மமக-வின் மாநில அமைப்புச் செயலாளரும், ஆம்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, அன்பின் உறவு அஸ்லம் பாஷா அவர்களின் மரணச் செய்தி அறிந்து அனைவரும் ஆழ்ந்த வேதனையடைந்தோம்.
அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த செய்தி அறிந்து நானும், மஜக-வின் தலைமை நிர்வாகிகளும் அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி தைரியப்படுத்தினோம்.
இன்று அவர் நம்மிடமிருந்து விடைப் பெற்று, இறைவனிடம் சேர்ந்திருக்கிறார்.
கடைசியாக நானும், அவரும் கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்றோம். அதுதான் நான் அவரை கடைசியாக சந்தித்த நிகழ்வாகும்.
அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தப்போது, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவரை ஒரு வாரம் அழைத்து சென்று சுற்றிக் காட்டினேன். எனது உறவுகளையும், நண்பர்களையும் அறிமுகப்படுத்தினேன்.
அது போல் என்னோடு பல பொதுக் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.
நீண்ட தூர பயணங்களில் ஒன்றாக தங்கியிருக்கிறோம். எத்தனையோ கருத்துகளை பரிமாறியிருக்கிறோம்.
அந்த பயண நினைவுகள் எல்லாம் இப்போது நெஞ்சில் அலை பாய்கிறது.
பொது வாழ்வில் நீண்ட காலம் பயணிக்க வேண்டியவரின் வாழ்வு நடுத்தர வயதிலேயே முற்றுப் பெற்றது சோகமான ஒன்று.
முன்பு ஒரே முகாமில் பணியாற்றிய ஒரு சகோதரரை இழந்திருக்கும் வருத்தம் எங்களை வாட்டுகிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆம்பூர் தொகுதி மக்கள், மனிதநேய மக்கள் கட்சியின் சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கிறது.
அவர் தன் வாழ்வில் அறிந்தும், அறியாமலும் செய்த பிழைகளை இறைவன் மன்னிக்கட்டுமாக… என அவருக்காக பிரார்த்திக்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி,
21.07.2020