You are here

மஹாராஷ்டிராவில் மீண்டும் சட்டமன்ற தேர்தலை நடத்துவதே தீர்வாகும்.! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேட்டி!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மஜக சகோதரர் காஜா மன்சூர் அவர்களின் “யாசர் மன்ஜில்” இல்லத்தை இன்று பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் CPM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ், ஜமாத் செயலர் தாஜுதீன் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

“வனத்துக்குள் அருப்புக்கோட்டை” என்ற பசுமை அமைப்பின் சார்பில் மரக்கன்று மரக்கன்றுகளை பொதுச்செயலாளர் நட்டு அவர்களின் பணிகளை பாராட்டினார்.

முன்னதாக அவ்வூர் ஜமாத் நடத்தும் அல் அமீன் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அங்கு ஜமாத்தினரும், ஊர் பிரமுகர்களும் அவரை சந்தித்து உரையாடினர். பல சமூக மக்களும் படிக்கும் வகையில், கல்வி நிறுவனத்தை உருவாக்கி சிறப்பாக நடத்துவதற்காக, ஜமாத்தை பாராட்டினார்.

தொடர்ந்து மஜக கொடியை, தொண்டர்களின் எழுச்சி முழக்கத்திற்கிடையே ஏற்றி வைத்தார்.

பிறகு, பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், மராட்டிய அரசியலில் ஜனநாயகத்தின் ஈரல்குலை பிடுங்கப்பட்பிருப்பதாக குற்றம் சாட்டினார். சிவசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் அங்கு சந்தர்ப்பவாத அரசியலை செய்வதாகவும், எனவே அங்கு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது தான் தீர்வாக இருக்கும் என்றார்.

பாலில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், இது குறித்து வந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ரஜினி – கமல் இணைவு குறித்து கூறுகையில், 3 மணி நேரம் ஓடும் சினிமாவில் செயற்கையாகவே ஒருங்கிணைந்து நடிப்பதில் ஈகோ காட்டி பிரிந்தவர்கள், அரசியலில் இணைவது சாத்தியமில்லை என்றார்.

இலங்கை தேர்தல் முடிவு குறித்து கூறுகையில் புதிய அதிபர் கோத்தபய ராஜேபக்ஷேவும், பிரதமர் மஹிந்த ராஜேபக்ஷேவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், மொழி மற்றும் மத சிறுபான்மையினரை அரவணைக்க வேண்டும் என்றார். அங்கு தமிழர் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய படையினரை ரோந்து பணியில் ஈடுபட செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.

இப்பேட்டியின் போது மஜக துணைப் பொதுச் செயலாளர்கள் மன்னை.செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, மண்டலம். ஜெய்னுலாபுதீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில துணைச் செயலர் நாகை முபாரக், விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், மாவட்ட பொருளாளர் பாதுஷா மற்றும் மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தகவல்,
மஜக தகவல் தொழில் நுட்ப அணி
விருதுநகர் மாவட்டம்.

Top