ஜனநாயகத்தை பாதுகாத்திட உறுதியேற்போம்..! மஜக ஆறாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு பொதுச்செயலாளர் மு தமிமுன்அன்சாரி MLA அறிக்கை!


மனிதநேய ஜனநாயக கட்சியின் வரலாற்று பயணத்தில் மற்றுமொறு எழுச்சிமிகு நாளை அடைந்திருக்கிறோம்.

ஆம். இன்று ஆறாம் ஆண்டில் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். இப்போதுதான் புறப்பட்டது போல இருக்கிறது. ஆனால், அதிவேகமாக அதே சமயத்தில் நிதானம் இழக்காமல் முன்னேறியிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கிறபோது நம் உள்ளங்கள் உணர்ச்சி வசப்படுகின்றன.

இறையருளால்; அனைவரின் அன்பையும், ஆதரவையும் பெற்று வளர்ந்திருக்கிறோம்.

நமது வளர்ச்சிக்கு எல்லா நிலையிலும் துணை நின்றவர்களை இத்தருணத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.

விடிகாலை சூரியனின் எழுச்சியையும், நிலா கால இரவுகளின் மகிழ்ச்சியையும், கொந்தளிப்பான எரிமலை நிகழ்ச்சிளையும் ஒரு சேர சந்தித்திருக்கிறோம்.

சந்தன சுள்ளிகளை சேகரிப்பது போல கொள்கை பலமிக்க தொண்டர்களை உருவாக்கி; பேரலையை எதிர்கொள்ளும் பேராற்றலை கற்பித்து; நம்பிக்கை இழக்காமல்; கண்ணியமாக அரசியலை எதிர் கொண்டிருக்கிறோம்.

காயங்களையும்; கண்ணீரையும் உழைப்போடு விதைத்து; அவற்றை வெற்றிகளாக அறுவடை செய்திருக்கிறோம்.

அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் பிரதிபலிக்கும் வகையில் சமரசமற்ற முறையில் சமூக நீதிக்காக அரும்பாடுபட்டிருக்கிறோம்.

உணர்ச்சிகளை தூண்டிடும் பொறுப்பற்ற போக்குகளை எதிர்த்து; அறிவை புகட்டிடும் அரசியலை வளர்த்து வருகிறோம்.

நாகரீகமான அணுகுமுறைகள், ஜனநாயகத்தை மதித்திடும் கொள்கைகள் நமது முகவரிகளாக இருக்கின்றன.

புதிய பாதை; புதிய பயணம் என புறப்பட்ட நமது வரலாறு இறையருளால் வெற்றி நடை போட தொடர்ந்து உழைப்போம்.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்திடும் கடமையை தொடர்ந்து முன்னெடுப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.

பகைக்கு அஞ்சிடாத போர்குணம், பாசத்திற்கு கட்டுப்படும் பண்பு, உறவுக்கு முக்கியத்துவம் தரும் கொள்கை ஆகியவற்றோடு அன்றாடம் களமாடும் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருடனும் ஆறாம் ஆண்டு தொடக்க விழா வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறோம்.

நமது முயற்சி மக்கள் மனங்களை வெல்வது மட்டுமல்ல; மக்கள் மனங்களை மாற்றுவதும் என்பதை கருதி தொடர்ந்து களமாடுவோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.

28.02.2021