உலகில் ஜனநாயகம் செழித்தோங்கும் தேசங்களில் அமெரிக்கா முதலிடம் பெறுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்பு அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இரு துருவங்களாக செயல்பட்டு உலகை ஆளுமை செலுத்தின.
1991-ல் சோவியத் யூனியன் சிதைந்தப்பிறகு, அமெரிக்கா ஏக வல்லரசாக மாறியது. அதன் பிறகு அமெரிக்காவின் தேர்தல் உலகம் முழுக்க ஆவலோடு எதிர் நோக்கப்படுகிறது.
தற்போது 2016-க்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முற்றிலும் புதிய சூழலில் நடைபெற்றிருக்கிறது. தனிநபர் விமர்சனங்கள், இனவாதம், பெண்கள் மீதான விமர்சனம் என நிறம் மாறியது.
கடந்த இரண்டு தேர்தல்களில் ஜனநாயக கட்சி சார்பில் கருப்பு இனத்தை சேர்ந்த பராக் ஒபாமா அதிபராக வெற்றி பெற்று அமெரிக்கா மக்களின் பன்மை கலாச்சாரத்தை பிரதிபலித்தார்.
ஆனால் இந்த தேர்தலில் ஒரு பெண் என்ற அடிப்படையிலும், பல்வேறு இன மக்களின் உணர்வுகளை மதிப்பவர் என்ற அடிப்படையிலும் ஹில்லாரி வெற்றி பெறுவார் என பரவலாக பேசப்பட்டது.
நம்மை போன்றவர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. காரணம் ட்ராம்ப் பெண்களுக்கு எதிரானவர்;
பல்இன மக்களின் கூட்டுக் கலாச்சாரத்திற்கு எதிரானவர் ; என பல்வேறு பிம்பங்களை அவரே வெளிப்படுத்தினார்.
நேற்று காலை வெளியான தேர்தல் முடிவுகள் ஹில்லாரியை விட கூடுதல் இடங்களை பெற்று ட்ராம்ப் வெற்றிப் பெற்றார் என்பதை உணர்த்தியப்போது அது அதிர்வை அளித்தது.
ஒரு பெண்ணை அதிபராக கொண்டு வந்தோம் என்ற வரலாற்று வாய்ப்பை அமெரிக்கா இழந்திருக்கிறது.
“பைபிளை நம்புபவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்” என்ற பிரச்சாரமும், யூத சக்திகளின் ஆதரவும், பிற சமுகங்களை சார்ந்த மதவெறி அமைப்புகளின் பிரச்சாரமும் ட்ரம்புக்கு கைக்கொடுத்திருக்கிறது.
இது அமெரிக்காவின் ஜனநாயக கலாச்சாரத்திற்கு எதிரான புதிய போக்கு என்பதில் ஐயமில்லை.
இது எதிர்கால அமெரிக்காவுக்கும் நல்லதல்ல.
போர் வெறிப்பிடித்த ட்ரம்ப், உலகின் அமைதியை எவ்வாறு பராமரிக்கப் போகிறார் என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பு எப்படி இருந்தாலும், அமெரிக்கா அரசின் அதிபர் என்ற இடத்தை ட்ரம்ப் அடைந்துள்ள நிலையில், அவர் நிதானமாக செயல்பட வேண்டும் என உலகம் எதிர்பார்க்கிறது.