(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)
நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்றப் பிறகு,பாஜக தலைவர்களும்,காவி இயக்கங்களின் தலைவர்களும் முன்பை விட மோசமான கருத்துக்களை மனம்போன போக்கில் பேசி வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிமை மிக்க தலைவராக விளங்கும் மாயாவதி அவர்களின் மீது வைக்கப்பட்ட தரம் தாழ்ந்த விமர்சனமாகும்.
குஜராத்தில் செத்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி,இந்துத்துவ இயக்கங்களை சேர்ந்த வெறிப்பிடித்தவர்கள்,தலித்துக்களை மிக மோசமாக பொது இடத்தில் தாக்கி அவமானப்படுத்தியுள்ளனர்.மனிதநேயம் கொண்ட அனைவரையும் வேதனைக்குள்ளாக்கிய இக்கொடூர சம்பவத்தை தார்மீக உணர்வுடன் மாயாவதி கண்டித்துள்ளார்.
இதை சகித்து கொள்ள முடியாமல், உ.பி மாநில பா.ஜ.க துணை தலைவர் தயாசங்கர் சிங் அவர்கள் மாயாவதி மீது வைத்த நாகரீகமற்ற விமர்சனம்,பெண்களையும்,தலித்துகளையும், இழிவுப்படுத்தியதோடு, பொது வாழ்வில் செயல்படும் அனைவரையும் குலை நடுங்க செய்து இருக்கிறது.
நாடெங்கிலும் எழுந்த கண்டனம் காரணமாக பா.ஜ.க தலைமை அவர்மீது நடவடிக்கைகள் எடுத்தாலும் அது போதாது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
அது போல் குஜராத்தில் தலித்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் அதே சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்விரு சம்பவங்களையும் கண்டித்த அனைத்து அரசியல் தலைவர்களும்,சமுதாயத் தலைவர்களும் பாரட்டாக்குரியவர்கள். இதன் மூலம் தங்களது சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
பா.ஜ.கவும்,ஆர்.எஸ்.எஸ்ம் தங்கள் சகாக்களை, தங்கள் ஆதரவு இயக்க தலைவர்களை கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியாவின் ஜனநாயகமும்,பொது ஒற்றுமையும் பாழாகிவிடும் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.