திமுக வின் சட்டமன்ற உறுப்பினரும், தி மு க வின் மாவட்ட செயலாளர்களில் ஒருவருமான ஜெ.அன்பழகன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் நானும், திமுக சார்பில் அவரும் போட்டியிட்டோம்.
களம் கடும் போட்டியாக இருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் வெற்றி பெற்றார்.
அதன் பிறகு 2016 ஆம் ஆண்டில் நான் அதிமுக கூட்டணியில் மஜக சார்பிலும், அவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பிலும் வெற்றிப் பெறுகிறோம்.
முதல் சட்ட மன்ற கூட்டத் தொடரின் போது, நான் அவரை சந்தித்தேன்.
நாங்கள் நேரில் சந்திப்பது இதுதான் முதல் முறை.
கடந்த தேர்தலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற ஒரு சம்பவத்தை அப்போது என்னிடம் நினைவு கூர்ந்தார்.
தேர்தலில் நல்ல போட்டியை ஏற்படுத்தினீர்கள். வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் நான் வெற்றிப் பெற்றதும், திமுக நிர்வாகிகளை அழைத்து எனக்கு நீங்கள் வாழ்த்துச் சொன்னதோடு, எனக்கு சால்வை அணிவிக்கவும் காத்திருந்தீர்களாம்.
நான் அங்கு வரத் தாமதமானதும் நீங்கள் புறப்பட்டு விட்டீர்கள் என்றார்கள். நான் அங்கு வந்த பிறகு இதை திமுகவினர் என்னிடம் சொன்னதும் உங்கள் அணுகு முறையும், அரசியல் நாகரீகத்தையும் பற்றி பலரிடமும் கூறினேன் என்றார்.
இப்போது நீங்கள் நாகப்பட்டினத்தில் வென்று வந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது அப்படியே நினைவு கூறுகிறாரே என நினைத்தேன்.
அதன் பிறகு பார்க்கும் போதெல்லாம் ஒருவருக்கொருவர் நலம் விசாரிப்போம்.
எனது சட்டமன்ற உரைகளையும், நடவடிக்கைகளையும் பாராட்டுவார்.
இன்று கொரோனா தொற்றால் அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேரதிர்ச்சியை தருகிறது.
ஆளுமை மிக்க ஒரு நிர்வாகியை திமுக இழந்துள்ளது. செயல்பாடு மிக்க ஒரு சட்டமன்ற உறுப்பினரை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி மக்கள் இழந்துள்ளனர்.
கொரோனாவில் இழக்கப்படும் ஒவ்வொரு உயிருக்கும் மக்கள் இரங்கலை தெரிவிக்கிறார்கள். அதில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஒருவர் எனும் போது அனைவருக்கும் கவலை அதிகரிக்கிறது.
அவரை இழந்து வாடும் திமுகவினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
10.06.2020