மீடியா ஒன் மீதான தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்…. ஊடக சுதந்திரம் வென்றது…!

சமீபகாலமாக ஊடகங்கள் மீது அதிகார சக்திகள் தங்கள் பலத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டும் போக்குகள் அதிகரித்து வருகிறது

இது கருத்து சுதந்திரத்திற்கு பேராபத்தை உருவாக்கி வருகிறது.

ஊடகங்களை நடத்துபவர்களும், செய்தி ஆசிரியர்களும், செய்தி சேகரிப்பாளர்களும் மறைமுக அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்நிலையில் இது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆறுதல் தரும் வகையில் உள்ளது.

நேற்று – 05-04.2023 புதன்கிழமை – மீடியாஒன் தொலைக்காட்சிக்கு எதிரான ஒன்றிய அரசின் ஒளிபரப்புத் தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தனது தீர்ப்பில் ‘பத்திரிகை சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை மீறுவதற்கு ஆதாரமற்ற வகையில் -தேசிய பாதுகாப்பு என்ற கவலைகளை – காரணங்களாக ஒன்றிய அரசு பயன்படுத்த முடியாது ‘ என்று கூறியுள்ளார்.

மீடியாஒன் மலையாள செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தடை வழக்கில், தொடர்ந்து வாத பிரதிவாதங்கள் நடந்துவந்த நிலையில்,
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகவாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒன்றிய அரசு, மீடியாஒன் செய்தி தொலைக்காட்சியின் மீதான தடைக்கு காரணமாக நாட்டின் பாதுகாப்பு கவலைகள் இருப்பதாகவும், அதனை சீலிட்ட உரையில் மட்டுமே தெரிவிக்க முடியும் என்ற கருத்தை ஏற்க இயலாது என்றும் ஆணித்தரமாக அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், அதிகாரத்திடம் உண்மையைப் பேசுவது பத்திரிகைகளின் கடமை என்றும், ஊடகங்கள் விமர்சிக்கும் கருத்துக்களை நாட்டிற்கு எதிரானது என்று கூற முடியாது என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிகு இந்த தீர்ப்பை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

இந்த தீர்ப்பை ஒன்றிய அரசின் அதிகாரங்களில் உள்ளவர்கள் நேர்மையாக அணுகி, தங்கள் போக்குகளை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.

உண்மைக்கும்- அவதூறுகளுக்குமான வேறுபாட்டை புரிந்துக்கொண்டு காழ்ப்புணர்ச்சிர்ச்சியின்றி ஊடகங்களை எதிர்கொள்ள வேண்டும்.

அதிகார பலத்தினால் ஊடகங்களை மிரட்டும் போக்குகள் ஜனநாயகத்தை சீரழித்துவிடும் என்பதையும் உணர வேண்டும்.

இவ்விவகாரத்தில் சட்டத்தின் வழியாக போராடி வெற்றிப் பெற்றுள்ள மீடியா ஒன் மலையாள தொலைக்காட்சிக்கு எமது புரட்சிகர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி

பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
06.04.2023