பெட்ரோல் டீசல் எரிவாயு விலையேற்றம்… மக்கள் மீதான யுத்தம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!


கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இன்று டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் வரையிலும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 92 ரூபாய் வரையிலும் உச்சத்தை தொட்டிருக்கிறது.

எரிவாயு விலை இன்று மேலும் 50 ரூபாய் ஏற்றப்பட்டிருக்கிறது.

இது மக்கள் மீது மத்திய அரசு நடத்தும் யுத்தம் என்று குற்றம் சாட்டுகிறோம்.

மோசமான இந்த விலையேற்றம் என்பது நம் நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி, பெரு முதலாளிகள் சிலரை மேலும் வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

நமது அண்டை நாடுகளான இலங்கையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 62 ரூபாயும், பங்ளாதேஷில் 78 ரூபாயும் விற்கப்படும் நிலையில் நம் நாட்டில் அநியாய கொள்ளை நடக்கிறது.

நம் நாட்டில் இறக்குமதிக்கு பின்னர் சுத்திகரிக்கப்பட்டு, பிறகு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 33 ரூபாயாக இருக்கும் போது, உள்நாட்டில் வாழும் மக்கள் மீது அநியாய வரிகளை சுமத்தி ஆதாயம் பார்க்கலாமா? என்ற கேள்வி எழுகிறது.

இதை மத்திய அரசு உணர்ந்து விலையேற்றத்தை கட்டுப்படுத்தி, வரிகளை குறைத்திட வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
15.02.2021