You are here

மேட்டுப்பாளையத்தில் போலீஸ் தடியடி..! மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLA கண்டனம்

மழையினால் மேட்டுப்பாளையத்தில் தனியார் கட்டிடம் இடிந்து விழுந்து இதுவரை 17-பேர் இறந்துள்ளதாக வந்திருக்கும் செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த நிலையில் ஒரு கட்டிடம் இடிந்து விழும் அளவிற்கு இருந்ததற்கு அதன் உரிமையாளரே பொறுப்பாவார்.

அந்த வகையில் அந்த கட்டிட உரிமையாளரை கைது செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பல்வேறு கட்சியினர், சமூக அமைப்பினரும் அடங்குவர்.

அவர்களின் கோரிக்கை நியாயமானது.

17 பேரின் உயிரை பறிகொடுத்த நிலையில், அவர்கள் கொந்தளிப்பது இயல்பானது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தி, உரிய அவகாசம் கேட்டு, அவர்களை கலைந்து செல்ல உரிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவர்களை காவல்துறை அணுகிய விதம் நாகரீகமற்றதாக இருக்கிறது.

எட்டி உதைப்பது, கன்னத்தில் அறைவது தொடங்கி, அந்த ஏழை மக்களின் மீது கடும் தடியடிகளையும் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஏழைகள், உழைப்பாளிகள், தங்கள் உறவுகளை பறிகொடுத்து , துயரத்தில் துடிக்கும் போது அவர்களை இப்படித்தான் அணுகுவதா?

காவல் துறையின் இத்தகைய போக்குகளை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என மஜக-வின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மனிதாபிமான விவகாரங்களில் கனிவுடன் பிரச்சனைகளை அணுகுவதே காவல்துறைக்கு சிறப்பு சேர்க்கும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்_செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
02.12.2019

Top