சுதந்திரத்தின் லட்சியங்களை பாதுகாப்போம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து!

இந்திய சுதந்திரத்தின் 75, ஆம் ஆண்டில், பவள விழாவை கொண்டாடுவது நம்மை பூரிக்க செய்கிறது.

வெவ்வேறு மதங்கள், இனங்கள், சாதிகள், மொழிகள், நிலவியல், பருவ காலங்கள், பண் பாடுகள், கலாச்சாரங்கள் என இருந்தாலும்,வேற்றுமையில் ஒற்றுமை யோடு ஒரு துணைக் கண்டமாக இந்தியா திகழ்கிறது.

இக்காலக்கட்டத்தில் உலக நாடுகளுக்கு போட்டி போடும் அளவில் பல துறைகளில் நாம் முன்னேறியிருக்கிறோம். சாதனைகளை புரிந்திருக்கிறோம்.

அதே சமயம் தாராள மனப்போக்குகளுடன் புதிய எதிர்காலத்தை நோக்கி நாட்டை வழி நடத்திடவும் நாம் ஆயத்தமாக வேண்டும்.

ஐரோப்பியர்களிடமிருந்து நமது முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? என்ற கேள்வி நம்மை ஆரோக்கியமான சுய பரிசோதனைகளுக்கு ஆட்படுத்துகிறது.

மாநிலங்களின் உரிமைகள், மத, மொழி, சாதி சிறுபான்மையினரின் நலன்கள் அந்த கேள்வி வளையங்களில் சுற்றி வருகின்றன.

அவற்றை சுதந்திர சிந்தனைகளுடன் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

பெரு மகிழ்ச்சி தரும் நம் சுதந்திரத்தின் பவள விழா கொண்டாட்டம், கொரோனா நெருக்கடி காரணமாக கடும் விதிமுறைகளில் கட்டுண்டிருக்கிறது.

இத்தருணத்தில் சுதந்திரத்திற்காக இன்னுயிர் ஈந்தவர்களையும், அருந்தொண்டாற்றியவர்களையும் நினைவு கூறுவோம்.

கொரோனா தொற்றுக்கு எதிராக செயலாற்றி, உயிரிழந்த முன் களப்பணியாளர்களின் தியாகங்களையும் இந்நாளில் நினைவு கூறுவோம்.

மக்களை பிரிக்கும் வெறுப்பு அரசியலை வேரறுத்து, சுதந்திரத்தின் லட்சியங்களை பாதுகாக்க சூளுரை ஏற்போம்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாட்டு மக்கள் அனைவருக்கும் 75, வது இந்திய சுதந்திர தின பவள விழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
14.08.2021