ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடகங்களின் சுதந்திரத்திற்கு தமிழகத்தில் மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
NEWS 18 தொலைக்காட்சியில் பணியாற்றும் பலர் ஃபாஸிஸ சக்திகளின் நெருக்கடிகளுக்கு பலியாகியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
இன்னும் சில ஊடகங்களில் பணியாற்றும் தமிழ் உணர்வு கொண்ட நிர்வாகிகளும், செய்தியாளர்களும் இதே போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவர்கள் தகுதி குறைப்பு அல்லது பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ,
அந்த இடங்களில் சமூக நீதி சிந்தனைகளுக்கு எதிரானவர்களை பணியில் அமர்த்த சதி நடப்பதாகவும் கூறப்படுகிறது
வட இந்தியாவில் ஊடகங்களை கைப்பற்றியது போல தமிழகத்திலும் அவ்வாறு செய்திட ஃபாஸிஸ்டுகள் முயல்வது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, நம் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல.
சுதந்திரம், ஜனநாயகம், நீதி , உண்மை ஆகியவைதான் ஊடகவியலர்களின் முகவரிகளாகும்.
இதை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் , கொல்லைப்புறம் வழியாக ஊடகங்களை கைப்பற்றி, தங்கள் சித்தாந்தங்களை புகுத்த துடிக்கிறார்கள்.
இவர்களின் வஞ்சக சதிகளுக்கு தமிழக மக்கள் ஒரு காலத்திலும் உடன்பட மாட்டார்கள் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூக நீதி கண்ணோட்டத்தோடும், மனித உரிமை பற்றிய அக்கறையோடும் செயல்படும் ஊடகவியளர்களை பாதுகாப்பது தமிழக மக்களின் கடமையாகும்.
இவ்விஷயத்தில் ஜனநாயக சக்திகளோடு இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சி, பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
20.07.2020