அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA காணொளி வழியே ஆதரித்து உரை…!


ஜனவரி 29,

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணத்தை அரசு கல்லூரிகளுக்கான கட்டணமாக மட்டுமே வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி 52 நாட்களாக மாணவ, மாணவிகள் போராடி வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்தை ஆதரித்து காணொளி வழியே மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார்.

அவர் உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

இந்தியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகம் என்றும், தமிழகத்தில் மிகப் பெரிய வளாகத்தில் இயங்கும் பல்கலைக்கழகம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

1928 ல் காரைக்குடி ராஜா அண்ணாமலை செட்டியாரால் உருவாக்கப்பட்ட கல்வி கூடம் இது.

இதில் முன்னாள் நிதியமைச்சர்கள் நாவலர். நெடுஞ்செழியன், பேரா.க.அன்பழகன், ஐயா நம்மாழ்வார் உட்பட அரசியல் , சமூக செயல்பாட்டாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், பத்திரிக்கையாளர்கள் என பல ஆளுமைகள் உருவாகியிருக்கிறார்கள்.

இங்கு MBBS, MD, BDS மாணவ, மாணவிகள் இன்று அரசுக் கல்லூரிக்கான மருத்துவ கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என 52 நாட்களாக அமைதி வழியில் போராடி வருகிறார்கள்.

இதை மனித நேய ஜனநாயக கட்சி ஆதரிக்கிறது.

மாணவர் இந்தியாவும் இதை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

2013 ல் இதை அரசுடைமையாக்கிய பின்பும் கூட, தனியார் கல்லூரியை விட அதிகமான முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவது நியாயமற்றது.

2018ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நிர்வாகம் மதிக்கவில்லை.

நேற்று தமிழக அரசு, ஏற்கனவே வெளியிட்ட அரசாணையை மீண்டும் வெளியிட்டுள்ளது. அது முக்கியமல்ல.

இதை MGR பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வந்து, அரசு கல்லூரிகளுக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

நான் இதை முதல்வரின் நேரடி கவனத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றும், வாய்ப்பும், நேரமும் கிடைத்தால் இதை சட்டமன்றத்திலும் பேசுவேன் என்றும் கூறி, உங்கள் கோரிக்கைகள் வெல்ல மஜக வின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவர் பேசி முடித்ததும் மாணவ, மாணவிகள் பலத்த கரவொலி எழுப்பி அவர் பேச்சை வரவேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.