உலகம் முழுக்க பல்வேறு நாட்டவராலும் கொண்டாடப்படும் சர்வதேச பண்டிகைகளில் ஒன்று ரமலான் நோன்பு பெருநாளாகும்.
ஈதுல் ஃபித்ர் என்ற பெயரில் கொண்டாடப்படும் இப் பண்டிகை உலகை இணைக்கும் திருநாட்களில் முதன்மையானது.
இவ்வாண்டு கொரணா தொற்று காரணமாக பெரும் நெருக்கடிகளோடு இப்பெருநாளை உலகம் எதிர்கொள்கிறது.
இறையுணர்வு பூத்துக் குலுங்கும் ரமலான் மாதம், இம்முறை இறையில்லங்கள் திறக்கப்படாததால்,நட்சத்திரங்களை பறிகொடுத்த நீல வானத்தைப் போலவே கழிந்தது.
வீட்டுக்கு வந்த விருந்தினரை வீதியிலேயே வைத்து வழியனுப்பியது போன்ற உணர்வு உறுத்துவதை மறைக்க முடியவில்லை.
மானுட நன்மைக்காக பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகள், வீதிகளில் பொது சந்திப்புகள், சிறப்பு சொற்பொழிவுகள், நல்லிணக்கத்தை நிறுவும் இஃப்தார் நிகழ்ச்சிகள் யாவும் தவிர்க்கப்பட்டு அவரவர் இல்லங்களிலேயே ரமலான் நோன்புகள் கடைப்பிடிக்கப்பட்டு, பெருநாளும் அவ்வாறே திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஏழைகளுக்கு வாரி கொடுக்க பணமும், மனமும் இருந்தும் வாங்கும் வறியோர் யாரையும் வீதிகளில் காண முடியவில்லையே என்ற ஏக்கமும்; கொடுத்து கொடுத்து கை சிவந்து, அதன் மூலம் இறையன்பை கூடுதலாக பெற முடியாமல் போய்விட்டதே என்ற வாட்டமும் பரவலாக இருக்கிறது.
எனினும் அமைதியான சூழலில் இறைவனை வழிபடவும், நோன் போடு தவமிருந்து பிரார்த்திக்கவும் கூடுதல் நேரம் கிடைத்தது என்பது ஒரு ஆறுதலாக இருந்தது.
கொரணா நெருக்கடியிலிருந்து உலகம் மீள ஒவ்வொருவரின் உள்ளங்களும், உதடுகளும் இன்றவனிடம் உருகியது என்பதும்,பிறர் நலனை பாதுகாப்பதில் அக்கறையும் பெருகியது என்பதும் மனநிறைவை தரும் செய்திகளாகும்.
கொரணா கிருமியின் அச்சுறுத்தலுக்கும், வாழ்வின் நம்பிக்கைக்கும் இடையிலான போராட்டத்தில் நாம் உறுதியாக வெற்றி பெறுவோம் என்ற இறைநம்பிக்கையுடன் இந்த ரமலான் விடைபெற்று பெருநாளை கொண்டாட உலகம் தயாராகிறது.
அந்த உணர்வுகளுடன் ரமலான் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகை அச்சுறுத்தும் கொரணா நெருக்கடியிலிருந்து மீண்டு , புத்துலகை உருவாக்க இந்நன்னாளில் உறுதியேற்போம். மகிழ்ச்சி பூத்துக் குலுங்க பிரார்த்திப்போம்.
அன்புடன்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்_செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி,
23.05.2020