வெளிநாடு வாழ் தமிழர்கள் விவகாரம்! 20 லட்சம் கோடியில் ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கக் கூடாதா? பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டத்தில் மு தமிமுன் அன்சாரி MLA கேள்வி!

ஜூன் 6,

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், தாயகம் திரும்ப தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர் களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று தினங்களில் சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்தி, வலைதளங்களில் பதிவிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு, பெரும் எழுச்சியோடு, மக்களின் ஆதரவோடு இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உலகம் எங்கும் வாழும் தமிழக மக்கள் மஜகவின் இக்கோரிக்கைக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தியும், இந்திய தூதரகங்களில் மனு கொடுத்தும் அமைதி வழி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இரண்டாம் நாளான இன்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நகரங்கள், கிராமங்கள் தோறும் போராட்டங்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடை வெளியுடன் நடைப்பெற்று வருகிறது.

இன்று நாகை மாவட்டம் தோப்புத்துறையில் நடைப்பெற்ற போராட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்துப் போது, மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., கூறியதாவது…

வெளி நாடுகளுக்கு சென்று பணியாற்றும் நம் மக்கள், அதன் மூலம் நம் நாட்டுக்கு அன்னிய செலவானியை ஈட்டித் தந்தவர்கள்.

இன்று அவர்களில் பலர் கொரோனா நெருக்கடியால் வருமானம் இழந்து தாயகம் திரும்ப தவிக்கிறார்கள்.

பிரதமர் மோடி அவர்கள், கொரோனா தொடர்பில் அறிவித்துள்ள 20 லட்சம் கோடியில் 1000 கோடியை இதற்கு ஒதுக்கக் கூடாதா?

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வருபவர்களில், தமிழர்கள் விவகாரத்தில், பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகிறது.

457 விமான சேவைகளில் தமிழகத்திற்கு 19 விமான சேவைகளே கிடைத்துள்ளது. இதனால் விண்ணப்பித்த 70 ஆயிரம் தமிழர்களில் 3234 பேர் மட்டுமே தமிழகம் வர முடிந்திருக்கிறது.

மத்திய அரசிடம் தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களை விரைந்து மீட்க தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.

மத்திய அரசு இதை தர மறுத்தால், தமிழக அரசு அந்த செலவை ஈடுகட்ட வேண்டும்.

தங்கள் அயல்நாட்டு உழைப்பால், நம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திய அவர்களுக்கு நாம் கைக் கொடுக்க வேண்டிய தருணம் இது.

இதில் மஜக ஜனநாயக சக்திகளோடு இணைந்து தொடர்ந்து குரல் கொடுக்கும்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

பேட்டியின் போது நாகை மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அஹ்மதுல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர், தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் முபீன், ஜமாத் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#நாகை_மாவட்டம்
06-06-2020