மார்ச்.19.,
இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தலைமை நிர்வாகக் குழுவினர் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் தளபதி. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர்.
2024- நாடாளுமன்ற தேர்தலில் மஜக எந்த திசையில் செல்லும்? என்ற கேள்வி பரபரப்பாக இருந்தது.
கடந்த பிப்ரவரி 28, அன்று மயிலாடுதுறையில் மஜக நடத்திய பொதுக் குழுவில் இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கப்பட்டது.
தலைமை நிர்வாகக்குழுவின் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் கடந்த இரண்டு வார புதிய அரசியல் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஏதாவது ஒரு கூட்டணியில் தொகுதியை பெற்று போட்டியிடுவதா?
நாடு தழுவிய அளவில் மோடியிசத்தை வீழ்த்த வேண்டும் என்று உருவாகியுள்ள மக்கள் மனநிலையை உணர்ந்து பொது நல முடிவு எடுப்பதா? என்ற கேள்விகள் எழுந்தது.
காங்கிரஸ் தரப்பிலிருந்து தரப்பட்ட வேண்டுகோளும் பரிசீலிக்கப்பட்டது.
தொடர்ந்து சான்றோர்கள் – அறிஞர்கள் சந்திப்புகளிலும், பாஜக ஆட்சியை அகற்றும் வண்ணம் உங்கள் முடிவுகள் இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
அதன் பிறகே அனைத்தையும் விவாதித்து துணிச்சலான- தியாகப் பூர்வமான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என முடிவானது.
இறுதியாக திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இது முன்னணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இத்தகவலை திமுக தலைமைக்கு தெரியப்படுத்தியதும், 24 மணி நேரத்தில் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு தகவலறிந்த ஊடகங்கள் Breaking news போட பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அதற்குள் சென்னை மண்டலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மஜக நிர்வாகிகள் அறிவாலயத்தில் திரண்டனர்.
தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பொருளாளர் J.S.ரிஃபாயி, துணைத் தலைவர் மன்னை செல்லச்சாமி, இணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம், தாஜூதீன் ஆகியோர் அமர்ந்த கார் முதலில் அறிவாலயம் வந்தது.
பிறகு மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை. முபாரக், கோவை. M.H.ஜாபர் அலி, நெய்வேலி. இப்ராகிம், பாபு ஷாஹின்ஷா ஆகியோர் வந்த வாகனம் அடுத்து வந்தது.
உடனே தொலைக்காட்சிகள் நேரலை ஒளிபரப்பை தொடங்கினர்.
உள்ளே மஜக தலைவரையும், நிர்வாகிகளையும் தளபதி. ஸ்டாலின் அவர்கள் உற்சாகமாக வரவேற்றார்.
அப்போது திமுக நிர்வாகிகள் T.R.பாலு, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, திருச்சி சிவா ஆகியோரும் இருந்தனர்.
‘நாம் சந்தித்து ரொம்ப நாளாச்சி’ என்றதும், உடனே முதல்வர் அவர்கள் ‘இல்லை… ரொம்ப வருடங்கள் ஆயிடுச்சே’ என்றார் சிரித்துக் கொண்டே.
பிறகு பூங்கொத்து கொடுத்த பிறகு தலைவர் தமிமுன் அன்சாரி அவர்கள் தான் எழுதிய ‘புயலோடு போராடும் பூக்கள் ‘ என்ற கவிதை நூலை கொடுத்தார்.
தலைப்பை படித்ததும் அதை ரசித்து சிரித்தார்.
கடந்த ஈராண்டுகளாக ஆயுள் சிறைவாசிகள் விஷயத்தில் மஜக சமரசமற்ற மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இச்சந்திப்பு சுவராஸ்யமாக அமைந்தது.
பிறகு பல்வேறு விஷயங்கள் மகிழ்ச்சியுடன் பரிமாறப்பட்டது.
ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுபுறம் இருந்தும், கொள்கை ரீதியாக ஒரு முடிவை எடுத்து நம்மிடம் வந்துள்ளார்கள் என அமைச்சர் எ.வ.வேலு கூற எல்லோரிடமும் மகிழ்ச்சி அலை ஏற்பட்டது.
15 நிமிடங்களுக்கு மேல் சந்திப்பு நடந்தது.
பிறகு வெளியே வந்து மஜக தலைவர் அளித்த பேட்டி பல தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட, முகநூல் முழுக்க இதுவே செய்தியாக நிரம்பி வழிந்தது.
எதிரிகளை வீழ்த்த கட்டுமரத்தில் பயணிப்பதா? போர் கப்பலில் பயணிப்பதா? என்ற நிலையில் போர் கப்பலில் ஏறியுள்ளோம் என்றதும், அதிமுகவை கட்டு மரம் என்கிறீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி தொடுத்தார்.
யாரையும் சிறுமைப்படுத்தவில்லை என்றவர், வலிமையான மாற்று என்ற அளவில் இக்கருத்தை கூறுவதாக கூறினார்.
உங்களுக்கு ராஜ்யசபா தருவதாக சொன்னார்களா? என்றதும், உள்ளுக்குள் பேசியதை வெளியே எப்படி பேச முடியும்? என்றவர், எங்களுக்கு இப்போது இந்த தேர்தல் களம் சித்தாந்தங்களுக்கு இடையிலானது என்பதால் அதில் வெல்வதே நோக்கம் என்றார்.
எங்கள் கட்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பிறகு தளபதி அறிவிப்பார் என்றார்.
அது போல் எங்களுக்கு 40 தொகுதிகளை தந்துள்ளார்கள் என்று அவர் கூறியது செய்தியாளர்களால் ரசிக்கப்பட்டது.
அங்கு நடந்த இன்னொரு தனிப் பேட்டியில், மமக இங்கு இருக்கும் போது, உங்களுக்கு சங்கடம் வராதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர், ஒரு வீதியில் வீடு தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க யார் வருகிறார்களோ ; அவர்களோடு இணைந்து அதை அணைப்போம் அல்லவா… அப்படித்தான் எங்களுக்கு இந்த களம் உள்ளது என கருதுகிறோம் என்றார்.
அடுத்தடுத்து ஊடகங்கள் அங்கு தனிப்பேட்டி கேட்க, இங்கு வேண்டாம்; சிரமமாக போய்விடும் என்றவர், மஜக அலுவலகம் வாங்க என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
இன்று மஜக எடுத்த தியாகப் பூர்வ முடிவு சமூக வலை தளங்களில் Viral ஆகி வரவேற்பை பெற்றுள்ளது.
மறுபுறம் பொதுமக்களிடம் அன்றும், இன்றும் பதவிக்கு முன்னுரிமை தராமல், மஜக நாட்டு நலனை – ஜனநாயகத்தை முன்னிறுத்தி கொள்கை முடிவை எடுத்துள்ளது என்ற பாராட்டு எங்கும் ஒலிக்கிறது.
ஆம்! இப்போது மஜக மீண்டும் தியாகம் செய்துள்ளது.
ஆனால் மஜக தூர நோக்கு களத்தை உறுதி செய்து விட்டது!