கொரோனா நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் கார் ஒட்டுனர்களும், இதர வாடகை வாகன ஒட்டுனர்களும் முக்கியமானவர்கள்.
குறிப்பாக கடனுக்கு கார் வாங்கி அதில் உழைத்து வருமானம் ஈட்டியவர்கள், இன்று மாதத் தவணை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.
அநியாயமாக ஏறி வரும் பெட்ரோல், டீசல் விலையால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு இது மேலும் வாழ்வியல் நெருக்கடிகளை உருவாக்கி உள்ளது.
இந்த நெருக்கடியான காலத்தில் மாதத் தவணைகள் கட்ட தேவையில்லை என்றும், செப்டம்பர் மாதம் முதல் செலுத்தினால் போதும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதை எந்த நிதி நிறுவனமும் பொருட்படுத்தாமல், மாதத் தவணை கேட்டு நெருக்கடி கொடுப்பதால், பல ஒட்டுனர்கள் தற்கொலை செய்துள்ளதும், இப்படி தினமும் தற்கொலைகள் தொடர்வதும் அதிர்ச்சியளிக்கிறது.
வாடகை கார் ஒட்டுனர்கள், சிறிய ரக சுமையுந்து ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என பலரும் இதில் அடக்கம்.
எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதோடு, இவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் மனிதாபிமானத்தோடு உதவிட வேண்டும்.
மேலும் ஊரடங்கு முடியும் வரை சாலை வரிகளையும் ரத்து செய்யவேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
23.07.2020