இதன் மூலம் சமகால ஆட்சியாளர்களின் கவனத்திற்கு ஆயுள் கைதிகள் முன் விடுதலை குறித்து அவர் நினைவூட்டவும் தவறவில்லை.
இந்நிகழ்வில் அவர் மேலும் பேசியதாவது…
திருக்குர்ஆனை கற்கும் மாணவர்களை நாம் மிகவும் மதிக்கிறோம். சமூகத்தை நெறிப்படுத்த அவர்களின் சேவைகள் தேவைப்படுகிறது.
அவர்கள் பன்முக திறன் கொண்டவர்களாக வார்த்தெடுக்கப்பட வேண்டும்.
அவர்களை மனப்பாட இயந்திரங்கள் போல உருவாக்கி விடும் தவறுகள் சில இடங்களில் நடக்கின்றன.
அதை மாற்றியமைத்து அவர்கள் குர்ஆனை ஆய்வு செய்திடும் ஆராய்ச்சி மாணவர்களாக உருவாக்கிட சங்கைக் குரிய மார்க்க அறிஞர்கள் திட்டமிட வேண்டும்.
அவர்களின் அரிய சேவைகளை உலகம் எதிர்நோக்குகிறது என்பதை மறந்து விடக் கூடாது.
காலத்தின் சவால்களுக்கு தீர்வுகளை தரக்கூடிய சிந்தனையாளர்களாக அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
குர்ஆனில் நபி யூசுப் அவர்கள் குறித்த அத்தியாயம் இருக்கிறது.
பைபிளில் அது ஜோசப் என குறிப்பிடப்படுகிறது.
குர்ஆனின் அந்த அத்தியாயத்தில் யூசுப் நபியின் வாழ்வு அழகான முன்னுதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது.
யூசுப் நபி அவர்கள் எகிப்தில் உணவுத்துறை அமைச்சராக இருக்கிறார்.
தூரதேசத்தில் உள்ள தன் தந்தை கண் பார்வையிழந்த செய்தியை ,தன் சகோதரர்கள் மூலம் அறிகிறார்.
அவர்களிடம் அவர், தன் வியர்வை துளிகள் நனைந்த சட்டையை கொடுத்தனுப்பி, தன் தந்தையின் முகத்தில் அதை போட செய்கிறார்.
ஊருக்கு வந்ததும் அவரின் சகோதரர்கள் அவ்வாறே செய்கிறார்கள். தந்தைக்கு மெல்ல பார்வை திரும்புகிறது.
இது குர்ஆன் கூறும் செய்தி. குர்ஆன் இறைநம்பிக்கையுடன் அறிவியலையும் போதிக்கிறது. அது சத்தியத்தை மட்டுமே பேசுகிறது.
குர்ஆன் கூறும் இச்சம்பவம் குறித்து ஆழமாக படித்த எகிப்தை சேர்ந்த ஒரு மருத்துவர் நீண்ட ஆய்வில் ஈடுபடுகிறார்.
அந்த ஆய்வின் முடிவில் கண்புரை நோய்க்கு வியர்வை துளிகளில் மருந்து இருப்பதாக கண்டறிந்து, அதை வியப்போடு வெளியிடுகிறார்.
குர்ஆன் வசனம் குறித்த ஒரு ஆய்வில் எவ்வளவு பெரிய உண்மை வெளிவந்திருக்கிறது என்பது தெரிகிறதா?
இப்படி பல விஷயங்களை சொல்லலாம்.
குர்ஆனின் ஒவ்வொரு கருத்துகளிலும் அறிவுக் கருவூலங்கள் புதைந்து கிடக்கிறது.
அதை வெறுமனே வாசித்து கடந்து போகாமல், அதன் கருத்துகள் குறித்து சிந்தித்து, அது தொடர்பான ஆய்வுகளை வெளியிட வேண்டும்.
அது போல, குர்ஆன் இணக்கத்தை போதிக்கிறது.இணக்கத்தை உருவாக்கும் மனிதர்களை சிறந்தவர்கள் என போற்றுகிறது.
பல இன மக்கள் கூடி வாழும் பன்முக சமூகத்தில், மார்க்கத்தை இழக்காமல்; ஒற்றுமையாக ; எல்லோரோடும் வாழ்வது எப்படி ?என்பது குறித்து மார்க்க அறிஞர்கள் வழிகாட்ட வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கும் வழிகாட்டியதோடு, அவ்வாறு வாழ்ந்தும் பாடம் நடத்தியிருக்கிறார்கள்.
இடம், சூழல், காலம் , நெருக்கடி இவைகளை அறிந்து வாழ்வதும்,இயங்குவதும், சிந்திப்பதும் முக்கியமாகும்.
ஜித்தா, காபூல், கோலாலம்பூரில் வாழ்ந்துக் கொண்டு பேசுவது வேறு. அது எளிது.
சிறுபான்மையினராக இருந்துக் கொண்டு, இந்தியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் ,அமெரிக்கா, ஆஸ்திரெலியா, கனடா நாடுகளில் பன்முக சூழலில் நெறி தவறாமல், இணக்கமாக வாழ்வது என்பது வேறு.
அணுகுமுறைகளில் இறைக்கொள்கையை இழக்காமல் , நெகிழ்வுத் தன்மைகளோடு பயணிப்பது அவசியம் .இந்த புரிதல் முக்கியமானது.
ஒரு இறை நம்பிக்கையாளர் என்பவர் எங்கிருந்தாலும் நீதியை நிலை நாட்ட வேண்டும். அன்பையும், அமைதியையும் விதைக்க வேண்டும்.
எந்த சூழலிலும் சமூக நல்லிணக்கம், சமாதானம் , சகோதரத்துவம் வளர்க்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
அது இன்றியமையாதது. அதுவே இறைவனின் உதவிகளை பெற வழி ஏற்படுத்தி தரும்.
நமது தாயகத்தில் நம்மை சுற்றி வாழும் மக்களிடையே நபிகள் நாயகத்தின் அழகிய பணிகளை எடுத்து கூற வேண்டும்.
இங்கு வந்திருக்கும் நல் உள்ளங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த சிறிய வரலாற்று நூல்களை இலவசமாக சகோதர சமுகத்தவர்களுக்கு வினியோகியுங்கள்.
கண்ணியமான அணுகுமுறைகள்,நேர்மையான செயல்பாடுகள் மூலம் அனைவரின் உள்ளங்களையும் தொடுங்கள்.
இது தான் இப்போதைக்கு முக்கிய பணிகளாக நம் முன் காத்திருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் வல்லம்.அகமது கபீர், தஞ்சை பைத்துல்மால் சுலைவர் மஹாராஜா . ரபீக், பள்ளியின் நிர்வாக தலைவர் முகம்மது அன்சாரி, முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், வல்லம் நூருல் ஜமாலியா மதரஸா ஹஜ்ரத் நூர் முகம்மது , வல்லம் ஜூம்மா பள்ளி இமாம் ரபீக் பாகவி, வல்லம் மேலப்பள்ளி உபையதுல்லா ஹஜ்ரத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நிறைவாகவல்லத்தை சேர்ந்த உலமாக்களின் மதரஸா பாட சாலையின் சேவைகளை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பாராட்டி ஊக்குவித்தார்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்
19.10.2021