நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கக் கூடாது

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், ஷெல் சமையல் எரிவாயு,  நாஃப்தா போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவமான ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருக்கும் இடங்களில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலும் ஒன்று என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்று மொத்தமே 31 இடங்கள் தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து நெடுவாசலை மையமாக கொண்டு வடகாடு, வானக்கன்காடு, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி ஆகிய ஊர்களில் துளையிட்டு ஆய்வுப்பணிகள் நடைபெற்றிருந்தாலும் இப்போதுதான் அதன் அபாயம் அறிந்து, ஆய்வுப் பணிகள் வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கிறது.

மீத்தேன் எடுப்பு போன்றே அபாயகரமான பின் விளைவுகள் இத்திட்டத்தில் இருக்கிறது. 6 ஆயிரம் அடிக்கு ஆழ்துளையிட்டு பூமிக்கடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும். இதற்காக படிப்படியாக ஒவ்வொரு கட்டங்களாக ஆழ்துளையிடப்படும். இதன் காரணமாக கடல்நீர் உட்புகுந்து, 21 லட்சம் ஏக்கர் நிலம் பாழாகும். மேலும் நெடுவாசலை சுற்றி 100 கிலோ மீட்டர் வரை வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அப்பகுதி பொதுமக்கள் கொந்தளிக்கிறார்கள்.

கூடங்குளம் அணுவுலை, மீத்தேன் எடுப்பு, எரிவாயு குழாய் பதிப்பு என தமிழக சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை தமிழக மக்கள் எதிர்த்தார்கள். இப்போது இதற்கு எதிராகவும் மக்களின் குரல் வெடித்து அலறுகிறது.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நலன் கருதி இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும் தமிழக அரசு இவ்விஷயத்தில் தமிழக மக்களின் பக்கம் நின்று, தமிழகத்தின் நலன் காக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
25/02/2017