சிறைவாசிகள் விடுதலை! சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!

image

சென்னை.ஜன.11.,  சட்டசபையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று (11-01-2018) பேசினார்.

அவரது உரையின் துவக்கமாக அனைவருக்கும் பொங்கல் முன் வாழ்த்துக்களை கூறினார். பிறகு மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி என்ற பேரறிஞர் அண்ணாவின் முழக்கத்தை எடுத்துக்கூறி, இதில் இந்த அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், இதனை விட்டுக்கொடுப்பவர்களை தமிழக மக்கள் விட்டுக் கொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினார்.

முத்தலாக் மசோதாவிற்கு தமிழக அரசு துணிச்சலோடு எதிர்ப்பு தெரிவித்ததற்கும், கடந்த டிசமபர் 7 ம் தேதி, தான் முதல்வர் எடப்பாடியார் அவர்களை சந்தித்தபோது அவரிடம் கேட்டுக்கொண்ட பின் மத்திய அரசுக்கு எதிராக, முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் நிலைப்பாடு எடுத்ததற்காக தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்யப்படுவதாக, திண்டுக்கல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவுப்பு செய்ததற்காக தனது நன்றிகளை கூறியவர், இதில் சாதி, மத, வழக்கு பேதமின்றி சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், இதில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். “அந்த குடும்பங்களை நீங்கள் 5 நிமிடம் சந்தித்து பேசினால் அவர்களது துயரம் எல்லோரையும் உருக வைக்கும்” என்றவர், இதில் துணிச்சலோடு முடிவெடுத்தால் வரலாறு உங்களை பாராட்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்டு இதற்கு பதிலளித்த முதல்வர் அவர்கள், இவ்விசயத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்று பதிலளித்தார்.

மீண்டும் எழுந்து பேசிய தமிமுன் அன்சாரி அவர்கள், அரசியல் சாசன சட்டம் மாநில இறையாண்மைக்கு வழங்கியுள்ள 161 வது சட்டப் பிரிவை பயன்படுத்த வேண்டும் என்றும், இதனை தங்களின் இரு கரங்களையும் பற்றி பிடித்து கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

இதில் தானும், மாண்புமிகு உறுப்பினர்கள் தனியரசு, கருணாஸ் மட்டுமல்ல, இந்த அவையில் உள்ள ஆளும்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒத்தக் கருத்திலேயே உள்ளனர்.

தேவைப்பட்டால் இதற்காக சட்டமன்றத்தில் ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்றார்.

அப்போது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை ஆமோதிக்கும் வகையில் முகப்பாவனைகளை வெளிப்படுத்தினர்.

அத்தோடு நில்லாமல் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கும் மத்திய அரசிடம் தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அவரது இந்த கருத்துக்கள் அவையில் பேசப்பட்டபோது முழு அவையும் பேரமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.

(அவரது உரையின் இதரப்பகுதிகள் அடுத்தடுத்து வெளியிடப்படும்…)

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்_சென்னை
11-01-2018