எமனேஸ்வரம் சான்றோர் சந்திப்பு நிகழ்வு…

இராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியை பலப்படுத்தும் நோக்கில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தொடர் சந்திப்புகள் நடத்தி வருகிறார்.

இவற்றுக்கிடையில் சான்றோர் சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக எமனேஸ்வரதில் சான்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தந்த பொதுச் செயலாளர் அவர்களுக்கு, ஜெய்னுல் ஆலம் அவர்கள் ஜமாத் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்றார்.

இங்கு வருகை தந்த ஜமாத்தினர்களுக்கு மத்தியில் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி பேசியதாவது…

“சமகாலத்தில் நாடு சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இவற்றை சாதுர்யமாகக் கையாள்வதில் தான் வெற்றி உள்ளது.

சிறுபான்மையின மக்கள் பாசிசத்தை எதிர்கொள்ளும் போது பதற்றம் அடைய தேவை இல்லை.

இம்மண்ணில் வாழும் ஏனைய மக்களுடன் இணைந்துதான் அதை எதிர்கொள்ள வேண்டும்.

ஆவேசமும், ஆக்ரோஷப் பேச்சுக்களும் ஒரு காலத்திலும் வெற்றியைத் தராது என்பதை உணர வேண்டும்.

அதுபோல் தாழ்வு மனநிலையோ, விரக்தியோ அடையத் தேவையுமில்லை.

வெறுப்பு அரசியலும், பிரிவினை அரசியலும் நிரந்தர வெற்றியடைய போவதுமில்லை.

இதை சரியான யுக்திகளின் வழியாக எதிர்கொள்ள வேண்டும்.

சமூக வலைதளங்களில் சிலர் பொறுப்பின்றி பதிவிடும் கருத்துக்கள் பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது.

நடுநிலையாளர்களைக் கூட எதிரிகளின் பக்கம் தள்ளிவிடுகிறார்கள்.

சமூக வலைதளங்கள் திறந்தவெளி திடல்களாக உள்ளன. அதில் எதை எழுத வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், வெறும் பார்வையாளர்களாக எதில் கடந்து செல்ல வேண்டும் என்ற பொறுப்புணர்வும், பொது அறிவும் அவசியமானது.

அதேபோல் ஒலிப்பெருக்கியில் எங்கோ ஓரிடத்தில் நாம் பேசும் பேச்சை, எங்கோ ஓரிடத்தில் இருப்பவரும் காது கொடுத்துக் கேட்கிறார்கள் என்பதை புரிந்து பேச வேண்டும்.

குறிப்பாக, ஜும்மா உரைகளின் போதும், இதர பொது நிகழ்வுகளிலும் கவனமாகப் பேச வேண்டும்.

நாம் பேசும் ஒரு கருத்தை மற்றவர்கள் எவ்வாறு புரிந்துக் கொள்வார்கள் என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டும்.

பன்மை சமூகத்தில் வாழும் போது நம்மை சுற்றி இருப்பவர்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

ஒரு சிலர் நூறு பேருக்கு உற்சாகம் ஊட்டுகிறோம் என்ற பேரில், ஆயிரம் பேரை பகைத்து விடும் பாதகத்தைச் செய்து விடுகிறார்கள்.

இதனால், எவ்வளவு பெரிய பின்னடைவு ஏற்படுகிறது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

நிதானமான போக்குகளே நிரந்தர நன்மைகளைப் பெற்று தரும்.

பெரும்பான்மையான மக்கள் வகுப்புவாதத்திற்கு எதிராக உள்ளனர் என்பதை உணர்வது முக்கியம். சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தினால் ஃபாஸிஸ்ட்டுகள் தனிமைப்பட்டு போவார்கள்.

அண்டை – அயலாருடன் உறவை மேம்படுத்திக் கொள்வதின் மூலமே அவரவர் வாழும் பகுதிகளில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும்.

உணர்ச்சிகளை தூண்டி சிறைகளுக்கு அனுப்பி வைப்பதையும், வழக்குகளில் சிக்க வைப்பதையும் சமுதாய பணி என்று கூறக்கூடாது.

அறிவை, உணர்ச்சி வெல்ல அனுமதிக்க கூடாது. ‘கோபத்தை வெல்பவனே வீரன்’ என்ற நபிமொழியை எண்ணிப்பார்க்க வேண்டும்.

வளரும் தலைமுறையை உயர்கல்வி படித்த சமூகமாக உருவாக்க வேண்டும். அவர்களது அறிவாற்றலை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

நிறைய சட்ட வல்லுநர்களை, பொருளாதார மேதைகளை, நிர்வாக அதிகாரிகளை உருவாக்கிட வேண்டும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுச் செயலாளரின் உரைக்கு பிறகு அவரை சந்தித்த பிரமுகர்கள், அவரது கருத்துகளை வரவேற்றதுடன், இதுவே, சமூகத்திற்கு பலனளிக்கும் என்றும் கூறினார்கள்.

சுற்றுப்பயணத்தின் நிறைவாக பொதுச்செயலாளர் அவர்கள், இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் புதிதாக 10 கிளைகளை உருவாக்கும் செயல்திட்டத்தை மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்வில், மாநில துணைச் செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான பேராவூரணி. எஸ்.எம்.ஏ.சலாம், மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மீமிசல் கனி, கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முகவை நசீர், கீழை.இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.