
ஜனவரி 8. 2022
……………..
10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி பொது மன்னிப்பில் விடுதலை செய்க!
………………
மனிதநேய ஜனநாயக கட்சி வழிநடத்தும் . .
கோவை மத்திய சிறை முற்றுகை!
………………….
…………………,
ஆயுள் தண்டனைக்கு வரையறை இல்லையா?
தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளை கடந்து ஆயுள் சிறைவாசிகளாக வாடுபவர்களை அண்ணா பிறந்த நாளையொட்டி, பொதுமன்னிப்பின் கீழ் முன்விடுதலை செய்வது தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் வரைதான் என்ற பொது புரிதல் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், பாராபட்சம் காரணமாக பலர் 20 ஆண்டுகளை கடந்தும் சிறைவாசம் அனுபவித்து வருவது கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.
தமிழகத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரம், சாதி கலவர வழக்குகளில் தண்டனை பெற்றோர், மதக் கலவரங்களில் தண்டனை பெற்றோர், என பலரும் இந்த சட்ட வளையத்திற்குள் சிக்கிக்கொண்டு விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த அரசாணை நியாயமற்றது
சமூக,மத மோதல் வழக்குகள், வெடிமருந்து வழக்குகள் உள்ளிட்ட 17 வகையான வழக்குகளில் தொடர்புடையோர், பொதுமன்னிப்பின் கீழ் முன் விடுதலையாக தகுதியற்றோர் என்ற தமிழக அரசின் 488/2021 ‘அரசாணை ‘ மக்களிடம் பெரும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.
நாம் சுட்டிக் காட்டும் யாவரும் நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டு, தண்டனை காலத்தை விட அதிகமான வருடங்களை சிறையில் கழித்தவர்கள்.
வாழ்நாளின் எஞ்சிய இறுதி காலத்தில் தங்கள் குடும்பத்தினருடன் அமைதியாக வாழ்வைக் கழிக்க விரும்புபவர்கள்.
சிறைத் தண்டனையின் நோக்கமே குற்றமிழைத்த ஒருவரை திருந்தி வாழச் செய்து, சமூகத்துடன் மீண்டும் இணைந்து வாழச் செய்வதேயாகும்.
தமிழக அரசின் இந்த அரசாணையால் அத்தகைய நல்வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது..
*அபாயகரமான வழக்கில் தண்டனை பெற்றவர்கள் முன் விடுதலையாகவில்லையா?
▪மகாத்மாகாந்தி படுகொலை வழக்கில் நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே, 18 ஆண்டுகளுக்கு பிறகு மராட்டிய அரசாங்கத்தால் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன் விடுதலை செய்யப்பட்டார்.
▪ பழைய தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில், 25.12.1968ல் விவசாயக் கூலித் தொழிலாளிகள் (23,குழந்தைகள் 11பெண்கள் உட்பட) 44 பேரை உயிரோடு எரித்து கொன்ற கொடூர வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 10, குற்றவாளிகளும் பத்து ஆண்டுகளுக்குப் பின் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
▪ தென் மாவட்டத்தில் 30.06.1997ஆம் ஆண்டு 7 பேர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட சாதிய வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற 17 பேரில் மூவர் 15.9.2008 ல் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளிலும், 13பேர், 2019 ஆம் ஆண்டு அதிமுக அரசின் தனி அரசாணையில் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
▪ 1975ஆம் ஆண்டு தூக்கு தண்டனை பெற்ற தோழர் தியாகு ,பொது மன்னிப்பின் கீழ் திமுக அரசால் முன் விடுதலை பெற்று இன்று மார்க்ஸிய – தமிழ் தேசிய சமூக செயல்பாட்டாளாராய் இயங்கி வருறார்.
▪மதுரையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் லீலாவதி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள், பின்னர் திமுக அரசால் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
▪தர்மபுரியில் பேருந்து எரிப்பில் 3 அப்பாவி மாணவிகள்
அநியாயமாக கொளுத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய சிறைவாசிகள் அதிமுக அரசால் (அரசாணை எண் 64/ 2018) முன் விடுதலை பெற்றனர்.
அரிதிலும் அரிதான வழக்கில் இனி சமூகத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்ற நிலையில்தான் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது ஆனால் அப்படிப்பட்ட இந்த வழக்கில் இரட்டை மன்னிப்பாக தூக்கு தண்டனை குறைப்பு, ஆயுள் தண்டனை குறைப்பு, என இறுதியாக பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
▪மேற்கு வங்கத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட நக்சலைட்டுகளுக்கு பொது மன்னிப்பு அளித்து அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு அவர்களை முன் விடுதலை செய்தது.
இப்படி நிறைய ஆதாரங்களை அடுக்க முடியும்.
பாராபட்சம் காட்டுவது நியாயமா?
இதில் தூக்கு தண்டனை ஏதும் பெறாத; ஆயுள் தண்டனையை மட்டுமே பெற்ற சிறைவாசிகள் பலர் சமூக பாகுபாடு அடிப்படையில் புறக்கணிக்கப்படுவது நியாயமா? என்ற கேள்வி வலுக்கிறது.
எனவே தான் சாதி, மத, வழக்கின் அடிப்படையில் இவ்விஷயத்தில் பாராபட்சம் காட்டக் கூடாது என்கிறோம்.
இப்போராட்ட கோரிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர், சாதிக் கலவர வழக்குகளில் சிக்கி வாடும் பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஏராளமான சிறைவாசிகள், சமூக வழக்கு தொடர்புடைய 38 முஸ்லிம் சிறைவாசிகள், சங்பரிவார ஆதரவு சிறைவாசிகள் 4 பேர் என அனைவரும் அடங்குவர்.
மனித உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை என்பதே நமது நிலைபாடாகும்.
வெடிமருந்து தொடர்புடைய வழக்குகளில் முன் விடுதலை குறித்த அரசாணைகள்.
அண்ணாவின் 101 ஆவது பிறந்த நாளில் அரசாணை எண் 1762/87ன் படி IPC471ன் கீழ் வெடிகுண்டு தொடர்பில் தண்டிக்கப்பட்ட வர்களுக்கு (அரசாணை எண் 792/14.9.2009) சிறப்பு உத்தரவு மூலம் முன் விடுதலை அளிக்கப்பட்டிருக்கிறது.
சிறை சீர்திருத்த கமிட்டியின் பரிந்துரைபடி அரசாணை எண் 1762/ 20.7.1987ன் படி 14 ஆண்டு முன் விடுதலைக்கு தகுதியற்றவர்கள் கூட 20 ஆண்டு தண்டனை காலத்தை நிறைவு செய்திருந்தால் அனைத்து வழக்குகளில் இருந்தும் முன் விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசுக்கு வழிகாட்டி இருக்கிறது. (கடிதம் CMS) எண் 1386/10.11.1994)
இதில் மாநில அரசுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
தமிழக அரசு மனிதாபிமானத்தை பாதுகாக்கும் வகையிலும், நீதியை நிலைநாட்டும் வகையிலும், மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் இவ் விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
14 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் சிறைவாசிகளை சட்டப்பிரிவு எண் 161-ன் கீழ் விடுதலை செய்யும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது.
அதைப் பயன்படுத்தி சாதி, மத, வழக்கு, பேதமின்றி , 14 ஆண்டுகளை கடந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள சிறைவாசிகளை, பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இதை முன்னெடுத்து வலிமைப்படுத்தும் நோக்கில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்; ஜனநாயக ரீதியாக; கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில்; முதல் கட்டமாக கோவை சிறைச்சாலையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளோம்!
இது குரலற்ற மக்களின் குரலை வெளிப்படுத்தும் ஒரு ஜனநாயக நடவடிக்கை !
மனித நேயம், சமூக நீதி, மனித உரிமைகள் ஆகியவற்றில் நம்பிக்கையும் , ஆர்வமும் உள்ள அனைவரையும்…
அமைதி வழியில் நடைபெறும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் அணி அணியாக குடும்பத்துடன் பங்கேற்க வருமாறு அழைக்கிறோம்.
………………
இவண்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
தலைமையகம்
…………………….
எண், 5/2 லிங்கி செட்டி தெரு, சென்னை 1
தொலைபேசி : 044-25211551,
04449514500
மின்னஞ்சல் : mjkpartyinfo@gmail.com
வலைதளம் : www.mjkparty.com