சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு பணிக்காக, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு பணியாற்றி வந்த செவிலியர் திருமதி ஜான் மேரி பிரிசில்லா அவர்கள் நோய்தடுப்பு பணிகளில் முன்னணி வீரராக பணியாற்றி உயிர் நீத்துள்ளார்.
அதனைப் போன்றே சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி உத்தரவுபடி கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சார்ந்த மருத்துவர் அப்ரோஸ் பாஷாவும் உயிரிழந்துள்ளார்.
இது போன்ற தருணத்தில் மக்களுக்காக பணியாற்றி உயிர் தியாகம் செய்தவர்களை நாடே போற்றுகிறது.
இவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செய்யும் வகையில் தமிழக அரசு கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்,
மேலும் செவிலியர் ஜான் மேரி பிரிசில்லா விற்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது போல் மருத்துவர் அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்திற்கு இதுவரை எந்தவிதமான நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை என்பது கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.
இதனை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து மருத்துவர் அஸ்லம் பாஷா குடும்பத்தினருக்கு, இதற்காக வழங்கப்படும் ரூபாய் 50 லட்சம் நிவாரண தொகை கிடைத்திட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது போன்ற தியாகிகளுக்கு உரிய மரியாதை செய்வது என்பது, பணியிலிருக்கும் இது போன்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
02-06-2020