#மறைமலை_அடிகளின்_பெயரால்_தனித்தமிழ்_ஆராய்ச்சி_நிலையம்_வேண்டும்!
#முஸ்லிம்கள்_இடஒதுக்கீட்டை_உயர்த்தி_தர_வேண்டும்!
#நாகப்பட்டினம்_துறைமுகத்தை_ஆழ்கடல்_துறைமுகமாக_செயல்படுத்த_வேண்டும்!
இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MA,MLA., பட்ஜெட் பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பட்ஜெட்டை வரவேற்று பேசிய அவர் :
“இது வரியில்லாத பட்ஜெட்;
மக்களுக்கு வலி கொடுக்காத பட்ஜெட்;
எதிர்தரப்புக்கு வழி கொடுக்காத பட்ஜெட்”
என்று பேசியதும் பேரவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்,
பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு மிகுந்த மதிநுட்பத்தோடு செய்யப்பட்டு இருப்பாதாக கூறியவர், தனது தொகுதி கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
மறைமலை அடிகளார் பெயரில்
============================= ஆராய்ச்சி நிலையம் வேண்டும்:
தமிழ் வளர்ச்சி துறைக்கு இந்த அரசு அறிவித்துள்ள திட்டங்களையும்,நிதி ஒதுக்கீட்டையும் வரவேற்றவர்,இது தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக்காலம். எனவே தனிதமிழுக்கு குரல் கொடுத்த, தமிழ் வரலாற்றின் வைரமாக திகழும் ஐயா.மறைமலை அடிகளார் பெயரால்,அவர் பிறந்த நாகப்பட்டினத்தில் நூலகத்துடன் கூடிய தனித்தமிழ் ஆராய்ச்சி மையத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இலங்கை தமிழ் அகதிகள் நலன்:
=========================
இலங்கை தமிழ் அகதிகளின் நலனுக்காக தமிழக அரசு செய்து வரும் திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் வரவேற்றவர் ,இது உலகமெங்கும் தேசத்தை கடந்த நதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஒர் நற்செய்தி என்று பாரட்டினார்.
மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு, ஈழத் தமிழர்கள் மீது வைத்திருக்கும் அக்கறையை இது உணர்த்துவதாக குறிப்பிட்டார்.
நாகைக்கு துறைமுகம் வேண்டும்:
===============================
தனது நாகப்பட்டினம் தொகுதியில் ஆழ்கடல் துறைமுகத்தின் தேவை குறித்து விரிவாக பேசினார். கடல் கடந்து வெற்றிகளை பெற்ற ஒரே பேரரசாம் சோழப் பேரரசின் துறைமுகம் இங்கு இயங்கியதை குறிப்பிட்டவர், மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் “தனியார் பங்கேற்புடன் பசுமை சூழலுடன் கூடிய ஆழ்கடல் துறைமுகம்”
நாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் என சென்ற ஆட்சியில் கூறியதை நினைவுப்படுத்தி,அதை செயல்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் அவர் வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நாகப்பட்டினத்திற்கு புகழாரம்:
============================
தனது நாகப்பட்டினம் தொகுதி பற்றி கூறும் போது, இது சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற ஊர் என்றும், இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும் ஒற்றுமையாக வாழும் ஊர் என்றும் சிலாகித்தார்.மேலும் நாகை துறைமுகம் முன்பு உலகத்தையே தமிழகத்தோடு இணைத்தது என்றும் குறிப்பிட்டார்.
மீனவர் நலன்:
==============
இலங்கை சிறையிலே வைக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைக்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டவர்,மீன்பிடி தடைக்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிவாரண உதவியை 5000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதற்க்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.
விவசாயிகள் நலன்:
===================
இந்த ஆட்சியில்,தேர்தல் வாக்குறுதிகளின் படி
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு வரும் நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் 6 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பாராட்டினார்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்”
என்ற குறளின் படி இந்த அரசு வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுப்பதாக பாராட்டினார்.
சிறுபான்மை மக்கள் நலன்:
============================
சிறுபான்மை மக்களின் பேராதரவை பெற்ற அரசாகவும், சிறுபான்மை மக்களின் மீது பேரன்பை செலுத்தும் அரசாகவும் இந்த அரசு திகழ்வதாக குறிப்பிட்டவர், இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார்,
சுவாதி கொலை வழக்கில் சமூக இணைய தளங்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் முஸ்லீம் சமுதாயத்தின் மீது பழிச்சுமத்தியபோது, முதல்வர் அவர்கள் காவல்துறையை சுகந்திரமாக, பதட்டமில்லாமல் செயல்பட அனுமதித்ததை சுட்டிக்காட்டி பாராட்டினார், அதனால் தான் ஒரு சமுதாயம் பழியிலிருந்து காப்பாற்றப்பட்டு உண்மை குற்றவாளி கைது செய்யப்பட்டார் என்று கூறினார்.
முதல்வர் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி குறித்து ஒரு புதிய செய்தியை பதிவு செய்தார்.
தனது சொந்த செலவில், அழைப்பிதழில் தன் பெயரை போட்டு முதல்வர் அம்மா அவர்கள் நடத்தும் ஒரே நிகழ்ச்சி இஃப்தார் நிகழ்ச்சி மட்டும்தான் என்றவர், ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்த இஃப்தார் நிகழ்ச்சி அடிப்படையில், வட இந்தியாவை போல; நோன்பாளிகளை அழைத்து, தன் செலவில் இப்தார் நடத்தும் முறையை தமிழகத்தில் முதலில் கொண்டு வந்தவர் முதல்வர் அம்மா அவர்கள்தான் என்றார்.
எனவே, சிறுபான்மை மக்களின் மீது அக்கறை கொண்ட அவர், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார் என நம்புவதாக கூறினார்.முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்க 2001_2006 ஆட்சியில் போது முதல்வர் அம்மா பிறப்பித்த அரசாணை தான் பிறகு சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வழிவகுத்தாக கூறினார்.
எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள்
முஸ்லீம்களின் 3.5% இடஒதுக்கீட்டை உயர்த்தி தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
கிறித்தவர் நலன்:
=================
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஏழைக் கிறித்தவர்கள் ஜெரூசலம் செல்ல மானியம் வழங்கப்படுவதாக கூறியவர், அதை முதல்வர் அம்மா அவர்கள் தான் நடைமுறைப்படுத்தியதாகவும் அது தொடரும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு நன்றியினை தெரிவித்து கொண்டார்.
சபாநாயகருக்கு கோரிக்கை:
அவர் தொடந்து பேசியபோது சபாநாயகர் அவர்கள் இரண்டு முறை மணியடித்து விரைவில் முடித்துக் கொள்ளுமாறு கூறியவுடன் சபாநாயகரை பார்த்து:
எல்லோரையும் அன்பால்;
தலைமைத்துவ பண்பால்;
தன்பால் இழுக்கக் கூடியவர் நீங்கள்;
என்றதும் சபாநாயகர் சிரித்துவிட்டார்.
சபாநாயகர் பெயரை “தனபால்” என்று சொல்லாமல் “தன்பால்” என சிலேடை நயத்துடன் பேசியதை அனைவரும் ரசித்தனர்.
அடிக்கடி எனக்கு வாய்ப்புகள் தாருங்கள் என நன்றி கூறி தனது உரையை முடித்து கொண்டார். அவர் பேசி முடித்ததும் பல அமைச்சர்களும், உறுப்பினர்களும் சைகை மூலம் பாராட்டு தெரிவித்தனர்.
செய்தி தொகுப்பு;
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்_நாகை