இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களை நிரப்புவதற்காக, 2019-20 ஆம் ஆண்டிற்காக நடைப்பெற்ற போட்டி தேர்வில் , 4 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் 8538 பணியிடங்களுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்தருணத்தில், 2020-21 ஆம் நிதி ஆண்டில், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தி, மேலும் 10 ஆயிரம் புதிய இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

தற்போது கொரோனா நெருக்கடி காரணமாக இத்தேர்வுகள் நடத்துவதற்கான சூழல் இல்லை.

எனவே கடந்தாண்டு அனைத்து சுற்று தேர்வுகளிலும் வெற்றிப் பெற்ற, தகுதி இருந்தும் காலிப் பணியிடங்கள் இல்லாததால் பணியில் சேர இயலாத 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தயார் நிலையில் உள்ளனர்.

அவர்களில் 10 ஆயிரம் பேரை தேர்வு செய்து அந்த பணியிடங்களை நிரப்ப ஆணை வழங்கிட , தமிழக அரசை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா நெருக்கடியில், காவலர்களின் பணி சுமை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படுவதன் மூலம் சட்டம் – ஒழுங்கு தொடர்பான பணிகள் சிறக்கவும் வழியேற்படும்.

ஏற்கனவே இதற்கு பல முன் உதாரணங்கள் இருப்பதால், இதில் தமிழக அரசு தயக்கமோ, தாமதமோ காட்ட தேவையில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,

#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
10.08.2020