காந்தி படுகொலை பத்திரிக்கைப் பதிவுகள்..! நூலாய்வு, மு தமிமுன் அன்சாரி MLA


இன்று ஜனவரி 30.

காந்தியாரின் படுகொலை நினைவு நாள் உருக்கமுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனால் வலதுசாரி மதவெறியர்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடன், அதே சமயம் , வெளியே துயரம் இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இது பலரும் அறிந்த ஒன்று.

காந்தியார் படுகொலை செய்யப்பட்டவுடன் உலகம் எங்கும் கண்டனங்கள் எழுந்தன.

உலக் தலைவர்கள் முதல் உள்ளுர் தலைவர்கள் வரை அனைவரும் கண்ணீரையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தினர்.

உலகப் பத்திரிக்கைகளும், உள்ளுர் பத்திரிக்கைகளும் தலையங்கம் தீட்டி நாதுராம் கோட்சேவின் பயங்கரவாதத்தையும், அவனுக்கு பின்னனியில் இருந்த மதவெறி அமைப்புகளையும் கண்டித்தன.

அவற்றின் தொகுப்புதான் “காந்தி படுகொலை- பத்திரிக்கை பதிவுகள்” என்ற ஆவண நூலாகும்.

போப் ஆண்டவர்,12 வது பயஸ், மெளண்ட்பேட்டன் பிரபு , வின்ஸ்டன்ட் சர்ச்சில், ஆறாம் ஜார்ஜ் மன்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ரவிந்திரநாத் தாகூர், பெரியார், நேரு , , ஜின்னா, காமராஜார், அண்ணா, காயிதே மில்லத், அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ருமன், அன்றைய ஐ.நா தலைவர் பெர்னான்ட்வான் என பலரின் கண்ணீர் பதிவுகள் நெஞ்சை உருக்குறது.

பாஜகவினரும், வலதுசாரிகளும், கொண்டாடும் சர்தார் வல்லாபாய் பட்டேல் கீழ்கண்டவாறு கதறுகிறார்….” என் மனம் துக்கத்தால் நிரம்பிவிட்டது. இச்சம்பவம் வெட்கப்பட வேண்டிய விசயம். அவர் உயிரோடு இருந்தபோதுதான் அவரது புத்திமதிகளை கேட்டதில்லை. அவர் இறந்த பிறகாவது அதை பின்பற்றி நடப்போம்” என்கிறார்.

காந்தியை முன்பே கொன்றிருக்க வேண்டும் என பேசக்கூடிய மதவெறியர்கள், சர்தார் வல்லாபாய் படேலின் அறிவுரையை கேட்க வேண்டும்..!

ராஜாஜி பின்வருமாறு கூறுகிறார்.” என் சகாக்களுக்கு நான் என்ன சொல்லி ஆறுதலை கூற முடியும் ?

ராமபஜனை செய்ய சென்று கொண்டிருந்த சமயம் பிரார்த்தனைக்கு காத்திருந்த பக்தர்களின் வரிசைகளுக்கு மத்தியில் தம் உடலை நீத்து அவர் இராமரிடம் நேராக போய் சேர்ந்துவிட்டார். ஒரு குண்டு வயிற்றில் புகுந்ததும் ஹரே ராமா என்றார்” என எழுதும் ராஜாஜி கடைசியில் இவ்வாறு முடிக்கிறார், ஏதோ பைத்தியக்காரனைப் போல கிறுக்கி அனுப்புகிறேன் .எனக்கு துக்கம் பொறுக்கவில்லை .ஒன்றும் பிடிக்கவில்லை என அழுது புலம்புகிறார்.

இந்த நூலைப் படிக்கும்போது சில இடங்களில் கலங்காமல் இருக்க முடியவில்லை.

காந்தியாரோடு கொள்கை முரண்படுபவர்கள் கூட அவரது அஹிம்சை வழி போராட்டங்களில் ஈர்க்கபட்டார்கள்.

அந்த அரிய மனிதரை நாதுராம் கோட்சே என்ற மராட்டிய ,உயர்சாதி மதவெறியன் சுட்டுக்கொன்ற துயர நிகழ்வு சுதந்திர இந்தியாவை, உலக அரங்கில் கூனி குறுக செய்தது .

அதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதமாகும்.

காந்தியை கொன்றவர்களை இன்று சிலர் அதிகாரப் போதையில் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

அவர்கள் இந்த ஆவணத் தொகுப்பு நூலை படித்தால் வெட்கப்படுவார்கள் !

நூல் விபரம் :

காந்தி படுகொலை பத்திரிக்கை
பதிவுகள்

பதிப்பாசிரியர் : கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

விலை:360 ரூபாய்

கிடைக்கும் இடம் :சந்தியா பதிப்பகம் சென்னை 83

தொலைப்பேசி : 044-24896979