
அக்.3,
மஜகவின் சார்பில் மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசினார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை, ஒரு வார காலத்திற்கு மத்திய அரசு கொண்டுவந்து இருக்கக்கூடிய வேளாண் கறுப்பு சட்டங்களை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தோம்.
பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு வடிவ ஜனநாயக வழி போராட்டங்களை முன்னெடுத்தோம்.
அதனுடைய நிறைவு நிகழ்ச்சியாக, இன்றைய தினம் கும்பகோணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்துள்ளோம்.
மத்திய அரசு, தனது மூன்று வேளாண் மசோதாக்களையும், அவசர அவசரமாக சட்டமாக்கி, அதை குடியரசு தலைவரிடம் அனுப்பி ஒப்புதலை பெற்று இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் வேளாண் சட்டங்கள் ஜனநாயக விரோதமானவை; விவசாயிகளுக்கு எதிரானவை; அடித்தட்டு மக்களுக்கு எதிரானவை; என்ற நோக்கத்தோடு நம்மைப்போன்ற ஜனநாயக சக்திகள் களத்தில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 2022 ஆகஸ்டு 15 தேதிக்குள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று சொன்னார். ஆனால், அவர் இப்போது கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்ககூடியவையாகவும், விவசாயிகளின் எதிர்காலத்தை பாழாக்க கூடியதாகவும் இருக்கின்ற காரணத்தினால்தான் இதை மிக கடுமையாக எதிர்க்கிறோம்.
அதுமட்டுமல்ல. அவசர அவசரமாக இந்த கறுப்பு சட்டங்களை கொண்டு வந்திருக்கக்கூடிய மத்திய அரசிடம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்த அரசிடம், நாங்கள் கேட்பது என்னவெனில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இதே கும்பகோணத்தில் பிறந்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் ஒரு பரிந்துரையை மத்திய அரசிடம் கொடுத்தார்.
அது என்னவெனில், உற்பத்தி செய்யக்கூடிய விவசாய பொருட்களோடு, கூடுதலாக 50 சதவீத தொகையை வைத்து விவசாயிகளிடம் விலை கொள்முதல் செய்யவேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அந்தப் பரிந்துரையை இதுவரையில் மத்திய அரசு ஏற்கவில்லை. கிடப்பில் போட்டுள்ளது.
இந்த அரசு விவசாயிகளுக்கு நன்மை செய்வதாக இருந்தால், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் அந்தப் பரிந்துரையை ஏற்று அதை அமல்படுத்தி இருக்க வேண்டும்.
அதை செய்திருந்தால் அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து இருப்போம்.
அந்த நியாயமான கோரிக்கையை அமல்படுத்தாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இன்று இந்த மசோதாக்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
ஏன் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இவர்கள் அவசரஅவசரமாக மசோதாக்களை தாக்கல் செய்ய வேண்டும்? அதை சட்டமாக்க வேண்டும்?
பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான அதானியும், அம்பானியும் உணவு பதப்படுத்தும் தொழில்களில் இறங்கி இருக்கிறார்கள். பூனை எங்கே ஒளிந்திருக்கிறது என்று இப்போது தெரிகிறதா…?
அவர்களை திருப்திபடுத்த அவர்களுடைய வணிகத்தை பாதுகாக்க; நரேந்திர மோடி அவர்கள், இப்போது இந்த வேளாண் சட்டங்களை அவர்களுக்கு ஆதரவாக கொண்டு வந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்கிறோம்.
வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாய ஒப்பந்தச் சட்டம், அத்தியாவசிய அவசர சட்டம் என்று மூன்று சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்களே…. இந்த மூன்று சட்டங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை.
இவை விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்கள் என்று சொன்னால்… இதில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடிக்கு உறுதி உண்டா..? உணவு மானிய தள்ளுபடிக்கு உறுதி உண்டா..? விவசாயிகளுக்கான வேலை உத்தரவாதத்திற்கு உறுதி உண்டா..? உரமானியம் உண்டா..? இந்த கேள்விகளைத் தான் நாம் கேட்கின்றோம்.
உணவு தானியங்களின் இன்றியமையாத பட்டியல் என்று உண்டு.
உணவு தானியங்களின் இன்றியமையாத பட்டியலிலிருந்து அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து விட்டார்கள்.
அதாவது, இந்த நாட்டினுடைய அத்தியாவசிய உணவுப் பட்டியலில் அரிசி இல்லை, சமையல் எண்னெய் இல்லை, கோதுமை இல்லை.
இத்துறையில் கார்ப்ரேட்டுகளின் கை இனி ஓங்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
அதுமட்டுமல்ல. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் என்று சொல்கிறார்கள்.
இதே கும்பகோணம் பகுதியில், டெல்டா மாவட்டங்களில்; அறுவடை செய்த கரும்பை, மில் நிறுவனங்களிடம் ஒப்படைத்தார்கள். ஒப்படைக்கப்பட்ட அந்த கரும்புக்கு மில் நிறுவனங்கள் உரிய தொகையை இன்னும் கொடுக்கவில்லை.
இப்படி தமிழ்நாட்டில் மட்டும் கரும்பு விவசாயிகளுக்கு 1800 கோடி ரூபாய் வராமல் இருக்கிறது என்கிறார்கள்.
இதை மத்திய மாநில அரசுகள் பெற்றுக் கொடுத்ததா..? நமது மண்ணில் இயங்கக்கூடிய மில் நிறுவனங்களிடமிருந்தே கரும்பு விவசாயிகளுக்கு 1800 கோடி ரூபாயை இவர்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
அதானி, அம்பானி போன்ற நிறுவனங்களிடம், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து எப்படி பெற்றுக் கொடுக்க முடியும்?
அதுமட்டுமல்ல செஸ் வரியை நீக்கம் என்று சொல்கிறார்கள். அதாவது குஜராத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு பொருள் வரலாம், தமிழ்நாட்டில் இருந்து குஜராத்துக்கு ஒரு விளைபொருள் தடையின்றி, வரியின்றி கொண்டு செல்லலாம் என சொல்கிறார்கள்.
குஜராத்துக்கு தமிழ் நாட்டிலிருந்து ஒரு விவசாய விளை பொருளை அனுப்பினால், ஒரு லட்சம் ரூபாய் லாரி வாடகை ஆகும். அதுமட்டுமல்ல டோல்கேட்டுக்கு 75 ஆயிரம் கொடுக்க வேண்டும்.
1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவர்கள் அங்கே பொருளை அனுப்ப வேண்டும். ஆனால் செஸ் வரி அதிகபட்சம் 2000 முதல் 5000 வரையில்தான். இதை பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை ஏன் நிர்ணயிக்கவில்லை? என கேட்கிறோம். பதில் இல்லை
மக்காசோளத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு 1850 ரூபாயை நிர்ணயித்தார்கள். அரசாங்கம் கூட அதை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கவில்லை. அரசாங்கமே நிர்ணயித்த விலையிலிருந்து, மக்காச்சோளத்தை ஒரு குவிண்டால் 1000 ரூபாய்க்கு வாங்கவில்லை. ஒரு குவிண்டாலுக்கு 850 ரூபாய் நஷ்டம்.
இதே நிலை தானே உருளைக்கிழங்குக்கும் ஏற்படும். நெல்லுக்கும் ஏற்படும். கோதுமைக்கும் ஏற்படும். கரும்புக்கும் ஏற்படும். அதைதான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
அதுமட்டுமல்ல. இனி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளில் விவசாயத்துக்கு எந்தவகையான நெல்லை பயிரிட வேண்டும் என்பதை கம்பெனிகள்தான் தீர்மானிக்கும் என்ற அபாயமும் உண்டு.
நாம் சொல்லக்கூடிய பொன்னி, சீரக சம்பா இவை எல்லாம் காணாமல் போய். வெளிநாட்டு நிறுவனங்கள் என்ன விதையை விதைக்க சொல்கிறார்களோ… அதைத்தான் பயிரிடக் கூடிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படலாம் என்பதையும் மறந்து விடக்கூடாது.
தடையற்ற வர்த்தகம் என்று சொல்கிறார்கள்.
விவசாயிகளை வியாபாரிகள் ஆக்கும் திட்டம் என்று கூறுகிறார்கள்.
அதாவது தடையற்ற வர்த்தகம் என்று சொன்னால் எல்லோரும் சமமாக வியாபாரம் பண்ணலாம் என்ற நிலை உருவாகும். கேட்கபதற்கு நன்றாக உள்ளது.
இதை கவனமாக அணுக வேண்டும்.
ஒரு குளம் இருக்கிறது. அந்த குளத்தில் மீனையும் விட்டுள்ளனர், முதலையும் விட்டுள்ளனர். இரண்டையும் விட்டுவிட்டு, இரண்டுக்கும் சம உரிமை என்கிறார்கள்.
மீனுக்கும் அதே உரிமை, முதலைக்கும் அதே உரிமை என்று கூறுகிறார்கள். அப்போது முதலை என்ன செய்யும்?
உனக்கும், எனக்கும் சம உரிமை என்று சொல்லிவிட்டு, அந்த குளத்தில் உள்ள மீனை விழுங்குமா இல்லையா?
இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்களையும், விவசாயிகளையும் சமமாக்கி, தடையற்ற வர்த்தகம், சுதந்திர வர்த்தகம் என்று சொல்கிறார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களும், விவசாயிகளும் ஒன்றா?
ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விட்டால், அந்த ஒப்பந்தம் தொடர்பாக, அந்த விவசாயி கோர்ட்டுக்கு போய் அதானி, அம்பானி போன்ற பெரு நிறுவனங்களோடு வழக்காட முடியுமா..?
சர்வதேச நிறுவனங்களோடு வழக்காட முடியுமா.?
இதைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டுகின்றோம்.
விவசாயி விவசாயம் செய்வான். மழையில் நனைவான். சேற்றில் கால் வைப்பான். கடுமையாக உழைப்பான். அவனுக்கு சட்ட திட்டங்கள் தெரியாது.
முன்பு உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் பன்னாட்டு நிறுவனங்கள் வியாபர ஒப்பந்தம் போட்டன. நீங்கள் பத்தாயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யக்கூடிய உருளைக்கிழங்குகளை எல்லாம் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று சொன்னவுடன் விவசாயிகள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒப்பந்தம் போட்டார்கள்.
என்னவாயிற்று ?அந்த உருளைக்கிழங்கு வியாபாரிகள் எல்லாம் அறுவடை செய்த உருளைக்கிழங்கை கம்பெனிகளுக்கு எடுத்து சென்றார்கள்.
கம்பெனிக்காரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
பெரிய சைஸில் உள்ள உருளைக்கிழங்குகளை மட்டும் வாங்கிவிட்டு, சைஸ் சின்னதாக இருக்கும் கிழங்குகளை நிராகரித்து விட்டார்கள்.
அந்த உருளைக்கிழங்குகளை நஷ்டத்தோடு திருப்பி எடுத்து வந்து, அதை எங்கும் விற்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
எனவேதான் சொல்கிறோம் கார்ப்பரேட் நிறுவனங்களும், விவசாயிகளும் சமம். நேரடி கொள்முதலுக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்பது எல்லாம் மாயாஜால வார்த்தைகள் என்கிறோம். நடைமுறையில் பொருந்தாதவை என்கிறோம்.
அதன் விளைவாகத்தான் மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்த சிரோன் மணி அகாலிதளம் கட்சியின் பெண் அமைச்சர் ஹர்சிம்ரத் கவ்ர் பாதல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இது விவசாயிகளை கடனில் தள்ளக்கூடிய சட்டம் என்று குற்றம் சாட்டி வெளியேறி இருக்கிறார்.
வட இந்தியா பற்றி எரிகிறது. நாடாளுமன்றத்தில், இதுகுறித்து வங்கத்திலிருந்து, மம்தா பானர்ஜி அவர்களின் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்வா மொய்த்ரி எம்பி அவர்கள் இந்த சட்டத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார்.
ஒரு பூதத்தை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அந்த பூதத்தில் இவர்களே சிக்கி கொள்வார்கள் என்று குற்றம் சுமத்தினார்.
இப்போது விவசாயிகளுக்கு வந்திருக்கக்கூடிய இந்த ஆபத்து சாதாரன ஆபத்து இல்லை.
இவர்கள் அத்தியாவசியமான பொருட்கள் பட்டியலில் அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் நீக்கி இருக்கக்கூடிய வேலையிலே, எதிர்காலத்தில் இவற்றையெல்லாம் அரசு கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
ரேசன் கடைகள் மூடப்படும் அபாயம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் 50 சதவீதம் மக்கள் அரசாங்கம் கொடுக்கக்கூடிய ரேஷன் அரிசியை தான் உண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
மாநிலப் பட்டியலுக்கு சில துறைகள், மத்திய பட்டியலுக்கு சில துறைகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அதை மத்திய அரசு அபகரித்து மத்திய பட்டியலுக்கு மாற்றியதால்தான் இன்று நீட் தேர்வை நாம் சந்திக்கிறோம். கல்வியில் பல உரிமைகளை இழக்கிறோம். ஏழை எளிய மக்கள் கல்வி வாய்பை பெற முடியாத அவலம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் விவசாயம் மாநிலப் பட்டியலில் இருக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டங்களால் கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஆபத்து ஏற்பட்டு மாநில அரசுகளால் இனி விவசாயத்துறையில் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. கூட்டாட்சி தத்துவத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் விலையைத் தீர்மானிக்க தொடங்கிவிட்டால், அரிசி விலையை கும்பகோணத்தில் எந்த விலையில் விற்பது, ஐதராபாத்தில் எந்த விலையில் விற்பது, சென்னையில் எந்த விலையில் விற்பது என்று பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கும். விலைவாசியை கட்டுப்படுத்த முடியாது.
இது சேற்றில் கால் வைத்து உழைக்கக்கூடிய விவசாயிகளுக்கு மட்டும் ஆபத்தில்லை. விவசாய முதலாளிகளுக்கு மட்டும் ஆபத்தில்லை. நம் ஒவ்வொருவருக்கும் ஆபத்து இருக்கிறது.
எனவேதான் சொல்கிறோம். இந்த மூன்று அபாயகரமான சட்டங்களையும் திருத்த வேண்டும் என்று சொல்கிறோம். சிலர் கேட்கிறார்கள் மூன்று சட்டங்களிலும் எந்த நல்ல விஷயங்களும் இல்லையா என்று கேட்கிறார்கள். நல்ல விஷயங்கள் இருக்கிறது. சோற்றில் உப்பு அதிகமாக போனால் அந்த சோற்றை சாப்பிட முடியாது. அதுபோலத்தான் இந்த சட்டங்களிலும் இருக்கிறது.
விவசாய பிரதிநிதிகளும், மாநில அரசுகளும், எதிர்க்கட்சிகளும் சொல்லக்கூடிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இந்த சட்டங்களை திருத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்து தமிழகமெங்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
பல அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்திலும். மாநிலங்களிலும் எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறார்கள். போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவெங்கும் விவசாயிகள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள்.
ஒரு அரசியல் கட்சி என்ற அளவில், ஒரு வார கால போராட்டத்தை அறிவித்து அதை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது என்று சொன்னால் அது மனிதநேய ஜனநாயக கட்சி மட்டும்தான் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் ஒரு வார காலமாக எல்லா மாவட்டங்களிலும், பெருநகரங்களிலும் இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.
கொட்டும் மழையிலும் மக்கள் இங்கு வந்திருக்கிறார்கள். மழையிலும் கூட கலையாத அளவிற்கு விவசாயிகளின் நன்மை கருதி, விவசாயிகளின் உரிமையை கருதி, இந்த மண்ணின் நலன் கருதி, இந்த நாட்டின் நலன் கருதி, மக்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
எமது ஒரு வார கால ஆர்ப்பாட்டங்கள், இந்த நிகழ்வின் மூலம் கும்பகோணத்தில் நிறைவுக்கு வருகிறது.
இதோடு நாங்கள் நிறுத்தி விடப்போவதில்லை, விவசாய சங்கங்களோடும், ஜனநாயக சக்திகளோடும் தொடர்ந்து களமாடுவோம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#தலைமையகம்
02-10-2020