மனிதநேயம் கொண்ட பஹ்ரைன் பிரதமர் மறைவு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி_MLA இரங்கல்!


பஹ்ரைன் நாட்டின் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் அமெரிக்க மருத்துவமனையில் மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

உலகில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற சிறப்பு இவருக்குண்டு. இவர் ஐம்பது ஆண்டுகளாகப் பிரதமர் பொறுப்பை வகித்து பல நாடுகளுடன் நல்லுறவை பேணியவர்.

இந்தியாவை மிகவும் மதித்தவர். தமிழர்களையும், மலையாளிகளையும் கொண்டாடியவர். பஹ்ரைனில் அவர்கள் ஆற்றி வரும் உழைப்பை மதித்தவர்.

இவரது மனித நேயத்திற்கு ஒரு நிகழ்வை உதாரணம் கூறலாம்.

2016 ம் ஆண்டு ஒரிசாவில் டனா மஜ்ஹய் என்ற பழங்குடி விவசாயி, இறந்த தன் மனைவியின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு, பல கிலோமீட்டர் நடந்து சென்று அடக்கம் செய்தார் என்ற செய்தியை படித்து கலங்கியுள்ளார்.

உடனே பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, அந்தக் குடும்பத்திற்கும் அவரது பிள்ளைகளுக்கும் உதவியதோடு, அவ்வூருக்கு ஒரு மருத்துவ சேவை வாகனத்தையும் வழங்கினார்.

அவரது இரக்க உணர்வு, மனிதாபிமானம் ஆகியன எல்லை கடந்ததாக இருந்தது.

2019 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) அவரை சுகாதாரத் துறையில் உலகத் தலைவராக அறிவித்தது. அப்பணியை அவர் சிறப்புற செய்தார்.

பல இனத்தவர்களும் நிம்மதியாக வாழும் வகையில் பஹ்ரைன் நாட்டை கட்டமைத்தார்.

கிரித்தவர்கள், இந்துக்கள் என அங்கு பணி செய்பவர்களின் வழிபாட்டுரிமையை மதித்து அதற்கு இடமளித்தவர்.

இவரது மறைவு மூலம் இந்தியா சிறந்த நண்பர்களில் ஒருவரை இழந்துள்ளது.

முத்துத் தீவான பஹ்ரைன் நாட்டின் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் மறைவுக்கு, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பஹ்ரைன் மக்களின் துயரத்தில் பங்கேற்கிறோம்.

இறைவன் அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
11.11.2020