அமைதியையும் நல்லிணக்கத்தையும் காக்கும் கட்சி மஜக! புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மத்தியில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உரை!


செப் 11,

நாகை மாவட்டம் திட்டச்சேரி மற்றும் புறாக்கிராமத்தில் மஜகவில் திரளான இளைஞர்களும், மாணவர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் கடந்த செப் – 9 அன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அவர்களை வரவேற்று அவர் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

மனிதநேய ஜனநாயக கட்சியில் உங்களை இணைத்துக் கொண்டதற்கு முதலில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில் கடந்த ஐந்து மாதத்தில் எல்லோரும் ஊரடங்கிலே ஒரு வகையான சூழலில் பொழுது, மனிதநேய ஜனநாயக கட்சிதான் களத்தில் ; ஊரடங்கு விதிகளை மீறாத வண்ணம் ; அதே நேரத்தில் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது.

அது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமாக இருக்கலாம். காவிரி உரிமை மீட்புக்கான போராட்டமாக இருக்கலாம். வெளிநாடுகளில் சிக்கி தவித்த தமிழர்களை தாயகம் அழைத்து வருவதற்கான போராட்டமாக இருக்கலாம். பத்தாண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய அரசை வலியுறுத்திய போராட்டமாக இருக்கலாம்.

நான்கு வகையான பெரும் கொண்ட போராட்டங்களை நடத்தி தமிழக மக்களுடைய கவனத்தை ஈர்த்து, மத்திய-மாநில அரசுகளுக்கு இந்தப் பிரச்சினைகளின் வீரியத்தை நாம் உணர்த்தி இருக்கிறோம்.

இக்கால கட்டத்தில் மக்களுடைய பிரச்சினைகளை அறிக்கைகள் வாயிலாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற முதல் ஐந்து கட்சிகள் வரிசைப்படுத்தினால், அந்த முதல் ஐந்து கட்சிகளிலே மனிதநேய ஜனநாயக கட்சியும் பிரதானது என்பதை இந்த நேரத்திலே உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த 5 மாதங்களில் தமிழகம் முழுக்க புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நம் கட்சியில் இணைந்து உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை என்பது நம்மை போன்ற வளரும் கட்சிகளுக்கு பெரிய எண்ணிக்கையாகும். இது நம் மீதான நம்பிக்கையை காட்டுகிறது. நமது பணிகளும் அவ்வாறு இருக்கிறது.

பொதுவாக மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளை அறிக்கைகள் வாயிலாக மத்திய மாநில அரசுகளுக்கு எடுத்துச் சென்று மக்களுடைய குரலை பிரதிபலிப்பது என்ற வகையிலே மனிதநேய ஜனநாயக கட்சி தனித்த ஒரு முத்திரையை களத்திலும், சட்டமன்றத்திலும் பதித்திருக்கிறது.

மற்ற அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகளிலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சியுடைய அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில் தமிழ்நாட்டிலே அமைதி இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய எல்லா மக்கள் மத்தியிலும் சுமூகமான உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும். சமூகநீதி பாதுகாக்கப்படவேண்டும். மக்களுடைய வாழ்வாதாரங்கள் அது சார்ந்த குறைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பரந்துபட்ட ஜனநாயக அரசியலை மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா சமூக மக்களுடனும் சிறுபான்மை மக்களை கைகுலுக்க செய்து உறவு பாராட்ட செய்து, சமூக நல்லிணக்கத்தை வளர்த்த பெரும் பங்கை மனிதநேய ஜனநாயக கட்சி செய்திருக்கிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா சாதியினருடைய, சமூகங்களுடைய பிரச்சினைகளை உள்வாங்கி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தீர்வுகளுக்கு குரல் கொடுத்து, ஏறத்தாழ பல இடங்களில் அதற்கான தீர்வுகளையும் பெற்று தந்த அரசியல் ஜனநாயக இயக்கமாக மனிதநேய ஜனநாயக கட்சி செயல்பட்டு வருகிறது.

எனவே தான் நீங்கள் பிற அரசியல் கட்சிகளை பார்ப்பது போன்று மனிதநேய ஜனநாயக கட்சியை பார்க்காமல், முற்போக்கான – மனிதநேய அரசியலை முன்னெடுக்க கூடிய அரசியல் பேரியக்கமாக மனிதநேய ஜனநாயக கட்சி இருக்கிறது என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் இங்கே வருகை தந்திருக்கிறீர்கள்.

நாம் இப்போது தொடக்கத்திலே இருக்கின்றோம். நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாக இருக்கின்றது.

இன்று இந்திய திருநாடு சந்திக்கக்கூடிய பல பிரச்சினைகளில், ஜனநாயக சக்திகளோடு இணைந்து களமாட வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம்.

இந்தியாவுடைய ஜனநாயக சக்திகளின் குரல்வலையை டெல்லியில் இருக்கக்கூடிய பாசிஸ சக்திகள் நெறிக்கிறார்கள்.

மாநிலங்களுடைய உரிமைகளை பறிக்கிறார்கள்.

சாதாரண ஏழை எளிய மக்களுடைய கல்வி உரிமைகள் பறிபோகிறது.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரிலே விளிம்புநிலை மக்கள், கிராமப்புற மக்கள், சாமானிய குடும்பத்துப் பிள்ளைகள் உயர் கல்வியை நோக்கி செல்ல விடாத ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலமாக எதிர்காலத்தில் இட ஒதுக்கீடு கொள்கையை நீர்த்து போகச் செய்ய வைப்பது தான் அவர்களது உள்நோக்கமாக இருக்கிறது.

அதே போன்று இயற்கை வளங்களை கொள்ளையடிக்க.., கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க.., அவர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இப்படி மக்களுடைய அடிப்படை உரிமைகள் எல்லாம் பறிக்க கூடிய வேலைகளை செய்து இந்தியாவுடைய கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கக் கூடிய வேலைகளை செய்து வருகிறார்கள்.

மக்களுக்கு மத்தியிலே திட்டமிட்டு பிளவுகளை உருவாக்கி இரத்த ஆறுகளை ஓடவிட்டு தங்களுடைய அரசியல் அரியணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்த மோசமான காலகட்டத்தில் நாடு இருந்து கொண்டிருக்கும் நிலையில்தான், கொரோனா தொற்று உலகையே ஊரடங்கில் வைத்து நம்முடைய நாட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்கள் பரிதவிப்பில் இருக்கிறார்கள். மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் இந்த பரிதவிப்பையும், அச்சத்தையும் மத்திய பாஜக அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறது.

மக்கள் விரோத திட்டங்களை எல்லாம் மக்கள் ஊரடங்கில் இருக்கக்கூடிய காலக்கட்டத்தில், மக்கள் நோயின் அச்சத்திலிருக்கக்கூடிய பதட்டமான ஒரு சூழலிலே ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் செயல்படுத்த துடித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் மனிதநேய ஜனநாயக கட்சி, தேர்தல் அரசியலை எல்லாம் கடந்து ஜனநாயக சக்திகளை எல்லாம் ஒன்றிணைத்து மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய சித்தாந்த பணிகளை முன்னெடுத்து கொண்டுள்ளது.

இத்தருணத்தில் நீங்கள் எல்லோரும் மஜகவில் இணைந்துள்ளீர்கள். உங்களுக்கு சேவையாற்ற பொறுப்புகள் வழங்கப்படும். பொறுப்பு என்பது கடைமையாற்றுவதற்கான கருவி மட்டுமே. அதுமட்டுமே ஒரு தொண்டனுக்கான அந்தஸ்து அல்ல. உறுப்பினர் அட்டையும் தொண்டன் என்ற அந்தஸ்தும் தான் நிரந்தரமானது என்பதையும் சுட்டிக்காட்டி, நாம் எல்லோரும் மக்களுக்கான பணிகளை முன்னெடுப்போம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் நாகை. முபாரக், மாவட்ட செயலாளர் ரியாஸ், துணைச் செயலாளர் முன்ஷி யூசுப்தீன், IT Wing து.செயலாளர் நிசாத், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராகிம், நாகை ஒன்றிய து.செயலாளர் சதாம், கட்டுமாவடி ஊராட்சி பொறுப்பாளர் அபுபக்கர் சித்திக் உள்பட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.