முத்துக்கள் ஒளிரும் தீர்ப்பு!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (0BC) வழங்க சட்டம் நிறைவேற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்று மகிழ்கிறது.

இத்தீர்ப்பில் உள்ள பல வாசகங்களும், வரிகளும் முத்துக்களாக ஒளிர்கின்றன.

மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களை பெற்றப் போது, அவற்றை மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத MCI , மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத பிற நிறுவனங்களில் இதை ஆட்சேபிக்க முடியாது என்றும், மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், MCI யும் தீர்மானிக்க வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து முடிவெடுக்க மாநில அரசு மற்றும் MCI அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து, 3 மாதங்களில் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு பிற மாநிலங்களிலும் விழிப்புணர்வையும், சமூக நீதிக்கான எழுச்சியையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இந்திய மருத்துவக் கவுன்சில் இப்படிப்பட்ட தீர்ப்பை நிச்சயம் எதிர்பார்த்திருந்திருக்காது.

உள்ளுக்குள் இத்தீர்ப்பு குறித்து அதிர்ச்சியடைந்தவர்களையும், வரவேற்கும் நிலையை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இது தான் தமிழகத்தின் அரசியல் கொள்கையாகவும், பலமாகவும் இருக்கிறது.

மத்திய அரசு இத்தீர்ப்பையும், சமூக நீதியையும் மதிக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யக் கூடாது என்று கேட்டுக் கொள்வதோடு, வாய்ப்பு இருப்பின் இந்தாண்டே இதனை அமல் படுத்திடவும் முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

சமூக நீதியை காக்கும் நோக்கில் இது தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த தமிழக அரசையும், அதிமுக, திமுக, தி.க உள்ளிட்ட திராவிட இயக்கங்கள், தமிழ்தேசிய அமைப்புகள், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகநீதி கொள்கையில் ,தமிழகம் நாட்டுக்கு மீண்டும் வழிகாட்டுகிறது என்ற வகையில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்வோம்.

வாழ்வுரிமை போராட்டத்தில் தங்கத் தமிழகம் சமரசம் ஆகாது என்பதையும் , ஒன்றுபட்டு களமாட தயங்க மாட்டோம் என்பதையும் உரத்து கூறுவோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
27.07.2020