நவ.19,
கவிஞர் காரை ஜின்னா அவர்கள் எழுதிய “கவிதை தேன்” என்ற நூலை நாகூரில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட, இந்திய தேசிய லீக்கின் அகில இந்திய பொதுச் செயலாளர் MGK நிஜாமுதீன் பெற்றுக் கொண்டார்.
நூலை வெளியிட்டு பொதுச் செயலாளர் பேசியதாவது:-
https://m.facebook.com/story.php?story_fbid=2099654636800967&id=700424783390633
நூல் வெளியீட்டு விழாக்கள் குறைந்து வருவதும், அதில் பார்வையாளர்கள் குறைந்து வருவதும் ஆரோக்கியமான விஷயமல்ல.
அது போல், நூல் வாசிப்பாளர்கள் எண்ணிக்கையும் குறைந்து வரும் நிலையில், படைப்பாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
முதிர்ச்சிமிக்க சமூக அமைப்பில் இது குறித்து ஆராய வேண்டும். கவலைப்பட வேண்டும்.
நூல் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என கருதி பலரும் அஞ்சும் நிலை உருவாகி உள்ளது.
மலையாளம், வங்கம், மராட்டிய மொழிகளில் நூல்கள் வெளியாகி, ஒரே வருடத்தில் பல பதிப்புகளை காணுகின்றன. தமிழில் அந்த நிலை குறைந்து வருகிறது.
தமிழக முஸ்லிம் சமூகம் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பணி ஆற்றியுள்ளது. தற்போது இதில் ஒரு சுணக்கம் நிலவுகிறது.
நாகூர் என்பது பல கவிஞர்களை, இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை, கலை படைப்பாளிகளை தந்த ஊர்.
நாகூர் அனீபா, கலைமாமணி கவிஞர் சலீம் ஆகியோர் சமீப கால உதாரணங்களாகும்.
புலவர் குலாம் காதிறு பாவலர் போன்றோர் பிறந்த ஊர் இது. இங்கேயும் அதே நிலைதான் உள்ளது.
இன்றைய தலைமுறையிடம் கவிதை, கலை, இலக்கியங்களை அலட்சியப்படுத்தும் போக்கு உள்ளது. அதில் புரிதலை ஏற்படுத்தும் கடமை நமக்கு உள்ளது.
நமது மார்க்கம் மிகை கற்பனைகள், ஆபாசங்கள், போலித்தனங்களை தேவையற்றது என ஒதுக்குகிறது.
ஆனால், மக்களுக்கு பயன் தரும் நல்ல கலைகளை, கவிதை, இலக்கியங்களை மதிக்கிறது.
எனவே, நாம் நல்ல எண்ணங்களை வளர்க்கும் கலை, இலக்கியங்களை ஊக்குவிக்க வேண்டும்.
பொது நிகழ்ச்சிகளில் கவிக்கோ அப்துல் ரஹ்மானை ஒரளவு கொண்டாடினார்கள். கவிஞர் மேத்தா, தி.மு. அப்துல் காதர் போன்றோரை அவ்வளவாக கொண்டாடவில்லை.
படைப்பாளிகளையும் அவர்களின் உழைப்பையும், அறிவையும் போற்ற வேண்டும்.
ஆபாசமற்ற கலை, பயனுள்ள இலக்கியங்களை முற்றிலுமாக எதிர்க்கும் போது, அதன் எதிர் விளைவாக வன்முறை சிந்தனைகள், இறுக்கமான போக்குகள் உருவாகும் ஆபத்துகள் இருப்பதையும் மறுக்க முடியாது.
பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் மார்க்கம், அரசியல், கலை, இலக்கியம் போன்ற பன்முக ஆற்றல் கொண்டவர்களாக உருவாக வேண்டும்.
நமது முந்தைய தலைவர்களிடம் அந்த திறன்கள் இருந்தன.
சம்சுரேமில்லத் அப்துல் லத்தீப் சாஹிப் அவர்கள் பன்மொழி புலவராக அரசியலில் திகழ்ந்தார்.
ஒரு முறை சட்டமன்ற விடுதியில் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நானும் நண்பர் ஹாரூணும் போயிருந்தோம்.
அண்ணன் நிஜாமுதீன், நாசர் போன்றோர் MLA க்களாக அவருடன் உட்கார்ந்திருந்தனர்.
அப்போது கோவையில் நடைப்பெற்ற விரும்பத்தகாத சம்பவம் ஒன்று குறித்து ஒரு செய்தியாளர் கேள்வியை எழுப்பினர்.
அதற்கு சுருக்கமாக, எதுகை, மோனையோடு அவர் பதில் அளித்தார்
“எல்லைகள் மீறினால்,
தொல்லைகள் வரும்.”
இது தான் அந்த பதில்.
ஒரு முறை தோப்புத்துறை MSF அமைப்பின் கல்வி மலருக்கு வாழ்த்து செய்தி கேட்டு, நானும், நண்பர் ஹஸனும் போயிருந்தோம்.
“மேற்கில் தோன்றிய சூரியனின் கதிர்வீச்சால், உந்தப்பட்டவர்கள் வாழும் ஊர்” என இஸ்லாத்தின் தாக்கத்தையும், முஸ்லிம்கள் அங்கு வாழ்வதையும் இலக்கிய நயம்பட கூறினார். அது அவரது சுவையான இலக்கிய போக்காகும்.
அது போல் சிராஜில் மில்லத் அப்துல் சமது சாஹிப் அவர்கள் பேச்சு, எழுத்து, இலக்கியம் என பெரும் ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தார்.
நீல வானத்தை பற்றி குறிப்பிடும் போது, “தூண்களே இல்லாத வானத்தை படைத்த இறைவன்” என்று வர்ணித்தார். மின்னலை பற்றி குறிப்பிடும் போது, “உள்ளங்கை ரேகைகளை போல வானத்தில் பளிச் என மிளிரும் மின்னல் ” என்றார். இது அவரது இலக்கிய கற்பனையாகும்.
புனித ரமலான் செய்தி ஒன்றில்,
“இறைவனை வணங்கி வாழ்வோம். இல்லாதார்க்கு வழங்கி வாழ்வோம். எல்லோரோடும் இணங்கி வாழ்வோம் ” என்று எழுதினார்.
மணிச்சுடரில் அவரது எழுத்துகளை ரசித்துப் படிப்பேன். அவர் அண்ணா மற்றும் கலைஞருக்கு நிகரான பேச்சு மற்றும் எழுத்தாற்றல் கொண்டவராக திகழ்ந்தார்.
ஒரு தலைவரின் ஆற்றல் என்பது பேச்சு, எழுத்து,இலக்கியம், ஆளுமை அனைத்தும் கொண்டதாகும்.
இன்று நவீன காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் மறுமலர்ச்சி மிக்க சிந்தனைகள் தேவை.
இந்த சூழலில் பொது அறிவை தூண்டும் பத்திரிக்கைகளும் குறைந்து வருகிறது கவலை தருகிறது.
முன்பு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று, யூசுப் சாஹிப் நடத்திய மறுமலர்ச்சி வார இதழை படிக்காமல் தூக்கமே வராது.
ஷஹீத் பழனி பாபா அவர்களின் அல் முஜாஹித், முக்குல முரசு, புனிதப் போராளி பத்திரிக்கைகளும் விழிப்புணர்வை கொடுத்தன. அவை எல்லாம் இன்று காணமல் போய் விட்டன.
இப்போது, நஷ்டம் காரணமாக “சமநிலை சமுதாயம் ” போன்ற பல பத்திரிக்கைகளும் நின்று விட்டன.
இவை கவலை தரும் செய்திகள் ஆகும்.
இது போன்ற நிலையில் காரை ஜின்னா போன்ற படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், சிராஜில் மில்லத் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் இந்நிகழ்வை நடத்துவது பாராட்டத்தக்கது.
ஒரு நூலில் எல்லாமே நன்றாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்க கூடாது. எந்த படைப்பாளிகளின் நூல்களும் அவ்வாறு இருக்கவும் முடியாது. நமக்கு பிடித்ததை அதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
இப்படித்தான் பெரியார் திருக்குறளையும் அணுகினார்.
அந்த வகையில் நூல்களை நேசித்து வாசிக்க வேண்டும். படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு, இந் நூலை எழுதிய கவிஞர்.காரை ஜின்னா அவர்களை பாராட்டி , வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் செ.செய்யது ரியாசுதீன், மஜக தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளர் AHM ஹமீது ஜெகபர், வழுத்தூர் அல்ஹாஜ் பஷீர், திட்டச்சேரி கவிஞர் அன்வர்தீன், நாகூர் முஸ்லிம் சங்க தலைவர் V. சாதிக், மஜக மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
(இந்நூல் பெற: 9789550768)
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.