சமூக நல்லிணக்கத்தை வளர்தெடுப்பதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்! குத்தாலம் ஜமாத் வரவேற்பு நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!


நவ.03,

குத்தாலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA விற்கு முஹையதின் ஆண்டவர் பள்ளியில் ஜமாத்தார்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் அவர் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு …

குத்தாலம் ஜமாத்தின் சார்பில் நடைப்பெறும் இந்த இனிய வரவேற்பு நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இங்கு கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் எல்லாரும் எழுந்து மவுனம் கடைப்பிடித்து அவர்களுக்காக பிராத்தித்தது நெகிழ்த்தக்கதாக இருந்தது. இது தான் மனிதநேயம்.

கொரோனா ஆபத்து நீடிக்கிறது என்பதற்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் சமீப மரணம் ஒரு சாட்சியாக உள்ளது. எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கு பள்ளிக்குள் நுழையும் போதே, எல்லாரும் கைகளிலும் கிருமி நாசினி தெளித்தீர்கள். சமூக இடைவெளியுடன் தொழுகையை நடத்துகிறீர்கள். அனைத்தையும் நான் கவனித்தேன்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஜமாத்தை பாராட்டுகிறேன். இது பொறுப்புணர்வின் வெளிப்பாடு.

குத்தாலம் மற்றும் இச்சுற்று வட்டார பகுதிகள், எல்லா சமூக மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய வட்டாரமாக இருக்கிறது. இங்கு எல்லா சமூக மக்களும் அண்ணன், தம்பிகளாக வாழ்கிறீர்கள்.

இந்த ஒற்றுமையை, இணக்கத்தை வளர்த்தெடுக்க இனி வரும் காலங்களில் இன்னும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.

இப்பகுதி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த சகோதர சமூக தலைவர்களை, பொதுமக்களை பள்ளிவாசல்களுக்கு நல்லெண்ண முயற்சியாக அழைத்து வாருங்கள்.

இங்கு தொழுகை எவ்வாறு நடத்தபடுகிறது? சொற்பொழிவில் என்ன கூறுகிறார்கள்?பொது ஒழுங்குகள் எவ்வாறு பேணப்படுகிறது? பள்ளிகளில் உள்ள அம்சங்கள் என்ன? என்பவற்றை எல்லாம் அவர்கள் நேரில் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள்.

புத்தகங்களை பரிசளியுங்கள். விருந்துகளில் பங்கேற்க செய்யுங்கள். உங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் அவர்களும், அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் நீங்களும் பங்கேற்று நேசத்தை வளர்த்தெடுங்கள்.

மக்களை பிரிக்க நினைக்கும் தீய சக்திகள், பாஃசிஸ்ட்டுகள் வடக்கே அதிகார மையங்களில் இருக்கும்போது, அமைதியையும், ஒற்றுமையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

அரசியல் பாகுபாடுகளை கடந்து இப்பணிகளில் எல்லோரும் ஈடுபட வேண்டும்.

அதுபோல் சமூக வலைத்தளங்களில் சிலர் பொறுப்பற்று எழுதும் சில பதிவுகள் பெரும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதை எல்லா சமூகங்களிலும் பார்க்க முடிகிறது.

பொதுவெளியில் கருத்துகளை வெளியிடும்போது பொது அறிவும், நிதானமும் தேவை. யாரோ பதிவிடும் ஒரு சர்ச்சையான கருத்து எல்லோரையும் பாதித்துவிடுகிறது. அமைதியை குலைத்துவிடுகிறது.

சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு அந்த தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திட முன் வரவேண்டும்.

இது போன்ற தருணங்களில் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், அறிவார்ந்து எதிர்வினையாற்ற வேண்டும்.

இது குறித்து விழிப்புணர்வை அறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

அமைதி, ஒற்றுமை, இணக்கம் ஆகியவை தான் நிம்மதியான வாழ்வுக்கு துணை நிற்கும். ஜனநாயக சக்திகளோடு இணைந்து இப்பணியை எல்லோரும் முன் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முஹைதின் ஆண்டவர் பள்ளிவாசலின் முத்தவல்லி நூர் முகம்மது, ஜாமிஆ பள்ளிவாசல் முத்தவல்லி A. M சாகுல் ஹமிது, இமாம்கள் முகம்மது, சபியுல்லாஹ், மஜக மாநில செயலாளர் ராசுதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் சங்கை தாஜ்தீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜஹான், குத்தாலம் அஜ்மல் உசேன், நீடூர் மிஸ்பா, வேலம் புதுக்குடி முகம்மது இப்ராகிம், தைக்கால் அசன் அலி, விவசாய அணி மாவட்ட செயலர் ஹாஜா சலீம் மற்றும் அப்பகுதி மஜகவினரும் உடனிருந்தனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.
02/11/2020