You are here

ஐம்பெரும் கோரிக்கைகளோடு திமுக கூட்டணிக்கு மஜக ஆதரவு! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!


மனிதநேய ஜனநாயக கட்சியின் அவசர தலைமை செயற்குழு கூட்டம் நேற்று (10.03.2021) சென்னையில் நடைபெற்றது.

இதில் நடப்பு தமிழக சட்டமன்ற தேர்தல் நிலைபாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கப்பட்டது.

தற்போதைய தேர்தல் என்பது சமூக நீதி சக்திகளுக்கு எதிரான ஜனநாயக யுத்தமாக இருப்பதால் இதை கவனமாக அணுகுவது என்று விவாதிக்கப்பட்டது.

தொகுதி பங்கீடு தொடர்பான கோரிக்கைகள் நமக்கு இருப்பினும், அதை முன்னிலைப்படுத்தி சர்ச்சைகள் உருவாகி , அது மதச்சார்பற்ற வாக்குகள் பிரிவதற்கு காரணமாகி விடக் கூடாது என்பதில் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த வகையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு அளித்த ஆதரவை தொடர்வது என்றும், கீழ் கண்ட ஐந்து பொது கோரிக்கைகளை முன் வைப்பது என்றும் முடிவானது.

1.10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத, வழக்கு பாராபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும்.

2. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

3. பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல் படுத்த வேண்டும்.

4. நீதியரசர் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.

5. சாதி வாரி கணக்கெடுப்பை அமல்படுத்துவதுடன், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட 5 கோரிக்கைகளுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
11.03.2021

Top