வாருங்கள் வாகைச்சூடுவோம்! வருங்காலத்தை வசமாக்குவோம்! மஜக சொந்தங்களுக்கு பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடிதம்!


பாசத்திற்கினிய மனிதநேய ஜனநாயக கட்சியின் சொந்தங்களே..

ஏக இறைவனின் அமைதியும், ஆசியும், சூழ்க!

பரபரப்பான அரசியல் சூழலில் இம்மடலை வரைகிறேன்.

மஜக தொடங்கப்பட்டு ஆறாம் ஆண்டில் ஒரு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டது
நாம் எதிர்பாராத ஒன்றாகும்!

நெருக்கடிகள் நமக்கு புதிதல்லவே.. நெருக்கடிகளில்தானே நமது வாழ்க்கை நகர்கிறது,!அதைக் கடந்துதானே நாம் வெற்றிகளைப் பெறுகிறோம்.

சொந்தங்களே..

இந்த நெருக்கடிகளை எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் நமது ஆற்றல் அடங்கி இருக்கிறது. அதை துணிச்சலோடு எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

சொந்தங்களே…

நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சி போட்டியிட முடியாத சூழல் உருவானதும், கடந்த 5 ஆண்டுகாலமாக சட்டமன்ற உறுப்பினராக நாம் பணியாற்றிய நாகை தொகுதியில் மீண்டும் களமிறங்காததும் நமது சொந்தங்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

அரசியல் என்பது நிகழ்வுகளின் விளையாட்டாகும். அதில் வெற்றி – தோல்வி, சூது – சூழ்ச்சி, நம்பிக்கை – ஏமாற்றம், துரோகம் எல்லாம் இருக்கும்.

அவற்றை கடந்து ; சவால்களை எதிர் கொண்டு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதில்தான் நமது வெற்றிகள் உருவாகிறது என்பதை நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

சொந்தங்களே..

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே கொள்கை அடிப்படையில் முடிவெடுத்து நாம் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினோம்.

திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளித்தோம்.

அதன் பிறகு காஷ்மீர் விவகாரம் குறித்து திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்திலும், குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அவர்கள் சென்னையில் நடத்திய பேரணியிலும், சமீபத்தில் டெல்லி விவசாயிகளுக்காக நடத்திய உண்ணாவிரத போராட்டத்திலும் பங்கேற்றோம்.

இந்நிலையில்தான் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பிப்ரவரி 26-ஆம் தேதி கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் அதிகாரபூர்வமான கடிதத்தை திமுக தலைமைக்கு அளித்தோம்.

அவர்கள் அது குறித்து காட்டிய மௌனத்தின் காரணமாகவே செயற்குழுவை கூட்டி ஆலோசித்தோம். இறுதி முடிவை தலைமை நிர்வாகக்குழு எடுக்க அதில் அதிகாரம் அளிக்கப்பட்டது.

◼️தனித்து போட்டியிடுவதா?

◼️மூன்றாவது அணியில் இணைந்து போட்டியிடுவதா?

◼️திமுக தலைமையிலான அணிக்கே ஆதரவளிப்பதா?

என்ற மூன்று கேள்விகளுடன் நாங்கள் அடுத்தடுத்து ஆலோசித்தோம்.

கட்சி நலனா? மக்கள் நலனா? என்ற உச்ச கட்ட ஆய்வுகளின் போது மக்கள் நலனே உயர்வானது என முடிவெடுத்தோம்.

இந்த நாட்டை ஃபாஸிச சக்திகள் தங்கள் அதிகார பலத்தை கொண்டு களவாட முயல்வதை நாம் கவலையோடு அணுகினோம்.

தீய சக்திகள், நமது தமிழ் நிலத்தில் ஒரு திராவிட கட்சியை பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும்போது, நாட்டையும், மக்களையும் தூர நோக்கோடு காப்பாற்ற வேண்டிய ஜனநாயக கடமை நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து ஆய்வு செய்தோம்.

எனவேதான் அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்திட; வலிமை மிக்க மாற்று அணிக்கு ஆதரவு அளிப்பது என்றும் எந்த வகையிலும் வாக்குகளை பிரித்து விடக்கூடாது என்றும் விரிவாக ஆலோசித்தோம்.

நமது கட்சிக்கு போட்டியிடும் வாய்ப்புகளை திமுக தலைமை மறுத்த நிலையிலும், இருக்கும் ஒரு MLA பதவியை இழக்கிறோம் என்று நன்றாக தெரிந்திருந்தும், தமிழகத்தின் நலனுக்காக நாம் திமுக கூட்டணியை ஆதரிப்பது என்ற உறுதியான முடிவை எடுத்தோம்.

சொந்தங்களே…

நாம் எடுத்தது துணிச்சல் மிகு கொள்கை முடிவாகும்.

இது வரலாறு பாராட்டும் முடிவு,…எவரும் விமர்சித்து விட முடியாத தியாகப் பூர்வமான முடிவு….

கனத்த இதயத்துடன் சுயநல சிந்தனையின்றி எடுக்கப்பட்ட முடிவு…

அதனால்தான் வலைத்தளங்கள் அதிர அனைவராலும் நாம் வரவேற்கப்படுகிறோம்,
அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறோம்.

சொந்தங்களே..

வெறும் ஆதரவோடு நில்லாமல் மக்கள் நலம் நாடும் 5 அம்ச கோரிக்கைகளோடு நாம் திமுக தலைமையை அணுகியதுதான் பெரும் ஆச்சரியத்தை அரசியல் தளத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

*10 ஆண்டுகள் நிறைவு செய்த சிறைவாசிகளை சாதி, மத, வழக்குகள் பேதம் இன்றி விடுதலை செய்ய வேண்டும்.

*பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.

*நீதியரசர் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்.

*சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகத்திற்கும் விகிதாச்சார இட ஒதுக்கீடு வழங்கிடவும், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்திடவும் வேண்டும்.

*குடியுரிமை சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேற்கண்ட மக்கள் நலன் சார்ந்த கொள்கை கோரிக்கைகளை திமுக தலைமையிடம் கொடுத்து, தொகுதிகள் கொடுக்காத வருத்தத்தையும் தெரிவித்துவிட்டு, அதேசமயம் நாட்டு நலன் கருதி நமது ஆதரவையும் வழங்கி விட்டு வந்திருக்கிறோம்!

சொந்தங்களே!

உங்கள் உணர்வுகள் புரிகிறது. உங்கள் கண்களில் தேங்கும் கண்ணீரும் தெரிகிறது! உறக்கமின்றி கவலைப்படுவதையும் அறியமுடிகிறது!

கவலைப்படாதீர்கள்.

தியாகங்கள்தான் வரலாறாகும்! மக்கள் நலனுக்காக நாம் பதவியை தியாகம் செய்யும் போது, அவர்களது வாழ்த்துகள், பிரார்த்தனைகள் நமக்கு வலிமை சேர்க்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நாம் நினைத்திருந்தால் பதவிக்காக அதிமுக கூட்டணியில் கூட நீடித்திருக்க முடியும். ஆனால் மனசாட்சியை படுகொலை செய்துவிட்டு பதவிகளை பெறுவது அறம் சார்ந்த அரசியலாகாது. எனவே, பதவிகளை விட கொள்கைகள் முக்கியம் என்றோம்.

சொந்தங்களே..

வரலாற்றுப் புகழ்மிக்க “ஹுதைபியா அரசியல் உடன்படிக்கையை” தயவுசெய்து வாசித்துப்பாருங்கள்.

நமக்கு பாதகமான விஷயங்கள் இருப்பினும் இதயப்பூர்வமான நேர்மையுடன் அவற்றை எதிர் கொண்டால்; மாபெரும் எதிர்கால வெற்றிகள் நமக்காக காத்திருக்கும் என்பதை அந்த அந்த வரலாற்று செய்தியின் மூலம் அறிய முடியும்.

சொந்தங்களே…

ஒரு விவசாயி ஒரு முறை நிலத்தில் பயிரிடாமல் போவதாலேயே அந்த நிலம் மலடாகி விடுவதில்லை, அடுத்த பருவ காலத்திற்காக அந்த விவசாயி காத்திருப்பார், அதுபோலவே நமது அடுத்த சுற்றிற்காகக் காத்திருப்போம்!

விரைவில் இலையுதிர் காலம் போய் வசந்த காலம் வரும்!

நமது உறவுகள் என்பது சீசனுக்கு வந்து போகும் பறவைகள் போன்றது அல்ல!

ஒன்றையொன்று பிரியாத அன்றில் பறவைகள் போன்று!

சொந்தங்களே..

இக்கடிதத்திற்கு முன்பாகவே எமது மனமறிந்து நீங்கள் தேர்தல் களத்திற்கு புறப்பட்டு விட்டதை பார்க்கும் போது மஜக படை என்பது களங்கமில்லாத தாய் பாலுக்கு சமமானது,

அது நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பகையை பந்தாடும் ஆற்றல் கொண்டது. எனவே உங்களின் எழுச்சி கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

ஓய்வின்றி ஜனநாயக களத்தில் பணியாற்றி; திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்குகளை சேகரித்து , ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம்!

வாருங்கள்… வாகை சூடுவோம்! வருங்காலத்தை வசமாக்குவோம்!

அன்புடன்..

உங்கள் சகோதரன்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
16.03.2021