தனித் தேர்வர்களாக எழுத இருந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!

2019 – 2020-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ( PRIVATE CANDIDATE ) தனித் தேர்வர்களாக எழுத இருந்த மாணவர்கள் கொரோனா காரணமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இவர்களையும் அதே போல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனித் தேர்வர்களாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத பதிவு செய்துள்ளார்கள்.

பள்ளிக்கூடத்தில் படித்த மாணவர்கள் எந்த பாடத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றார்களோ அதே பாடத்திட்டத்தின் கீழ்தான் தனித்தேர்வர்களான மாணவர்களும் தேர்வு எழுத ஆயத்தமாக இருந்தார்கள். அவர்களும் தங்களது எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு சிறப்பாக படித்திருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அப்படிபட்ட மாணவர்கள் ஐந்து மாத காலமாக தேர்வு தள்ளிப்போனதால் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார்கள்.

தனித்தேர்வர்களாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11, 12-ஆம் வகுப்பு பள்ளியில் சேர்ந்து படித்த மாணவர்களில் பலர் இன்று பொறியாளர்களாகவும் ( Engineer ) மருத்துவர்களாகவும் ( Doctor ) இருப்பது குறிப்பிடத்தக்கது.

அது போல் 8-ஆம் வகுப்பை தனித் தேர்வர்களாக எழுத இருந்தவர்களும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

எனவே, தமிழகத்தில் ESLC, SSLC தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த அனைவரையும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுகிறோம்.

அரசுத் தேர்வுகள் துறை ஒவ்வொரு கல்வியாண்டும். 8-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு நடத்தி அவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கி வருகின்றது. ஆனால், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற 8-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் ELIGIBILITY CERTIFICATE வழங்கி, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இக்கட்டான இக்கால நிலையில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்த மாணவர்களின் மனநிலையையும், முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு 2019-2020 ஆம் கல்வியாண்டில் ESLC மற்றும் SSLC தனித் தேர்வர்களாக தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவர்களுக்கும் தகுதி சான்றிதழ் (ELIGIBILITY CERTIFICATE) அல்லது தரநிலை (GRADE ) போன்ற தேர்ச்சி சான்றிதழை தமிழக அரசு வழங்கி அவர்கள் அனைவரையும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் படி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வேண்டுகிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
11.08.2020