தோப்புத்துறையில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்திய அமைப்பு MSF… மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு…


நாகை.டிச 26,

தோப்புத்துறையில் கல்வி பணியில் ஈடுபட்டு வரும் உள்ளூர் சேவை அமைப்பான முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) தனது 30-ஆம் ஆண்டு விழாவை சீரத்துன் நபி விழாவாக காணொளியில் நடத்தியுள்ளது.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, பிரபல அறிஞர் டாக்டர் K.V.S. ஹபீப் முகம்மது ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

டாக்டர் KVS ஹபீப் முகம்மது அவர்கள் பேசும் போது, கல்வி, வேலை வாய்ப்பு, மரம் நடுதல், நல்லொழுக்கம் என இந்த அமைப்பின் பணிகளை பாராட்டினார். பன்முக சமூகத்தில் நமது பங்களிப்பு என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை மிக ஆக்கப்பூர்வமாக இருந்தது.

இந்த வட்டார அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், மஜகவின் பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும் போது, MSF அமைப்பு தோப்புத்துறையில் கல்வி விழிப்புணர்வு பணியில் அயராது உழைத்ததால் இன்று வீடு தோறும் ஆண்கள், பெண்கள் என பட்டதாரிகள் நிறைந்துள்ளனர் என்றும் அதன் விளைவாக ஒரு பொருளாதார ஏற்றமும் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

அவர் MSF அமைப்பு சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு ஆற்றிய பணிகளையும், இதன் நிகழ்வுகளில் பங்கேற்ற ஐயா. நல்லக்கண்ணு, கவிக்கோ அப்துல் ரஹ்மான், பெரியார் தாசன் உள்ளிட்ட பல தலைவர்களின் வருகையையும் நினைவு கூர்ந்தார்.

30 ஆண்டு நிறைவு என்பது MSF அமைப்புக்கு மட்டுமல்ல, இதன் நிறுவனர்களில் ஒருவரான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் பொது வாழ்வுக்கும் இது 30 ஆம் ஆண்டு என நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இதன் முன்னால் நிர்வாகி ஹக்கீம் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உலகெங்கும் வாழும் தோப்புத்துறைவாசிகளும், மற்றவர்களும் பங்கேற்றனர்.

கவிஞர் தேரிழந்தூர் தாஜ்தீன் அவர்கள் நாகூர் அனிபாவின் புகழ் பெற்ற இரு பாடல்களை பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

MSF அமைப்பு வருங்காலத்தில் இப்பகுதியிலிருந்து IAS, IPS போன்ற உயர் பொறுப்புகளுக்கும், அரசு பணிகளுக்கும் மாணவ, மாணவிகளை தயார்படுத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் MSF அமைப்பின் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், சான்றோர்கள் என பலரும் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
25-12-2020