அமெரிக்காவின் அரசபயங்கரவாதம் தான் உலகஅமைதியைக் குலைக்கிறது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA குற்றச்சாட்டு!


ஜன: 11.,

அமெரிக்காவால் சட்டவிரோதமாக கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி தியாகி காசிம் சுலைமானி உள்ளிட்டோருக்கு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 09.01.2021 அன்று சென்னை ஆயிரம் விளக்கு மஸ்ஜிதில் தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் சார்பில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

இன்று உலக அமைதியை சீர்குலைத்து கொண்டிருப்பது அமெரிக்காவின் அரச பயங்கரவாதம் என்பதே உண்மை .

அமெரிக்கா நினைத்தால் உலகின் எந்த நாட்டின் அதிபரையும், இராணுவ தலைவரையும், கொல்ல முடியும் என்ற நிலை நிலவுகிறது, இந்த அதிகாரத்தை அமெரிக்காவுக்கு கொடுத்தது யார்? அமெரிக்கா, தான் நினைப்பதை மட்டுமே எல்லோரும் ஏற்க வேண்டும் என்கிறது.

இந்த உலகம் அமெரிக்காவுக்கு மட்டுமானதல்ல… உலகில் வாழும் அனைவருக்குமானது.

அமெரிக்கா அணுகுண்டு வைத்திருக்கலாமாம். அமெரிக்க ஆதரவு நாடுகள் வைத்திருக்கலாமாம்.

அப்படியானால் இந்தியா, வட கொரியா, ஈரான், மற்றும் ஆப்பிரிக்க, நாடுகள் அனைத்திற்கும் அந்த உரிமை உண்டு அல்லவா…

தற்காப்பு தேவை எல்லா நாடுகளுக்கும் உள்ளது.

ஈரான் மின்சார தேவைக்காக அணு உலைகளில் யுரேனியம் தயாரித்தது .

ஆனால் அமெரிக்கா அணு குண்டு தயாரிப்பதாக குற்றம்சாட்டியது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, நாடுகளுடன் ஈரானை நிர்பந்தித்து அமெரிக்கா அணுசக்தி புரிதல் ஒப்பந்தத்தை போட்டது.

ஆனால் ட்ரம்ப் அதிபராக வந்ததும் அமெரிக்கா அதிலிருந்து வெளியேறி பிரச்சனையை உருவாக்கியது. இதற்கு காரணம் இஸ்ரேல்.

இன்று ஏமனில், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரில் அப்பாவி மக்களின் ரத்தம் ஓடுகிறது. உயிர்கள் அழிகிறது. இதற்கு அமெரிக்கா தான் காரணம்.

ஈரான் ராணுவ தளபதி ஷஹீத் காஸிம் சுலைமானி அநியாயமாக கொன்றார்கள்.

அவர் ஈராக் அரசின் அழைப்பை ஏற்று பாக்தாத் செல்கிறார். வளைகுடாவில் சவூதி உள்ளிட்ட நாடுகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதே அவர் வருகையின் நோக்கம் என ஈராக் அதிபர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

இதை ஏகாதிபத்தியம் விரும்பவில்லை.

சர்வதேச சட்டம் மற்றும் ஈராக்கின் இறையாண்மையை மீறி அமெரிக்காவும், இஸ்ரேலும் இதற்கென தயாரித்த ட்ரோன் மூலம் அவரை கொன்றனர். இது படுகொலை அல்லவா?

ஆஸ்திரிய இளவரசர் வெளிநாடு வந்த போது அவரை கொன்றதால் தானே முதல் உலகப் போர் வெடித்தது?

பிரிட்டிஸ் ராணுவ தளபதியை பிரான்ஸில் இப்படி கொன்றால் ஏற்றுக் கொள்வார்களா?

அமெரிக்க ராணுவ தளபதியை இப்படி கொன்றால் சகித்து கொள்வார்களா?

உலகம் இப்படி வேடிக்கை பார்க்குமா?

ஷஹீத் காஸிம் சுலைமானி இந்தியாவின் நண்பர்.
ஈராக்கில் ISIS பயங்கரவாதிகளின் பிடியில் இந்திய நர்ஸ் சுகள் சிக்கிக் கொண்ட போது, அவர்களை மீட்டு இந்தியாவிடம் ஒப்படைக்க உதவியவர்.

அவரை அநியாயமாக கொன்றதை ஏற்க முடியவில்லை. அவரது மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கிறோம்.

இன்று அந்த படுகொலை விவகாரத்தில் பாக்தாத் நீதிமன்றம், ட்ரம்புக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அத்தகைய சரியான நேரத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம்.

இன்று பாலஸ்தீன மக்களுக்கு துரோகம் செய்து சிலர் இஸ்ரேலோடு அரச உறவு ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் பலர் மறைமுக தொடர்பில் இருக்கிறார்கள். இவையெல்லாம் வேதனையாக உள்ளது.

அமெரிக்க – இஸ்ரேல் அரச பயங்கரவாதங்களுக்கு எதிராக ஆசிய, ஆப்ரிக்க நாடுகள் ஒன்று சேர வேண்டும்.

இந்தியாவிலும் ட்ரம்புகள் இருக்கிறார்கள். இந்த பாசிஸ்டுகளுக்கு எதிராக அமைதி, சமாதானம், சகிப்புத்தன்மை, ஆகியவற்றை விரும்பும் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

ஷியா, சன்னி, அஹ்லே ஹதீஸ், பரலேவி, என்ற சிந்தனை வேறுபாடுகளை கடந்து பொது நிகழ்வுகளில் கை கோர்ப்பது காலத்தின் தேவை,

அமைதியை விரும்பும் அனைத்து சமூக மக்களும் ஏகாதிபத்தியத்திற்கும், ஃபாசிசத்திற்கும் எதிராக ஓரணியில் திரள வேண்டும். அது உலக அமைதிக்கு வழிகாட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்,

கடந்த 2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இங்கு நடைபெற்ற அல்குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்றதையும் பொதுச் செயலாளர் அவர்கள் தனது உரையில் நினைவு கூர்ந்தார்,

இந்நிகழ்வில் ஷியா காஜி மெளலானா குலாம் முஹம்மது மொஹ்திகான், அலிப்பூரை சேர்ந்த மெளலானா மீர் சர்க்கார் அலி, உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

பொதுச் செயலாளரோடு மஜக இளைஞரணி செயலாளர் அசாருதீன்,மாணவர் இந்தியா மாநில துணைச் செயலாளர் பஷீர், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க MJVS மாநில துணைச் செயலாளர் இளையான்குடி சேட்டு, மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயினுதீன், மற்றும் மத்திய சென்னை (கிழக்கு) மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மத்திய_சென்னை_மாவட்டம்
11.01.2021